Rihla

Rihla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rihla, Historical Tour Agency, Chennai.

Rihla Hyderabad--- A confluence of South & North Indias--- The rise and the fall of a civilization---  Nizamate's Histor...
14/05/2026

Rihla Hyderabad

--- A confluence of South & North Indias

--- The rise and the fall of a civilization

--- Nizamate's Historical and Cultural grandeur

Departure: 19 Aug 2026 - Arrival: 22 Aug 2026

To book: 85248 41761

Last Date: 13.06.2026

Journey # 08

ரிஹ்லா ஹைதராபாத் --- தெற்கு வடக்கு இந்தியாக்களின் சந்தி --- நாகரிகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்---  நிஜாமிய வரலாற்று &...
13/05/2026

ரிஹ்லா ஹைதராபாத்

--- தெற்கு வடக்கு இந்தியாக்களின் சந்தி

--- நாகரிகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்

--- நிஜாமிய வரலாற்று & பண்பாட்டுச் செழுமைகள்

புறப்பாடு: 19 ஆகஸ்ட் 2026 - மீட்சி: 22 ஆகஸ்ட் 2026

முன்பதிவுக்கு: 85248 41761

முன்பதிவு செய்ய இறுதி நாள்: 13.06.2026

பயணம் # 08

அருஞ்சுனை-கால் நாள் ரிஹ்லா  #5நண்பரும் ஒளிப்படக்கலைஞரும் இலக்கிய ஆர்வலருமான சுபுஹான் பீர் முஹம்மது காக்கா வழமைபோல பரபரப்...
07/02/2026

அருஞ்சுனை-கால் நாள் ரிஹ்லா #5

நண்பரும் ஒளிப்படக்கலைஞரும் இலக்கிய ஆர்வலருமான சுபுஹான் பீர் முஹம்மது காக்கா வழமைபோல பரபரப்பான விடுமுறைக்காலத்தில் இருந்தார்.வளைகுடாவில் பணி புரியும் சுபுஹான் காக்கா எப்போதும் தனது விடுமுறைகளை குடும்பத்திற்குப் போக நட்புகள் காணுகை,ஒளிப்படம் என பயணங்களை அமைத்துக் கொண்டிருப்பதால் ஆளைப் பிடிப்பது சிரமம்.

தற்செயலாக சிக்கியவரிடம் செல்லப்ப ஆசாரியின் கதைகளைக் கேட்டு தலை குலுங்கி ஓய்ந்த ஒரு நேரத்தில் சுனை,புறையூர் கடம்பா போய் வரலாமென்றார்.

வலையொளியார் சாலிஹும் இணைந்துக் கொள்ள ஆறுமுகநேரி,அம்மன்புரம் வழியாக குரும்பூருக்கருகிலுள்ள மேலப்புதுக்குடி சுனைக்குச் சென்றோம்.சுனைக்கு எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு வருகிறேன். ஏற்பட்டிருக்கும் மாற்றங்களினால் திசைகள் சுழன்றிருந்தன.

நான் கடைசியாக வந்து பார்த்தபோது திறந்த வெளி, கரி படிந்த சில அடுப்புக் கூட்டங்கள், அய்யனாருக்கான பீடத்துடன் எப்போதாவது ஆட்கள் தென்படும் இடமாக மட்டுமே சுனை இருந்தது.

ஹிஜ்ரியாண்டு ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை பத்தன்று புறையூரில் நடக்கும் இறை நேசர் சிந்தா மதார் கந்தூரி விழாவிற்காக குடும்பங்களைக் கூட்டிக் கொண்டு வரும் மக்கள் திரளாலும் கோடை விடுமுறையின் இளவல்களாலும் சுனை தன்னை அறியும் சமயம்.

ஆல மரத்தின் விழுது சுனையின் தரை தொடுவது தெரியுமளவிற்கு தெளி நீர்.நீச்சலும் ஆழமுமறியாமல் அவ்வபோது சில இறப்புகள் நடந்தாலும் அன்றையக் காலத்தின் விடுபடலுக்கான தலங்களின் பட்டியலின் வரிசையில் ஆத்தூர்,கஸாலி மரைக்காயர் சாலை,ஏரல்,சேதுக்கு வாய்த்தான்,புறையூர் கடம்பாவுடன் மேலப்புதுக்குடி சுனையும் உண்டு.வாசகர்களுக்காக மேலப்புதுக்குடி சுனை என எடுத்து எழுத வேண்டியுள்ளதே தவிர ‘சுனை’ என்ற பெயருக்கப்பால் ஊரையும் பெயரையும் நாங்கள் அறிந்திருந்ததில்லை.

ஊர்திகளின் பெருக்கம்,திருமணம்/தொழிலுக்காக புலம் பெயரும் சாதி சனங்களின் குலச்சாமி நினைவேக்கம்,சரவணா ஓட்டல் அண்ணாச்சியின் வனத்திருப்பதி கோயில் உருவாக்கம்,சென்னை – திருச்செந்தூர் இடையே நேரடி தொடர்வண்டி போக்குவரத்து எனப் பல்வேறு காரணிகளினால் சுனை இன்று ‘அருஞ்சுனைக் காத்த அய்யனார் கோயில்’வளாகமாக நாடார் சாதியினரின் பொருட் செலவில் உருவெடுத்திருக்கிறது.

சிறு கடைகள்,மணல் வெளிக் கடைகளுடன் ஈரிருளி கடைகளும் பெருகியிருக்க பல்வேறு ஊர்களிலிருந்து வந்துள்ள பக்தர்கள் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கொஞ்சம் பேர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க வேறு சிலர் வழிபட்டுக் கொண்டுமிருந்தனர்.

பெருங்கண்ணாடித் திரையால் போர்த்தப்பட்டிருந்ததைப் போல சுனை காட்சியளித்துக் கொண்டிருந்தது.சாலிஹும் சுபுஹான் காக்காவும் கோயிலுக்குள்ளும் வெளியுமாக புகுந்து புகுந்து படமெடுக்க சூடமும் எண்ணெயும் கலந்த வாடை ஒவ்வாததினால் ஓரமாகப் போய் அமர்ந்துக் கொண்டேன்.ஒவ்வொரு படமெடுக்கும்போதும் சாலிஹ் அதன் நுட்பங்களை சுபுஹான் காக்காவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

பொதுவே ஒளிப்படக்கலைஞர்களுடன் பயணிப்பதில் எனக்கு முடி அளவில் ஒவ்வாமையுண்டு.எதைப் பார்த்தாலும் உறுத்தல் ஏற்பட்டு அது கைகளின் வழியாக கேமிராவுக்கும் நீளுகிற அவர்களின் செய்கையைத்தான் சொல்கிறேன்.அப்படியான விலகல்கள் எவ்வளவு பிழையானவை என்பதை எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும் நிரூபிக்கும்.ஒரு படைப்பாளிக்கு இன்னொரு படைப்பாளியை புரிந்து ஒத்திசைந்துக் கொள்ள முடியவில்லையென்றால் சராசரி மனிதர்களுக்கு அது கிறுக்கும் வீணுமாகத் தெரிவதில் வியப்பதற்கொன்றுமில்லை.

