பருவதமலை ஆன்மீக குழு

பருவதமலை ஆன்மீக குழு காசியாத்திரை

03/05/2025

இது ஒரு உண்மை சம்பவம் நடந்த இடம் ( ஜார்கண்ட் )ஹிந்தி பதிவின் தமிழாக்கம்...

இதை நான் படிக்கும்போதே கண்ணீர் வழிந்தோடியது.
தொடர்ந்து படியுங்கள். . .

ஓர் அனைத்துலகப் பள்ளியில், அனலையும் தூசியையும் பொருட்படுத்தாமல், பூங்காவிலுள்ள செடிகளுக்கு, நீர் ஊற்றிக்கொண்டிருந்தார் தோட்டக்காரர் ஒருவர்.

" கங்கா தாஸ், தலைமையாசிரியை உன்னை உடனே வரச்சொன்னார்" . . .
அந்த அலுவலகப் பையனின் அந்தக் கடைசி இரு சொற்களின் தொனி அழைப்பின் அவசரத்தைச் சுட்டிக் காட்டியது.

உடனே தன் கை கால்களை அலம்பிக்கொண்டு, .. அறையை நோக்கி விரைந்தார்.

அன்று என்னவோ பூந்தோட்டத்திலிருந்து அலுவலதத்திற்குச் செல்வது நெடுந்தூர நடையாய்த் தோன்றியது. அவரது இதயம், நெஞ்சாங் கூட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து விழுவது போன்ற ஓர் உணர்வு.

அவர் மனத்தில் பலவாறான எண்ணங்கள் அலைமோதின. ஏன், என்ன நடந்திருக்கும்? இத்துணை அவசரமாக எதற்குக் கூப்பிட்டிருப்பார் என்ற கேள்விக் கணைகள். . .

அவர் நேர்மையான தொழிலாளியாவார். எத்தருணத்திலும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை. . .

அறைக் கதவைத் தட்டினார். . .

"என்ன கூப்பிட்டீங்களா மேடம்?"
"உள்ளே வா . . ." என்ற அந்த அதிகாரக் குரல் அவரது படபடப்பை மேலும் அதிகரித்தது. . .
பாதி நரை விழுந்த மயிர், சீராய் சீவி முடிச்சுப் போடப்பட்ட தலை, நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட சாரியைப் பாரம்பரியமான வழக்கில் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி பேருக்கேற்ப அவர் மூக்கின்மேல் அமர்ந்துகொண்டிருந்தது.

மேசை மேலிருந்த தாளைச் சுட்டிக்காட்டி, "இதைப் படி". . . என்றார்.

"ஆனால், மெ..மெ மேடம் எனக்குப் படிப்பறிவு இல்லிங்க மேடம்.
எனக்கு இங்கிலிஷ் கூட படிக்க வராது."
மேடம் நான் தவறேதும் செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். . .எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். . .

என் மகள் இந்தப் பள்ளியில் இலவசமாகப் படிக்க வாய்ப்பு தந்தீங்க. அதற்காக நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவனாவேன். . .என் மகளுக்கு இப்படியொரு வாய்ப்பினை நான் கனவில்கூட காண முடியாது."
இப்படிக் கூறிக்கொண்டே அவர் தேம்பினார். நடுக்கமும் அவரை ஆட்கொண்டது.

" போதும் நிறுத்து. நீ ரொம்பதான் கற்பனை செய்கிறாய். நான் ஆசிரியர் ஒருவரைக் கூப்பிடுகிறேன். அவர் இதை உனக்கு, வாசித்து மொழிப்பெயர்த்துக் கூறுவார். . . இது உன் மகள் எழுதியது. இதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்."

விரைவிலேயே அங்கு வந்த ஆசிரியை ஒருவர் அதனை வாசித்து ஹிந்தியில் ஒவ்வொரு வரியாக மொழிப்பெயர்த்துக் கூறினார்.

"இன்று அன்னையர் தினம் தொடர்பாய் மாணவர்களைக் கட்டுரை எழுதச் சொன்னோம். இதுதான் அக்கட்டுரைகளில் ஒன்று.