புறையூர் கடம்பாவுக்குக் கிளம்பினோம்.கூடுதல் ஆட்கள் போகாத தேரி மணல் காட்டுப்பாதையில் தர்கா ஒன்று நின்றிருந்தது.அருகில் ஓடிய வாய்க்காலில் நாலுமாவடி தேவாலயத் துணிகளைத் தனியாளாய் துவைத்துக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

இச்சாலையில் கிட்டத்தட்ட அய்ம்பது வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வொன்றையும் சுபுஹான் காக்கா நினைவு கூர்ந்தார்.

அக்காலக் கட்டங்களில் மகப்பேறுக்காக தாய்மார்களை காயல்பட்டினத்திலிருந்து நாகர்கோவில் காதரீன் பூத் மருத்தவமனை புத்தேரி அல்லது நாசரேத் புனித லூக்கா மருத்தவமனைக்குத்தான் கொண்டு செல்வார்கள்.

சுபுஹான் காக்காவிற்கு நாசரேத்தில் தம்பி பிறந்தான்.பிறந்த கொஞ்ச நேரத்தில் அவன் இறந்து போக ஊருக்குக் கொண்டு போக ஒரு வாடகை வண்டியும் வர அணியமாக இல்லை.அழுது கொண்டிருந்த தனது தாயாரை ஊர் வரைக்குமாவது அமைதி காக்கச் சொல்லி விட்டு தம்பியின் மய்யித்தை துணியில் பொதிந்த வாப்பா ஒரு டிரக்கர்காரனை அழைத்து வந்து விட்டார்.வண்டியும் ஊரைப்பார்த்துக் கிளம்பி விட்டது.

நாங்கள் நின்றுக் கொண்டிருக்கும் இதே சாலையில்தான் அந்த டிரக்கரும் வந்திருக்கிறது.என்னதான் இருந்தாலும் பெற்றவளல்லவா?உம்மாவிடமிருந்து ஒரு விம்மல் கிளம்பி அடங்க “பொணத்தயா கொண்டு வர்றீங்க”என்ற ஓட்டுநர் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டார்.” யப்பா நடுக்காட்டுல வண்டிய நிறுத்தாதே’’என சுபுஹான் காக்காவின் வாப்பா எவ்வளவோ கெஞ்சியிருக்கிறார்.அன்று மட்டுமல்ல இப்பகுதி இன்றும் காடுதான்.இப்பகுதியில் காட்டுத்துறையின் ‘காப்புக்காடு’என்ற அறிவிப்புப் பலகையையும் பார்த்தோம்.

ஒன்றுக்கும் ஓட்டுநர் மசியவில்லை.மனைவி,மகன்,இறந்த மகன் மூன்றையும் ஒரு தரம் உற்றுப் பார்த்தவர் வண்டியின் இருக்கைக்கு அடியில் கிடந்த இரும்புக்கழியை பாய்ந்து எடுத்திருக்கிறார்.”வண்டி போகலன்னா இங்க ரண்டு பொணமாயிரும்”என்றவுடன் கிளம்பிய வண்டி ஊர் வந்தவுடன் ஓட்டுநரின் கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பேசியதற்குக் கூடுதலாகவே பணமும் கொடுத்தனுப்பியுள்ளார் வாப்பா.வாட்டசாட்டமான தோற்றத்துடன் இரும்புக் கழியும் ஆவேசமுமாய் இன்னொன்றாய் இருந்தார் வாப்பா என்றார்.

அதற்கு கிட்டத்தட்ட இணையான ஒரு நிகழ்வு தான் மதுக்கூர் செல்லுபோது நிகழ்ந்ததாக சொல்லிக்காட்டினார் சுபுஹான் காக்கா.இறந்த தன் பிள்ளையை துணியில் சுற்றியவாறு கையில் ஏந்திய இளம்பெண்ணொருத்தியுடன் பாட்டியும் அரசுப்பேருந்தில் ஏறியிருக்கின்றனர்.பின்னிருக்கையில் அமர்ந்திருந்த வைதீகப்பிராமணொருவர் இளம் தாயின் கண்ணீரைக் கண்டவுடன் “பொணத்த எப்படிக் கொண்டு போகலாம்?” எனக் கூச்சலிட்டு ஆட்சேபித்துள்ளார். அச்சமயம் அருகில் அமர்ந்திருந்த தனக்கு எதுவும் தோன்றவில்லை.நேராக அவரிடம் போய் “ அவங்க காசில்லாததினாலத்தான் பஸ்ஸுல போறாங்க.ஒன்னு நீங்க அமைதியா இருங்க.அப்படி இல்லன்னா ஒங்களுக்குப் பிடிக்காட்டி வண்டிய விட்டு எறங்கிப் போயிருங்க”என்றவுடன் அவர் இன்னும் குரலெடுத்திருக்கிறார். அடுத்த சொல் “இனி கத்துனா அடிப்பேன்.” ஆள் கடகடவென பேருந்தை விட்டு இறங்கிப் போனாராம்.

ஊருக்கு சுபுஹான் காக்காவை ஒளிப்படக்கலைஞராக மட்டுமே தெரியும்.ஆனால் அவருடன் பயணிக்கும்போதுதான் செல்லப்பாசாரி கதைகள், பகடிகளுடன் எத்தனை விதமான கதைகளை அவரின் சன்னமான குரலிலிருந்துக் கேட்டுக் கொள்ளவியலும்.நாற்பத்தைந்து வருட வளைகுடா வாழ்க்கை.முன்று பெண் பிள்ளைகளை மண முடித்து வைத்து இடுப்பை இப்போதுதான் நிமிர்த்தியிருக்கிறார்.பெரிதாக நிலைத்த வருமானம் என அவரால் உண்டு பண்ண இயலவில்லை.ஆனால் அதைக் குறித்து அவருக்கு ஆவலாதியுமில்லை.

இலங்கையின் மூத்த படைப்பாளியும் அணுக்க ஆன்மாவுமான எஸ்.எல்.எம். ஹனீஃபா மாமாவின் கதையும் இசையும் சேர்ந்த கலையிரவுகளை இங்கேயும் போடுவோம் காக்கா என்றேன்.உடலுக்கும் உயிருக்கும் ஒத்திசைவு இருப்பதற்குள் இதை நடத்திப்பார்த்து விட வேண்டும் என்பதையும் அவரிடம் சொல்லும்போது “பாப்போம்” என்றார்.இதையும் சன்னக்குரலில்தான் சொன்னார்.

கையோடு கொண்டு வந்திருந்த பூச்சிப்படவி(டிரோன் கேமிரா)யைப் பறக்க விட்டு பரிசோதித்துப் பார்த்தார்.சில சமயங்களில் அது நம் கண்ணுக்கு சம உயரத்தில் நின்று சண்டைக்குக் கூப்பிட்டது. வீறாப்பு இரைச்சலுடன் உயரம் ஏறும் போது அதை பலத்து வீசும் காற்று கொண்டு போய் விடுமோ என்ற சிறு பதட்டமிருந்தது.கதிரவன் இறங்கிக் கொண்டிருந்ததால் தர்கா வளாகத்தில் அஸர் தொழுதோம். அருகிலுள்ள கூடத்தில் இரு வெற்று மதுக் குப்பிகள் நின்றும் இன்னுமிரண்டு கிடந்தும் காட்சியளித்தன.ஏகாந்த வெளிகளை மதுவால் களியாடுவது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியமானதொன்று.

புறையூர் கடம்பாவோடு உலாவை நிறைவு செய்வது எனத் தீர்மானித்தோம். கடம்பாக் கால்வாய் நடுவே மூன்று கொக்குகள் தங்களுக்கான உலகில் இருந்தன.எங்களின் நடமாட்டத்தை அவை பொருட்படுத்தவேயில்லை.படமெடுக்க முனையும்போது அவற்றில் இரண்டு பறந்து போக ஒன்று மட்டும் எஞ்சியது.கிட்டியதைப் படவியால் சுருட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் பழைமையான நீர் நிலைகளில் புறையூர் கடம்பா குளமும் ஒன்று.திருவைகுண்டம் அணையை விடப் பழைமையானது என்கிறார்கள். கடலில் பாதி கடம்பா என்ற சொல் சரிதான்.அதன் அகன்ற பரப்பில் கதிரவனும் கொக்குகளும் இருப்புகளாகவே இல்லை.காற்றுக்கு மட்டுமே வசப்படும் அதன் எல்லைகளுடன் அவ்விடத்தின் நிறை மௌனமும் அங்கேயே இருக்கச் சொல்லியது.இரவு விரைந்ததால் ஆறுதலான காலளைதல் சாத்தியப்படவில்லை.

என் மூத்த மகள் சிறுமியாக இருக்கும்போது குடும்பத்துடன் வந்து குளித்ததுதான்.அந்தக் குளியலுக்கும் இப்போதைய வரவுக்குமிடையில் கால் நூற்றாண்டு திரண்டு நிற்கிறது.கால்வாயின் பக்கவாட்டுப்படிகளில் கொஞ்ச நேரம் அமர்ந்தேன்.மதகுக் கண்களிலிருந்து இசையாகிப் படர்ந்தது தாமிரபரணியின் குளத்து வடிவம்.காலனியாதிக்கக் காலத்தில் கட்டப்பட்ட மதகின் சுவற்றில் 1897 எனஆண்டு பொறித்திருந்ததாக நினைவு. கட்டமைப்பு இன்னமும் வலுவாகத்தான் நிற்கிறது.

கடம்பாவில் விழுந்துக் கிடந்த கதிரோனின் எதிரொளியை செம்பனை உருவில் படம் பிடித்த காக்கா என்னையும் சாலிஹையும் நிழலாக்கி படமெடுத்தார்.

அடுத்து இங்கு வரும்போது குளிக்க மட்டுமே வர வேண்டும் இன்ஷா அல்லாஹ்… குளிப்பதுடன் வருடங்களின் கனத்த சுவற்றை கரைத்தழிக்கவும்தான்.

மச்ச மாலை(புன்னக்காயல்)-கால் நாள் ரிஹ்லா  #4சாலையை மட்டுமே கவனிப்பதால் ஓட்டுதலையும் ஓர் ஊழ்கமாக மாற்றலாம் என வாசித்திருக...
30/01/2026

மச்ச மாலை(புன்னக்காயல்)-கால் நாள் ரிஹ்லா #4

சாலையை மட்டுமே கவனிப்பதால் ஓட்டுதலையும் ஓர் ஊழ்கமாக மாற்றலாம் என வாசித்திருக்கிறேன்.ஆனால் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது அதனளவிலேயே முழு ஊழ்கம்தான் என் ஜென்னியலாளர்கள் அடித்துக்கூறுகின்றனர்.

நானும் பள்ளிப்பருவத்தில் ஊர் கடற்கரையில் மீன் பிடித்தவன்தான் குட்டிப்பாறை,திருக்கை என முயற்சி திருவினையாகியிருக்கிறது..அவ்வப்போது நடந்த நண்டு வேட்டையைத்தவிர காலத்தின் ஓட்டம் தூண்டிலிலிருந்து என்னைத் தொலைவிலாக்கி விட்டது. தூண்டிலுக்கு மட்டுந்தான் தொலைவு.மற்றபடி கடல் பயணத்தின் வழியாகவும் ஆறுகளின் திட சாட்சியான மலைப்பிஞ்சுகளின் வீட்டுச் சேகரங்கள் வழியாகவும் நீரின் அண்மைக்கு குறைவேயில்லை.

மீன்களை அவர்களின் உலகத்திலிருந்து விடுவித்து நில உலகிற்கு அவ்வப்போது அழைத்து வரும் ‘தத்துவார்த்தப்” பணியிலுள்ள வலையொளியார் சாலிஹ் கொஞ்ச நாட்களாக அமலி நகருக்கும் கல்லாமொழிக்கும் அழைத்துக் கொண்டேயிருந்தார்.ஜென் முறையிலாவது ஊழ்கம் கைகூடுகிறதா? என்பதை சோதித்தறிய நடந்தேறியது மீன்பிடி மாலை.

மதியம் ஒரு மணிவாக்கில் சாலிஹிடமிருந்து’ஒரு புதிய இடத்திற்குப் போகிறோம்’ என வட்சப்பில் தகவல் வந்தது, மூன்று மணியளவில் கிளம்பினோம். இடம்:காயல்பட்டினம் வடபாகம் கிராமம்.அதாவது தாரங்கதார வேதியியல் தொழிற்சாலையின்(DCW) பின்புறம் வரும் கடற்பகுதி.எங்களுக்கு முன்னரேயே சாலிஹின் நண்பர்கள் மூவர் அங்கு கிளம்பி விட்டிருந்தனர்.