"நான் பீஹாரிலுள்ள ஒரு கிராமத்தைத் சேர்ந்தவள். அந்தக் கிராமத்தில் மருத்துவ வசதியோ கல்வியோ இல்லை. அதைக் கனவில்கூட காண முடியாது.
பிரவசத்தின்போது பல பெண்கள் மரணித்துள்ளனர். என் தாயாரும் அவர்களுள் ஒருவர். என்னை அவர் கைகளில் ஏந்தும் பாக்கியத்தைக்கூடப் பெறவில்லை. என்னை முதன்மதலில் தன் கைகளில் ஏந்தியவர் என் அப்பாதான். . .சொல்லப்போனால் அவர் ஒருவர் மட்டும்தான்.

நான் ஒரு பெண்ணாகப் பிறந்து விட்டேன். பிறக்கும்போதே என் தாயாரை விழுங்கிவிட்டேன் என்று உறவினர் குறைபட்டுக்கொண்டனர். அதனால், எல்லோரும் கவலையடைந்தனர். உடனே மறுமணம் செய்துகொள்ளும்படி என் தந்தையை வற்புறுத்தினர். ஆனால், என் அப்பா அதை மறுத்துவிட்டார்.

என் தாத்தாவும் பாட்டியும் அவரைச் சம்மதிக்க வைக்க எல்லாவித யுத்திகளையும் கையாண்டனர். அறிவுப்பூர்வமான வாதங்களையும் முன் வைத்தனர்.

என் தாத்தா பாட்டிக்கு ஒரு பேரன் வேண்டுமாம். ஆகவே, அவரை மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தினர். அப்படி அவர் இணங்காவிட்டால் அவரைத் தள்ளி வைத்துவிடுவதாகவும் அச்சுறுத்தினர்.

என் அப்பா சற்றும் தயங்காமல் நிலம், நல்ல வாழ்க்கை, சொகுசான வீடு, கால்நடைகள் மற்றும் அக்கிராமத்தில் கௌரவமான வாழ்க்கை வாழ அவருக்கு இருந்த அனைத்து சலுகைகளையும் துறந்தார்.

கையில் சல்லிக் காசுகூட இல்லாமல் - ஆனால் என்னை மட்டுமே கையில் ஏந்தியவாறு, இந்த மாநகரில் குடியேறினார். வாழ்க்கை மிகவும் சிரமமானதாகவே இருந்தது. அப்பா இரவும் பகலும் கடுமையாக உழைத்து என்னைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணி வளர்த்தார்.

நான் விரும்பிச் சாப்பிட்ட உணவுப் பண்டங்களைத் திடீரென தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வார். அதன் காரணம் எனக்கு அப்பொழுது புரியவில்லை . . . தட்டில் இருக்கும் அந்த ஒரு துண்டை நான் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு நடந்துள்ளார் என்பதை நான் பெரியவளாக வளர்ந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்.

அவர் சக்திக்கு மீறிய ஒரு வசதியை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.

இப்பள்ளி அவருக்குப் புகலிடமளித்து சிறப்பு செய்துள்ளது. இப்பள்ளி இன்னொரு மாபெரும் பரிசையும் தந்துள்ளது. ஆம், நான் இப்பள்ளியிலேயே சேர்ந்து பயில வழங்கியுள்ள வாய்ப்புதான் அது.

அம்மா என்றால் அன்பும் அரவணைப்பும் எனின், என் அப்பா அதற்குப் பொருத்தமானவர். . .
அம்மா என்பவர் இரக்கமிக்கவர் எனின், என் அப்பா அதற்கும் பொருத்தமானவரே. . .
அம்மா என்பவர் தியாகி எனின், நிச்சயமாக என் அப்பா அதையும் ஆக்ரமிக்கின்றார். . .

சுருங்கக்கூறின், தாய் ஒருவரின் வடிவம் அன்பு, பராமரிப்பு, தியாகம், இரக்கம் எனின்

“ என் அப்பாதான் இவ்வுலகிலேயே மிகச் சிறந்த தாய் “

அன்னையர் தினத்தில் இம்மண்ணில் மிகச் சிறந்த பெற்றோராக இருக்கும் என் அப்பாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். . .
இப்பள்ளியில் கடின உழைப்பாளியாகத் திகழும் தோட்டக்காரருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்து அவர்தான் என் அப்பா என்பதைப் பெருமையோடு அறிவிக்க விரும்புகிறேன்.