காயல்பட்டினத்திலிருந்து ஆத்தூர்/குரும்பூர் செல்லும்புறவழிச்சாலையின் இடது புறத்தில் பிரியும் மண் பாதையில் சென்றோம்.இப்பகுதிகளுக்கு நான் இதுவரை சென்றதில்லை.ஏராளமான உப்பளங்கழிகள் தென்படத் தொடங்க வேதியியல் தொழிற்சாலையின் பின்னாம்புறத்தில் வந்து சேர்ந்தோம்.இவ்வளவு நெருக்கத்தில் இந்த ஆலையைஇப்போதுதான் பார்க்கிறேன்.

1958-59 ஆம் ஆண்டுகள்.காமராசரின் ஆட்சி..குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டம் தாரங்கதாராவில் சாஹு சிரியன்ஸ் ஜைன் என்பவர் நிறுவிய தாரங்கதாரா வேதியியல் தொழிற்சாலையின் கிளை காயல்பட்டினத்தில் நுழைந்தேறியக் காலகட்டம்.

கொல்லாமை,ஊனுண்ணாமையை மதமாகக் கொண்ட ஜைனர்கள் --‘பனியா’ எனப்படும் இந்திய தேசிய முதலாளி வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்.இந்தியாவெங்கும் சாலையோர வட்டிக்கடை தொடங்கி பென்னம் பெரும் தொழில்களுக்கு உடைமையாளர்கள்.

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என விருப்பமூட்டி காயலர்களிடமும் சுற்று வட்டார கிராம மக்களிடமும் மாநில அரசிடமும் பெற்ற நிலத்தில் ஆலையை அமைத்துள்ளனர்.

முதலில் குடிசை கொட்டகையில் ஞெகிழி உருளையுடன் தொடங்கிய கார சோடா உருவாக்கம் இன்று சி- பிவிசி,பிவிசி,செயற்கைஇரும்பு ஆக்ஸைடு நிறமிகள்,செயற்கை ருடில்,இடைநிலை வேதியியல் பொருட்கள்,அம்மோனியம் பை கார்பனேட்,சோடியம் பை கார்பனேட்,ஹைட்ரோகுளோரிக் அமிலம்,திரவ குளோரின்,ட்ரை குளோரோ எதிலீன்,ஊடாக்ஸ்,இரும்பு குளோரைடு,சோடியம் ஹைப்போ குளோரைட்டு,சோடா சாம்பல்,கார சோடா உள்ளிட்ட இன்னும் சில வேதியியல் பொருட்களையும் உருவாக்குகிறார்கள்.இவற்றிற்கான ஆற்றல் தேவைகளுக்காக ஆலை வளாகத்திலேயே நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையமும் உள்ளது.

இத்தனைப் பொருட்களின் உருவாக்கக்கழிவுகள் எங்கு போகும்? என் சிறு வயதில் வைகறைப்பொழுதில் ஊர் முழுக்க குளோரின் வாடையை நுகர்ந்திருக்கிறேன்.பனிக்காலத்தில் அதன் தாக்கத்தில் காயல்பட்டினத்தின் வான் வெளியே மங்கி விடும்.கண்ணுக்கு முன் வெண் திரை விழுந்தது போலிருக்கும்.அவ்வப்போது ஊருக்குள் இராக்காலங்களில் அழுகிய முட்டையின் துர் நாற்றம் பரவியிருக்கிறது.பருவ மழைக்காலங்களிலும் மற்ற காலங்களிலும் மன்னார் வளைகுடா செந்நிறத்தில் மாறி விடும்.ஊரில் கடந்த இருபதாண்டுகளில் கண்,கால்,இடுப்பு என இதுவரை கேள்விப்பட்டிராத புற்று நோய்க்கட்டிகள்.புற்றினால் இறப்புகள் கூடுதலாகவே ஆலையின் மாசு குறித்த விழிப்புணர்வு உண்டாகியது.

ஊரின் வான்,கடல் பரப்புகளில் வேதியியல் கழிவுகளை புகையாகவும்,திரவமாகவும் வெளியேற்றியதன் விளைவு.கடல் நீரில் அளவுக்கு பன்மடங்கு கூடுதலாக பாதரசக் கழிவுகள்.பொது மக்களும் உப்பள உரிமையாளர்களும் பல போராட்டங்கள் நடத்தி முடித்தனர்.

மாவட்ட ஆட்சியர்,மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என முறையீடுகள் போய் இறுதியில் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் ‘கெபா’ சூழலியல் பொது நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது.வழக்கை தீவிரமாக விசாரித்த நடுவர் அவ்வப்போது விசாரணையில் கடுமையுங்காட்டினார்.இறுதியில் பழம் உண்டு கொட்டையை உமிழும் வௌவாலின் நீதிதான்.

அரசும் நீதியதிகாரம் பெற்ற அமைப்புகளும் ஒரு கீற்றைக்கூட கிள்ளவில்லை.நண்பர்கள் குழு நடத்தி வரும் காயல்பட்டினம் இணையதளத்தின் வாயிலாக கடலை அன்றாடம் கண்காணித்ததின் விளைவாக கடல் செந்நிறமாக மாற்றமடைவது நின்றது.ஆனாலும் திரவக்கழிவை நிற நீக்கம் செய்து கடலில் விடுவதாக ஊகமுண்டு.

தமிழ்நாட்டரசிற்கு சொந்தமான 700- 800 ஏக்கர்களை ஈன விகிதத்தில் குத்தகைக் கட்டணம் செலுத்தி தன் பிடியில் வைத்துள்ளது ஆலை.இது தொடர்பில் அரசிற்கும் இவர்களுக்கும் நீதி மன்றத்தில் வழக்கும் மேல் முறையீடும் நடைபெற்று வருகிறது.வடக்காத்தூரில் தனிக்குழாய் பாலம் அமைத்து தாமிரபரணியின் நீர் வளமும் இவர்களால் உறிஞ்சியெடுக்கப்படுகிறது.

பழைய நினைவுகள் மீண்டு வந்தன.உப்பளங்கழிகளுக்கிடையே பல்வேறு பாதைகள் புதிர் சதுரத்தைப் போல கிளை பரப்பி செல்கின்றன.அவற்றிற்குள் செல்லும்போது திசையழிகிறது.கதிரவன் நால் திசைகளிலும் சுழல்வது போன்ற தோற்ற மயக்கம்.

விளக்கு முதலான கருவிகளுடன் முதலாவது கண்காணிப்புக் கோபுரம் தென்பட அதன் கீழே ஊதா நிற உடையணிந்த காவலர் தென்பட்டார்.ஏதாவது சொல்வார் என எதிர்பார்த்தோம்.ஒன்றுஞ்சொல்லாமல் நின்றார்.

சாலிஹின் அணியினரையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவியலவில்லை.கூகுள் வரைபடமும் சரிவரவில்லை.ஆங்காங்கே தென்பட்ட தொழிலாளர்களிடமும் காவலாளிகளிடமும் வழி கேட்டு தொடர்ந்தோம்.எனினும் கடற்கரையை அடைவது கடினமாக இருந்தது.

எனவே மீன் பிடிப்பதற்காக வந்தவ இன்னொரு அணியினரைப் பின் தொடர்ந்து புன்னக்காயல் செல்லும் வழியில் சாலிஹின் நண்பர்களுடன் இணைந்துக் கொண்டோம்.

சாலிஹின் ஆலைக்கு பின்புறத்தின் வழியாக கடலில் சென்று கலக்கும் உப்பாறு ஓடைப்பகுதியில் மீன் பிடிக்க முனையும்போது அங்கு பணியிலிருந்த ஆலையின் காவலர் தடுத்துள்ளார்.அதில்தான் சூக்குமம்.மர்மத்தின் நாடிகழிவுகளைக் கடலில் கலக்கும் கமுக்கம் வெளியாகி விடும் என்ற அச்சம்தான்.

உப்பாற்றில் இவர்களின் ஆலைக்கழிவு ஒழுகிச் செல்லும் இடங்களின் அருகிலுள்ள நிலங்களில் கால் புதைந்து வெந்தவர்களின் செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டேயிருக்கிறது,இது மாதிரி காயப்படுபவர்களுக்கு மூச்சு முடையில்லாமல் பரிகாரம் செய்து வீட்டுக்கனுப்ப வடக்கு ஆத்தூரின் பிரபல தனியார் மருத்துவமனையொன்றிடம் புரிந்துணர்வு ஏற்பாட்டையும் செய்து வைத்துள்ளார்கள் ஆலை நிர்வாகத்தினர்.

பல வருடங்களுக்கு முன்பு இவர்களின் ஆலைக்கு முன்னால் அறிவிப்புப் பலகையொன்றை நிறுவினார்கள். “உயிரைக் கொன்று உண்ணாதே” என்ற சொல்லமைப்புடன் குருதி சிந்தலுடன் அறுபட்டுக் கிடக்கும் மாட்டின் படமொன்றையும் அதில் வரைந்திருந்தனர்.

இந்த ஆலைக் குறித்த விழிப்புணர்வெல்லாம் வருவதற்கு முன்னர் நடந்த நிகழ்வு.இது நடந்து கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளிருக்கும்.: தொடர் வண்டி துறையில் பயணச்சீட்டு பரிசோதகராகப் பணி புரிந்துக் கொண்டிருந்த ஏ.கபீர் ராஜா என்ற ஏ.கே.ராஜா என்பவர் ஆலைகளுக்கு வேதியியல் மூலப் பொருட்கள் வினியோகிக்கும் தொழிலையும் செய்து வந்தவர்.டிசிடபிள்யூ ஆலைக்கும் அவர் விநியோகஸ்தர்.அவர் தனது முகவரி அட்டை/அலுவலக கடிதத் தாள்களில் 'ஏ.கே.ராஜா' என்றுதான் குறிப்பிடுவார்.

ஒரு நாள் டிசிடபிள்யூ ஆலையில் கூட்டமொன்று நடந்திருக்கிறது.அதில் ஆலையின் அலுவலர்கள் உரிமையாளர்களுடன் வினியோகஸ்தர்களும் பங்கெடுத்த கூட்டமது. ஏ.கே.ராஜாவும் அதில் உண்டு. அங்கு வந்திருந்த ஏ.கே.ராஜாவின் நண்பரொருவர் "கபீர்! எப்படியிருக்கீங்க?" என நலம் கேட்டுள்ளார்.

இந்நிகழ்விற்குப் பிறகு ஆலையிலிருந்து சரக்கிற்கான கோரல் எதுவும் ஏ.கே.ராஜாவிற்கு வரவேயில்லை.காரணத்தை ஆலை நிர்வாகிகளிடம் கேட்டபோது "ஒரு முஸ்லிமுக்கு ஆலையின் ஆதாயம் செல்லக் கூடாது என எங்கள் தாத்தா கட்டளையிட்டிருக்கிறார்"என்றனராம்.

வேதியியல் ஆலையின் அமைவிடத்திற்கு சாகுபுரம் என்ற வடமொழிப் பெயர் சூட்டி தனி பஞ்சாயத்தாக்க எடுத்த முயற்சி அன்றைய ஊர்ப் பெரியவர்களால் தோற்கடிக்கப்பட்டது.ஆனால் சாகுபுரத்திற்கென தனி அஞ்சல் நிலையமும் அஞ்சல் குறியீட்டெண்ணும் வாங்குவதில் வெற்றியடைந்துள்ளனர் ஆலை நிர்வாகத்தினர்.

எக்கட்சியின் தலைவர்கள் இப்பகுதிக்கு வருகை புரிந்தாலும் ஆலையின் விருந்தினர் மாளிகையில் தங்கிச் செல்லும் வழமையுடன் அரசியல் கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகளுக்கும் கனக்கும் ‘கொத்து’களும் பருவம் பொய்க்காமல் வழியறிந்து செல்கிறது.ஆலையின் சுற்று வட்டார ஊர்களில் ‘உதவி தெளிப்பு’ நடவடிக்கைகளையும் ஆலையினர் தவறாது செய்து வருகின்றனர்.

ஆலையினர் தங்களின் தேவைகளுக்காக நிறுவிய ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்ட கமலாவதி மேல்நிலைப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதை காயல்பட்டினத்துவாசிகள் பெருமையாகக் கருதி வருகின்றனர். விடிந்தும் விடியாமலும் ஊருக்குள் வரும் பள்ளிப்பேருந்திற்காக தங்கள் பிள்ளைகளை அழைத்து வரும் தாய்மார்கள் முடுக்கில் வைத்து பிள்ளைகளுக்கு பல் தேய்த்து விட்ட காலமும் உண்டு.இதற்காக அவர்கள் கையோடு குவளை நீரும் பற் தூரிகையையும் கொண்டு வந்ததாக காயல் வரலாற்று ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளரான அமானுல்லாஹ் காக்கா பகிர்ந்துக் கொண்டார்.