இதை வாசிக்கும் என் ஆசிரியை எனக்கு நல்ல புள்ளிகள் தரமாட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆயினும் தன்னலமற்ற அப்பாவுக்கு ஒருவர் வழங்கும் ஒரு சிறிய அன்பளிப்பாக இக்கட்டுரை இருக்குமென நம்புகிறேன்.

அந்த அறை நிசப்தமானது. . .

கங்கா தாஸ் தேம்பி அழுவது மட்டுமே கேட்டது. . .

கடும் வெயில்கூட அவரின் ஆடையை வியர்வையால் ஈரப்படுத்தாது இருந்திருக்கலாம். ஆனால், தன் மகளின் சொற்கள் அவர் உள்ளத்தையே ஈரப்படுத்தியது. . .
அவர் கைகட்டி, வாயடைத்து அங்கு நின்றுகொண்டிருந்தார். . .

ஆசிரியையிடமிருந்து அந்தத் தாளை வாங்கி தன் நெஞ்சின்மேல் வைத்து கண்கலங்கினார். . .

தலைமையாசிரியைத் தன் இருக்கையிலிருந்து எழுந்தார். . . கங்கா தாஸை அமரச்சொன்னார். அவர் பருக ஒரு கோப்பை நீர் வழங்கி அவரிடம் ஏதோ சொன்னார். அவர் குரலில் ஒரு கனிவு வெளிப்பட்டது.

கங்கா தாஸ் உன் மகளின் இக்கட்டுரைக்காக 10/10 புள்ளிகள் வழங்கியுள்ளோம். இப்பள்ளி வரலாற்றிலேயே அன்னையர் தினம் தொடர்பில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை இதுதான். நாளைக்கு இப்பள்ளியின் அன்னையர் தின விழா
வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படவிருக்கிறது.

இப்பள்ளியின் ஒட்டுமொத்த நிர்வாகஸ்தரும் உன்னையே சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவுசெய்துள்ளனர்.

பிள்ளையை வளர்த்தெடுப்பதில் ஆண் ஒருவன் காட்டும் அன்பு, அர்ப்பணிப்பினை கௌரவிக்கவும் ஒரு சிறந்த பெற்றோராகத் திகழ பெண் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதல்ல என்ற உண்மையை உலகறியச் செய்யவும் நாங்கள் இம்முடிவைச் செய்துள்ளோம்.

அதற்கும் மேலாக, உன் மகள் உன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை மறு உறுதிப்படுத்துவதுடன் போற்றி அங்கீகரிக்கவும் உன் மகளுக்குப் பெருமை சேர்க்கவும் உன் மகள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல், இவ்வுலகிலேயே தலைசிறந்த பெற்றோரை இப்பள்ளி பெற்றிருப்பதற்காக இப்பள்ளியிலுள்ள அனைவரும் பெருமைகொள்ளவும் இம்முடிவைச் செய்துள்ளோம். . . .

"நீ பூங்காவை மட்டும் பராமரிக்கவில்லை. மாறாக உன் வாழ்வின் விலை உயர்ந்த மலரை அழகிய முறையில் பேணி வளர்த்துள்ளாய். நீதான் உண்மையான தோட்டக்காரன்."

கங்கா தாஸ், அந்த நிகழ்ச்சிக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து மரியாதை செய்தார்...

காசியாத்திரை2023
16/04/2024

காசியாத்திரை2023

நமது பருவதமலை ஆன்மீக குழு சார்பாக இன்று நடைபெற்ற அன்னதானம்...
26/03/2024

நமது பருவதமலை ஆன்மீக குழு சார்பாக இன்று நடைபெற்ற அன்னதானம்...

*A.சுப்ரமணி**பருவதமலை ஆன்மிக குழு**9003161140*36ஆண்டுகளுக்கு முன்....இதே தினம், பிப்ரவரி 12 (1984) அன்று நம் சென்னிமலையி...
12/02/2024

*A.சுப்ரமணி*
*பருவதமலை ஆன்மிக குழு*
*9003161140*

36ஆண்டுகளுக்கு முன்....இதே தினம், பிப்ரவரி 12 (1984) அன்று நம் சென்னிமலையில் நிகழ்ந்த அதிசயம் !! லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிக்க, இரட்டை மாட்டு வண்டி நம் சென்னிமலையின் 1320படிக்கட்டுக்கள் வழியாக மலை உச்சியை அடைந்த நிகழ்வு..

· 12.2.84 . கிழக்கே வெளுத்தது !. சென்னிமலை, சென்னிமளையைச் சுற்றியுள்ள ஊர்கள், மற்றும் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் மக்கள் சென்னிமலை மலைஅடிவாரத்தில் – மலை உச்சி வரையில் உள்ள படிக்கட்டுக்களின் இரு பக்கங்களிலும் நின்றும் அமர்ந்தும், மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டும் கிளைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டும் தங்களுக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஆயத்தமாயினர்.

· 12,2,1984 அன்று காலை சரியாக 7:30மணி. அலங்காரம் செய்யப்ட்ட இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரண்டு காளை மாடுகளும் கம்பீரமாக தயாராக இருக்க,அப்பொழுதுதான் வண்டியை யார் ஓட்டுவார் என்று அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி பச்சை வேட்டி மஞ்சள் துண்டு அணிந்து, வண்டியை ஓட்ட, வண்டியில் அமர்ந்தவர் 60வயதான பெருந்துறை சிவன்மலைக் கவுண்டர்..

· சிவன்மலைக் கவுண்டர் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், காளைமாடுகள் இரண்டும் கம்பீரமாகப் படிக்கட்டுக்களில் ஏற ஆரம்பித்து விட்டன.

· காளை மாடுகள் ஒவ்வொரு படியையும் மிதித்து மேலேறும் போது, மலையே அரகரா என்று முழக்கமிட்டதைப் போல அடிவாரம் முதல் மலை உச்சி வரை இருந்த பக்தர்களின் அரகர முழக்கங்கள் அதிர்ந்து எதிரொலித்தன.

· லட்சக்கணக்கான மக்கள் சுற்றிலும் இருந்து அரகரா முழக்கங்களை எழுப்பியபோதும், வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் இரண்டும் மக்கள் கூட்டத்தைக்க் கண்டும், கோஷங்களைக் கேட்டும் சிறிதும் மிரளவில்லை. இராணுவ வீரர்களைப் போல் ஒருவிதமான மிடுக்கோடு மலைப்படிகளில் ஏறின ! சரியாக நாற்பத்தாறு நிமிடங்களில் ஆயிரத்து முன்னூற்று இருபது படிகளையும் கடந்து, மலையுச்சியிலுள்ள முருகன் சந்நிதியில் போய் நின்றன

· மலையுச்சியை வண்டி மாடுகள் அடைந்ததும் லட்சக்கணக்கான மக்களின் அரகரா முழக்கமும் உச்சத்தைத்தொட,வண்டி மாடுகளுடன் சிவன்மலைக் கவுண்டருக்கும் வண்டி மாடுகளுக்கும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

· சென்னிமலை வேலவரே கனவில் வந்து ஆணையிட்டதாகக் கூறி, வண்டி,காளைமாடுகள், சாட்டை போன்றவற்றை பக்தர்கள் வேட்டுவபாளையம் வேளாளத் தம்பிரான் மடத்துச் சின்னப் பூசாரியார் பொன்னுச்சாமி வசம் காணிக்கையாக அளித்தனர்.

· அன்றைய நாளில் சுமார் நான்காயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு காளை மாடுகளை இந்த நிகழ்வுக்குக் காணிக்கையாக கொடுத்தவர் சென்னிமலையை அடுத்த முத்தூர் துரைசாமிக் கவுண்டர்.. காளை மாடுகளைப் பூட்டிச் செல்லும் இரட்டை மாட்டு வண்டியை காணிக்கையாகக் கொடுத்தவர் விராலிக்காட்டூர் கோபால் கவுண்டர். இதுபோலவே சாட்டையையும் இன்னொரு பக்தர் காணிக்கையாக கொடுத்துள்ளார்.