புன்னக்காயலுக்குள் நுழைந்தவுடன் நீறிக் கனத்த மனம் சற்று கலைந்தது.புன்னக்காயல் –கொற்கை,மஞ்சள் நீர்க்காயல்,பழையகாயல்,காயல்பட்டினம்,வீரபாண்டியன்பட்டினம்,சோனகன்விளை எனப்படும் ஊர்களை உள்ளடக்கிய பண்டைய கடல் வணிகக்காயல் நிலப்பரப்பின் ஒரு பகுதி.

காலனியாதிக்கக் காலத்தில் முதலில் போர்த்துக்கீசியர்களும் பின்னர் டச்சுக்காரர்களும் இங்கு தாவளமைத்திருந்தனர். தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் 1578ஆம் ஆண்டில் ஜான்-டி-பாரியா என்பவரால் புன்னைக் காயலில் நிறுவப்பட்டது. கத்தோலிக்க சமயத்தவரான பரதவர்களை பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள புன்னக்காயலில் தற்சமயம் மீன்பிடி மட்டுமே நடைபெறுகிறது.இளம் தலைமுறையினர் உலகம் முழுக்க கடலோடிகளாகவும் வணிகக் கப்பல்களில் பணியாற்றுவோராகவும் உள்ளனர்.
‘பின்னக்காயல்’ என உள்ளூர்க்காரர்களால் அழைக்கப்படும் புன்னக்காயலுக்கு வருவது இதொன்றும் முதன் முறையில்லை.பலமுறை வந்து போன இடம்தான்.இப்பயணம் ரிஹ்லா பதாகையின் கீழ் வருவதால் எழுத வேண்டிய தேவை.

”யன்னே(என்ன)….” என்ற சராசரி பின்னக்’காயலாரின் விளியில் ‘னே’க்குப்பின்னர் நீளும் ஒலி உயிர்,மெய் எழுத்துக்களுக்குள் அடங்க மறுப்பதால் அதை இசைக்குறியீடுகளில்தான் எழுத முடியும்.கடல் பரப்பின் மேல் நின்றாடும் காற்றையும் தாண்டி அவர்கள் இவ்வாறுதான் தங்களுக்குள் பேசிக் கொள்ளவே இயலும். படகின் ஒரு முனையில் உள்ளவர் தன் குரலை அடித்து நீட்டி சிற்றலையாக்கினால் மட்டுமே மறு முனையில் உள்ளவரின் செவிக்கு தான் சொல்வதைக் கொண்டு சேர்க்க முடியும். தரையில் பேசிக் கொள்வது பேசினால் தொண்டை வறண்டு தளர வேண்டியதுதான்.

‘பின்னக்’காயலின் மொழியின் இழுவைச் சுவையையும் மிஞ்சுவது அவர்களின் வசைச் சொற்கள்.தேயிலையில் இஞ்சிச்சாற்றைப் போல இறங்கும் வசவுகள் இல்லையென்றால் எங்கயோ ஏதோ கோளாறு என்று பொருள்.

தூண்டில் வளைவின் வழியாக கிட்டத்தட்ட அதன் முனை வரை சென்று தூண்டில் போட்டோம்.’போட்டோம்’ என்பதை விட ‘போட்டார்கள்’ என்பதுதான் சரி.நான் பார்வையாளன் மட்டுமே.மீன் பிடி சாதனங்களை பராமரிப்பதில் உள்ள சில தடைகளினால் தூண்டில் தொகுதி வாங்கவில்லை.மீன் பிடிக்கு வாழ்க்கைப்பட்டால் பிடித்தமான வேறு சிலவற்றை குறைக்க வேண்டி வரும்.எனவே ‘மீன்பிடித்தம்’ த்தை நாளைக்கும் ‘மீன் ஊழ்கத்தை இப்போதைக்குமாக அமைத்துகொண்டாகி விட்டது.

கரடு முரடான பாறைத்துண்டங்களுக்கும் ஊழ்க எத்தனத்திற்கும் அவ்வளவாக ஒத்து வராது போல. எப்படியோ நெல்லைச் சீமையின் வற்றா தாமிரபரணி ஆற்றின் பொழிமுகம் இதுதான் என்ற நினைப்பில் நேராகி விடுகிறது குறைக் கணக்கு.

நண்பர்களுடன் கடைசியாக வந்திருந்த போது தூண்டில் வளைவிற்கும் ஊருக்குமான நில வழித் தொடர்பு 2024 இன் பெரு மழையால் துண்டிக்கப்பட்டிருந்தது.தற்சமயம் அதை சரி செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு இயற்கை பேரிடர்களும் ஏதாவதொரு தடத்தை விட்டுச்செல்லாமலிருப்பதில்லை. பெரு மழைக்கு முன்னர் தூண்டில் வளைவின் பக்கவாட்டிலுள்ள கடற்கரை தூய்மையாகவும் துல்லியமாகவும் இருந்தது இப்போது கோலப்பட்டுக் கிடக்கிறது.

அய்வரணியில் என்னைத் தவிர மற்ற நால்வரும் தாங்கள் கொண்டு வந்திருந்த தூண்டில்களில் இறால் துண்டங்களை கோர்த்து திசைக் கொன்றாய் எறிந்தனர்.

முதலில் இரு குட்டி கருந்திரளி மீன்கள் சிக்கின.அடுத்து கெழுத்தி மீன்கள் இரண்டு. கெழுத்தியை பொதுவாக ஆட்கள் விரும்பி உண்ணுவதில்லை.அவை கழிவையுண்ணும் என்ற பொது நினைப்பு. கடலில் எது கழிவு?எது உணவு? நான் வாங்கிக் கொண்டேன்.இருந்தாலும் எதிர் வந்த இரு உள்ளூர் மீனவர்களிடம் மீனைக்காட்டி கருத்துக் கேட்டோம்.மதிப்பெண்கள் 70:30 என்றிருந்ததால் அங்கேயே துப்புரவு பண்ணி வாங்கிக் கொண்டேன்.துண்டுகள் சீலா மீனின் பருப்பம்.வலிப்பம் பருமனின் சுவைக்காக அடுத்த நாள் மதியம் வரை காத்திருக்க வேண்டும்.