· கனவில் தோன்றிய இறை ஆணையைக் குறிப்பிட்டு, 12.2.84 அன்று காலை சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டுக்களில் இரட்டைமாட்டு வண்டி செல்ல வேண்டும் என்பதற்காக, முன்னதாகவே பெரியார் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாராம் அவர்களிடம் அனுமதி கேட்கப்பட்டபோது, இம்மாதிரியான் நிகழ்வுக்கு முன் மாதிரி இல்லாத சூழ்நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வண்டியை இழுத்துக் கொண்டு மாடுகள் மலைப் படிக்கட்டுக்களில் ஏறிச் செல்லும்போது, கூட்டத்தைக் கண்டு, காளை மாடுகள் மிரண்டு போய், தாறுமாறாக ஓட ஆரம்பித்து விட்டால், பல உயிர்ப்பலிகளைச் சந்திக்க வேண்டுமே என்ற மக்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காக முதலில் அவர் அனுமதி மறுத்திருக்கிறார். “முருகன் அருளால் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காது” என்று பலரும் எடுத்துக்கூறிய போதும் கலெக்டரின் சந்தேகம் நீங்கவில்லை. எனவே,கலெக்டரே சென்னிமலைக்கு வந்து, உச்சிவரை படிக்கட்டுக்களில் ஏறிச்சென்று பார்வையிட்டிருக்கிறார். பிறகே நிகழ்ச்சிக்கு அனுமதியளித்திருக்கிறார்.

· முந்தையநாளான 11.2.1984 அன்று பிற்பகல் சின்னவேட்டுவபாளையத்திலிருந்து சென்னிமலைக்கு விட்டுப் புறப்பட்ட வண்டிக்கு வழி நெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு சென்னிமலை அருள்மிகு கைலாசநாதர் கோவிலிலும்12.2.84 அதிகாலை மலை அடிவாரத்திலும் சிறப்புப் பூசைகள் நடைபெற்றன.

· 1320 படிகளிலும் கம்பீரமாக ஏறிச் சென்ற காளை மாடுகள் பூட்டிய வண்டியைப் பின்தொடர்ந்து சென்ற அதிமுக்கியப்பிரமுகர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ராஜாராமன், துணை ஆட்சியர் சந்திரபிரகாஷ், காவல்துறை கண்காணிப்பாளார் திரு அப்பாத்துரை ஆகியோர்.

* அன்றைய கோவைப் பதிப்பு “மாலை முரசு” “சென்னிமலையில் இன்று நடந்த அதிசய நிகழ்ச்சி ..ஆறு லட்சம் பேர் பக்தர்கள் திரண்டு பார்த்தனர்” என்று முதல் பக்கக் கொட்டை எழுத்துத் தலைப்புச் செய்தியாக, சென்னிமலையில் மாட்டு வண்டி மலையேறிய செய்தியை வெளியிட்டது. இவ்வபூர்வ நிகழ்ச்சியை “ஹிந்து” ”இந்தியன் எக்ஸ்பிரஸ்” முதலிய ஆங்கிலத் தினசரிகளும், “தினமணி” ”தினத்தந்தி” “மாலைமுரசு” முதலிய தமிழ்தினசரிகளும், “இதயம் பேசுகிறது” ”தேவி” முதலிய தமிழ் வார இதழ்களும் சிறப்புச்செய்திகளாக வெளியிட்டன. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தி நிறுவனமும் இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட்டதனால், தேசிய அளவிலும் சென்னிமலையில் “இரட்டைமாட்டு வண்டி மலைப்படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்றது !

· 12.2.1984 அன்று காலையிலேயே வண்டி மாடுகள் மலையேறப் போகிறது என்பதால்11.2.84 அன்று இரவிலிருந்தே பல ஊர்களில் இருந்து மக்கள் கூட்டம் சென்னிமலையில் பரவசத்தோடு எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது. பெண்கள், பிள்ளைகள் என்று ஒவ்வொருவரும் ஓர் இரவு முழுவதையும் ஒரு பரவசத்தை எதிர்நோக்கி மலைப்படிகளிலும் ஊரின் பல பகுதிகளிலும் அமைதியாக விழித்துக் காத்திருந்தார்கள்.

சென்னிமலைக்கு வரும் எல்லா வழித்தடங்களிலும் பேருந்துகள் வாகனங்கள் சில கிலோ மீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டன.
*மிகக்குறுகிய நேரத்தில் பல லட்சம் பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சிக்குக் காவல் துறை சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது.

** பரப்பளவில் சிற்றூராக உள்ள நம் சென்னிமலையில், “மலையா -மக்கள் தலையா” என்று அதிசயக்கும் வண்ணம் ஒரே சமயத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டபோதும், எந்தவித அசம்பாவித நிகழ்வுகளும் இல்லாமல், 1320 மலைப் படிக்கட்டுக்கள் இரட்டை மாட்டு வண்டி ஏறிச் சென்ற அதிஅற்புத - அதிசய நிகழ்ச்சியை. நிகழ்வு நடைபெற்று 35 ஆண்டுகள் கழித்து, அதே தினத்தில் இன்று 12.2.2019 யான “மலரும் நினைவுகளாக”மீண்டும் நினைவு கூர்வதிலும் – செய்தியைப் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளப் பகிர்ந்து கொள்வதிலும் மிகுந்த மகிழ்ச்சி..
* சென்னிமலைக்கு**
வாரீர் முருகன் அருள் பெற்றுச் செல்வீர்🙏🏾🌷🌷

*A.சுப்ரமணி*
*பருவதமலை ஆன்மிக குழு*
*9003161140*

10/02/2024

மதுபோதையில் வந்த இசைக்கலைஞர்!.. இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் சேர்ந்தது இப்படித்தான்!..

ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே வித்தியாசமான இசையால் ரசிகர்களை கவர்ந்தார். ரஹ்மான் கொடுத்த ஒலிகள் இசை ரசிகர்களுக்கு புதிதாகவும், புதிய அனுபவத்தையும் கொடுத்தது. அவருக்கு ரசிகர்களும் உருவானர்கள்.

ரஹ்மான் கொடுத்த வெஸ்டர்ன் இளசுகளை ஆட்டம் போட வைத்தது. சிக்கு புக்கு சிக்கு ரயிலேவும், ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி ஆகிய பாடல்கள் இளைஞர்களின் தேசிய கீதமாக மாறியது. ரஹ்மான் இசையமைத்தால் படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ பாடல் சிறப்பாக இருக்கும் என நம்பி ரசிகர்கள் தியேட்டருக்கு போனார்கள்.

முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். தொடர்ந்து ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ் என ரவுண்டி கடித்து நம்பர் ஒன் இசையமைப்பாளராகவும் மாறினார். ஒருபக்கம் பாலிவுட்டுக்கு சென்று அவர் போட்ட பாடல்கள் பாலிவுட்டை அதிர வைத்தது.

இவரின் அப்பா சேகர் மலையாளத்தில் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எனவே, சிறு வயது முதலே இசையை முறையாக கற்றுக்கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான். 80களில் இவர் வேலை செய்யாத பெரிய இசையமைப்பாளர்களே இல்லை என சொல்லுமளவுக்கு பலரிடம் கீபோர்டு வாசித்திருக்கிறார். இத்தனைக்கும் அப்போது அவருக்கு வயது 12.

ரஹ்மான் எப்படி இளையராஜாவிடம் கீ போர்டு வாசிப்பவராக சேர்ந்தார் என்பது ஒரு தனிக்கதை. மூடுபனி படத்திற்கு இளையராஜா இசையமைத்து கொண்டிருந்த நேரம். ஒருநாள் பாடல் ஒலிப்பதிவின்போது கீ போர்டு வாசிப்பவர் மது அருந்துவிட்டு வந்துவிட்டார். தனது குழுவில் யாரேனும் குடித்துவிட்டு வந்தால் இளையராஜாவுக்கு கடுமையான கோபம் வரும். எனவே, அவரை வெளியே அனுப்பிவிட்டார்.

அப்போது ஏ.ஆர்.ரகுமான் பெயரை ஒருவர் சொல்லி நமது சேகரின் மகன் என சொல்ல ‘வரச்சொல்’ என ராஜா சொல்ல ரஹ்மான் அங்கு சென்றார். அப்போது அவரின் பெயர் திலீப். அதன்பின் புன்னகை மன்னன் உட்பட ராஜா இசையமைத்த பல படங்களில் ரஹ்மான் கீ போர்டு வாசித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

10/02/2024

"ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது".
-மறைந்தார் இசையமைப்பாளர் "விஜய் ஆனந்த்"

10/02/2024

வாய்ப்பு கேட்ட விஜயகாந்த்.. சொல்லிக் கொடுத்த ராமராஜன்!.. இருவருக்கும் இடையில் இப்படி ஒரு உறவா?!..