மற்றவர்கள் மீன் பிடித்தலைத் தொடர காற் புள்ளியளவும் நடந்தேறாத ஊழ்க எத்தனங்களைச் சுருட்டிக் கொண்டு நானும் சாலிஹும் ஊர் திரும்பும் பாதையை ஆத்தூர் வழியாக அமைத்துக் கொண்டோம். மணி விலாஸ் உணவகத்தில் காரம் குறைவான பூண்டு ஊறுகாய் வாங்கிய பின் காஃபிக்கு சொல்லி விட்டுக் காத்திருந்தோம். நண்பர்களான இணையர் ஊரிலிருந்து அழைத்தனர். காஃபியும் வந்தது.நடப்பைச் சொன்னவுடன்”எங்களயும் கூப்பிடக்கூடாதா காக்கா? எப்டி உட்டுட்டு போவயோ ஏதாப்போவியோ”மாப்பிள்ளையும் பெண்ணும் மாறி மாறி பாட்டு.

இரண்டு நாட்கள் கழித்து நடந்த புறையூர் கடம்பா கால் நாள் ரிஹ்லாவிற்கு அழைத்தேன். மூச்சு பேச்சில்லை.இது மாதிரி கேட்டவர்களில் 90% பேர்கள் ஒரு போதும்இது போன்ற பயணங்களில் இணைந்ததேயில்லை.”ஓசாரப்பேச்சு ஒழவுக்காகாதுதானே.” இவர்களுடனான பேச்சின் முனைப்பில் காஃபியின் இன்பத்தை இழந்ததுதான் மிச்சம்.

காத்திருந்த மறு நாள் மதியம் வந்தது. பொரித்ததில் முதல் துண்டம் எனக்குத்தான்.நூல் கனத்திற்கு சேற்றின் மணம்.ஆனால் வீட்டாருக்கும் சாலிஹிற்கும் ஆவலாதியில்லை.கெழுத்தி நாட்டம் அதன் முடிவைக் கண்டாலும் கருந்திரளிக் கைவிடவில்லை.

பொருநை அருங்காட்சியகம்  -- அரை நாள் ரிஹ்லா #3நான்கு நாட்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு ரிஹ்லா சமூக ஊடகக் கணக்கில் அற...
01/01/2026

பொருநை அருங்காட்சியகம் -- அரை நாள் ரிஹ்லா #3

நான்கு நாட்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு ரிஹ்லா சமூக ஊடகக் கணக்கில் அறிவித்தோம்.மூச்சில்லை.

அரை நாள் ரிஹ்லாக்களுக்கென நேர்ந்து விடப்பட்ட இருவர்(என்னுடன் ஏர்வாடி காதர் மீறான்) ‘ததும்பும் தமிழ்ப்பெருமிதம்’ நோக்கிக் கிளம்பினோம்.பொருநை அருங்காட்சியகத்தின் இலச்சினைஸ் சொல் ‘ததும்பும் தமிழ்ப் பெருமிதம்.’

தினசரி காலை பத்து மணிக்குத்தான் அருங்காட்சியகம் திறப்பு. வரிக்குதிரைப் பட்டைகள் பொறித்த டி சட்டைகளணிந்த கொஞ்சம் பேர் எங்களுக்கு முன்னர் வந்திருந்தனர். காத்திருக்கும் பார்வையாளர்களை வாயிற்காவலரும் காவல்துறையினரும் ‘அங்கு நில்,இங்கு செல்’ என கவாத்து நடத்திக் கொண்டிருந்தனர்.நுழைவாயிலின் பீடத்தில் அமர்ந்திருந்த பெண் காவலரொருவர் யாருடனோ செல்பேசியில் சமையற் குறிப்புக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்.கிட்டும் இடைவெளிகளில் அவரும் பார்வையாளர்களிடம் கவாத்து வாங்கினார்.

அருங்காட்சியகத்தின் அமைவிடமான ரெட்டியார்பட்டி சாலையில் கொஞ்சம் தொலைவு பயணித்ததுமே வரும் வலது பக்கமுள்ள குன்றில் ஆட்டின் சிலையுடன்பார்வைக் கோபுரமும் தென்படுகிறது.அதொரு மலைக் கோயில் என நினைத்தேன். மேற்கு தொடர்ச்சி மலையின் அரிய விலங்கான வரையாட்டின் சிலை. மாநில விலங்கு. தமிழ்நாட்டரசின் ஏற்பாடு.அருங்காட்சியக பார்வையியடலுக்குப் பிறகு அங்கும் சென்று வந்தோம். ஆனால் அது குறித்த அறிவிப்புப் பலகையொன்றுமில்லை.ஊர்தி நிறுத்தத் தளமொன்று உள்ளது.வருகையாளர்களை எதிர்பார்த்து ஈரிருளியில் விற்பனைக்கான நொறுவைகளுடன் ஒருவர் காத்திருந்தார்.

முதல்வர் அறிவித்து நான்கே கால் வருடங்களில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க ஒன்று.

ஒன்றிய அரசினால் இழுத்தடிக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் கழித்து நீதிமன்றப் போராட்டங்களுக்குப்பிறகு ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியிடப்பட்ட.து. சிந்து வெளி நாகரிகத்திற்கு ஒப்பானது என கீழடி நாகரிகத்தை நிறுவும் அமர்நாத் இராமகிருஷ்ணனின் அகழாய்வு அறிக்கையை திருத்தி வெளியிட முயலும் சங்கி ஆட்சியாளர்கள்தான் ஓடாத சரஸ்வதி நதிக்காக மண்ணைத் தோண்டி முகர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

பேய்களுக்கும் யட்சிகளுக்கும் புனைவுகளை கூம்பாரமாக படையலிட்டு தொன்மங்களின் மீது மட்டுமே பீடமெழுப்பியிருக்கும் இலக்கிய பேருருக்களும் அவற்றின்அதிகார அவதாரங்களுக்கும் ஒவ்வாததினாலேயே பொருநை அருங்காட்சியகம் ஏன் தேவை? என்ற கேள்விக்கான விடை அடங்கியுள்ளது.

பொருநை அருங்காட்சியகத்தின் விளைவாக இன்னொரு நன்மையும் நடந்துள்ளது.இரண்டாம் அகழாய்வு நடந்து அய்ம்பத்தெட்டு ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த கொற்கையின் தொல் பொருட்களும் 2021 ஆம் ஆண்டு நடந்த அகழாய்வில் கிட்டியவைகளும் இன்று ஒன்றாகக் காணக் கிடைக்கின்றன.

பொருநையின் வால் பகுதியில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு கொற்கை எப்போதுமே நெருக்கமானது.அய்ந்து நாகரிகத்தவர் கொள்வினை கொடுப்பினை நடத்திய நெய்தல் நிலம்.பரந்த காயல் நிலத்தின் தலை.பாண்டிய அரசின் வருவாய்த் தலைநகர் என பல வகைகளில் தலையாய நகரம்.