விஜயகாந்துக்கும் ராமராஜனுக்கும் ஒரு உறவு உண்டு. அது பலருக்கும் தெரியாது. மதுரை மேலூரை சேர்ந்த குமரேசன் அங்கிருந்த கணேஷ் திரையரங்கில் டிக்கெட் கிழித்துக்கொண்டிருந்தார். அந்த திரையரங்கத்தின் ஓனர் மீனாட்சி சுந்தரம். மிகவும் நல்ல மனிதர். திரைப்பட இயக்குனர் காரைக்குடி நாராயணன் ‘அச்சாணி’ என்கிற படத்தை எடுத்தபோது அவருக்கு பண உதவி செய்தவர்.

அதில் ஏற்பட்ட நட்பில் ‘இவனுக்கு எதாவது வேலை கொடுங்க’ என சொல்லி குமரேசனை நாராயணிடம் அனுப்பி வைத்தார். நாராயணனின் அலுவலத்தில் ஆபிஸ் பாய் போல எல்லா வேலையும் செய்தார் குமரேசன். ஒருநாள் விஜயராஜ் என்பவர் மதுரையிலிருந்து ஒரு சிபாரிசு கடிதத்தோடு நடிக்க வாய்ப்புகேட்டு நாராயணனை பார்க்க அங்கு போனார். மதுரைக்காரர் ஒருவர் அங்கு வர குமரசனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

ஓடிப்போய் இயக்குனரிடம் சொன்னார். ஆனாலும், விஜயராஜுக்கு நாராயணனால் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. காரணம் சொல்லி அனுப்பிவிட்டார். சில வருடங்களில் அதே நாராயணன் இயக்கத்தில் விஜயராஜ் ஹீரோவாக நடிக்க அதே படத்தில் குமரேசன் உதவி இயக்குனர். அந்த இயக்குனர் இராமநாரயணன். விஜயராஜ் அப்போது விஜயகாந்தாக இருந்தார். அந்த உதவி இயக்குனர் குமரேசன் பின்னாளில் தமிழ் சினிமாவை கலக்கிய ராமராஜன். அந்த திரைப்படம் சிவந்த கண்கள். வெளியான ஆண்டு 1982. இந்த படத்தில் விஜயகாந்துக்கு வசனத்தை எப்படி பேச வேண்டும் என சொல்லிக்கொடுத்தவர் ராமராஜன். அதன்பின் ஹீரோவாக மாறினார் ராமராஜன்.

1987ம் வருடம் தமிழ் புத்தாண்டில் விஜயகாந்தின் படம் வீரபாண்டியன் படம் வெளிவந்த போது, ராமராஜன் ஹீரோவாக நடித்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படமும் வெளியானது. இதுதான் காலத்தின் கோலம். விதியின் விளையாட்டு. நளினிக்கு உடன் பிறவாத அண்ணன் போல இருந்தவர் விஜயகாந்த். அந்த நளினியைத்தான் ராமராஜன் திருமணம் செய்து கொண்டார்.

விஜயகாந்தின் திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர் கருணாநிதி எனில் ராமராஜனின் திருமணத்தை நடத்தி வைத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விஜயகாந்த் திமுகவில் இருந்தபோது ராமராஜன் அதிமுகவில் இருந்தார். அரசியலில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தார்கள். ஆனாலும், விஜயகாந்த் மறைந்தபோது ராமராஜன் கண்டிப்பாக கண் கலங்கி இருப்பார்.

நளினி தனது கணவர் ராமராஜனை பிரிந்தபோது உடனே அவரை தொலைப்பேசியில் அழைத்து ‘உனக்கு அண்ணன் நான் இருக்கிறேன். எப்போது எந்த உதவி என்றாலும் என்னை கேள்’ என ஆறுதல் சொன்னவர் விஜயகாந்த். அதனால்தான் விஜயகாந்தின் சமாதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் நளினி. அப்போது கண்ணீர் மல்க விஜயகாந்த் பற்றி உருகிப்பேசினார். பின் ஏதோ ஒரு ஆதங்கத்தில் பேச்சை பாதியில் முடித்துக்கொண்டு போய்விட்டார்.

10/02/2024

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when பருவதமலை ஆன்மீக குழு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category