ஆதிச்ச நல்லூர்,சிவகளை,சாயர்புரம்,தேரிக்காடு – தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் தளங்களான இவை நான்கும்அரை மணி நேர தொலைவின் சுற்றளவில் அமைந்திருப்பவை.பல்லாயிரமாண்டுகள் நம்மைச் சுற்றி கோட்டையாகி எழும்பி நிற்கின்றன.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கு அருகிலுள்ள துலுக்கப்பட்டியில் நடந்த அகழாய்வுகள் மிகவும் சமீபத்தியவை.2022 ஆம் ஆண்டு நடந்த அகழாய்வில் இத்தனைப் பொருட்கள் கிடைத்திருப்பது வியப்பூட்டுகிறது.முப்பது வருடங்களுக்கு முன் நான் அங்கு போயிருக்கிறேன். நிலத்தின் மூலையிலொதுங்கிய ஒரு தூசு,நிழல் முக்கு என அன்று எனக்குத் தோன்றியது.

பொருநை அருங்காட்சியகத்தை ஒற்றை நோட்டத்தில் சுற்றிப் பார்க்க நான்கு மணி நேரம் எடுக்கிறது.எழு பரிமாண காட்சி பார்க்க வேண்டிய ஒன்று.வரலாறும் தொன்மையும் காட்சி ஊடகத்தின் தொழில் நுட்ப மேன்மையுடன் இணையும் போது அது இன்னொன்றாகிறது.

அருங்காட்சியக கட்டிடப் பாணியில் பெருமளவு தமிழக மரபு காணப்படாதது ஏமாற்றமளித்தது.வெள்ளை வெள்ளையாகக் கட்டிடங்கள் நிற்கின்றன.அலுவலகத்திற்குள் நுழைந்து வெளியேறுவது போல உணர்வு.நீடிப்புக்கு எதிரானதும் சூழலியல் அழிவை உண்டுபண்ணக்கூடியதுமான காங்கிரீட்டில் வார்க்காமல் கட்டிடங்களை மெட்ராஸ் டெர்ரஸ் எனப்படும் கட்டைக் குத்து முறையில் அமைத்திருப்பது நல்ல முன்மாதிரி.மற்ற பொதுக் கட்டிடங்களுக்கும் அரசு இதைப் பின்பற்ற வேண்டும்.

படியமைப்புக்களும் நடமாடும் வெளிகளும் நல்ல ராஹத்தாக பரந்து இருக்கின்றன.அருங்காட்சியகத்தின் அமைவிடம் மலை மேட்டில் இருப்பதால் வேறு உயரமான கட்டிடங்களினால் நெருக்குதல் ஏற்படாது எனத் தோன்றுகிறது.

வளாகத்தில் தமிழ்நாட்டரசின் பூம்புகார் / கோ ஆப்டெக்ஸ் விற்பனைக் குடில்கள் அமைக்கப்பட்டிருப்பது மரபார்ந்த கைவினைத் தொழிலை ஊக்குவிப்பதுடன் இளைய தலைமுறையினரிடம் அதை சேர்க்கவும் உதவும்.பூம்புகாரும் கோ ஆப்டெக்ஸும் தமிழ் நாட்டரசின் சீர் மிகு நிறுவனங்களின் வகைமையில் சேருபவை.

மற்றபடி காட்சி மாடங்களில் தென்படும் குறைகளைச் சுட்டிக் காட்டும்போது அங்குள்ள பணியாளர்கள் அவற்றை செவி மடுப்பதுடன் அலுவலர்களுக்கு தெரிவிப்பதாகவும் சொன்னார்கள்.அவ்வாறு நாங்கள் கவனித்த பிழைகளில் ஒன்று– ஆதிச்சநல்லூரில் நீத்தாரை எரிக்கவும் செய்வார்கள் என்றிருந்த குறிப்பு.
அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு மூலையிலும் அதற்கான உழைப்பு மிளிர்கிறது.தொடக்கத்தில் சில போதாமைகள் இருப்பது தவிர்க்க இயலாதது.அரசு விரைந்து சரி செய்ய வேண்டியது என தோன்றியவை:

----- வெய்யில் விளையும் நிலம். அருங்காட்சியகம் மலையில் அமைந்திருப்பதால் வெப்பத்தை இன்னும் கூடுதலாக உணர முடிகிறது. நடைபாதைகளில் நிழற் கூரை அமைக்கப்பட வேண்டும்..குடிநீர் வசதிகள் போதாது.

----- வழிகாட்டுப் பலகைகள் போதிய அளவில் வைக்கப்பட வேண்டும்

----- வருகையாளர்கள் அமர்வதற்கு போதிய அளவில் இருக்கைகள் நிழல் கூரையுடன் அமைக்கப்பட வேண்டும்.

----- தமிழ்நாடு/ஒன்றிய தொல்லியல் துறையின் வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும்

---- நொறுவை,குடிப்புகளின் விலை கூடுதலாக உள்ளது

---- திரையரங்கிற்கு வெளியே காத்திருப்போர் கூடத்தின் இடவசதி போதாது.இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்

---- காட்சிக் கூடங்களில் அமர்த்தப்பட்டுள்ள வழிகாட்டிகள்/விளக்குநர்கள் போதாது.இருப்பவர்களுக்கும் போதிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்

---- ஒவ்வொரு அகழாய்வு மாடங்களின் உச்சியில் அவ்வூரின் பெயரை பெரிய பலகையில் பொறித்து நிறுவினால் வருகையாளர்கள் தடுமாற்றமில்லாமல் செல்ல இயலும்
----.பரிமாண அரங்குகளில் காட்சிகளின் போது பார்வையாளர்கள் மீது நீர் தூவப்படுவதால் செல்பேசிகளை பத்திரப்படுத்தும்படி அறிவிக்க வேண்டும்

---அய் பரிமாணக் காட்சிகளில் இருக்கைகளை அங்குமிங்கும் புரட்டுவதைத் தவிர்க்க வேண்டும்

வளாகத்தில் சில இடங்களில் இன்னும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.பார்வையாளர்களுக்கு மேம்பட்ட வசதிகள் கிடைக்கும் என நம்பலாம்

நமது தொன்மையும் பழைமையும் இன மேட்டிமை அகம்பாவத்தையும் தேசிய வெறியையும் உண்டாக்கி ஏனைய மனிதர்களை ஒதுக்கி நிறுத்துவதற்கல்ல. வேத புராண பதாகையின் கீழ் வரும் வரலாற்றுப் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்களை மேலாதிக்கத்தை முறியடிக்க இது போல நிரந்தர ஏற்பாடுகள் தேவை என்னும் நிலையில் தமிழ் நாட்டரசிற்கு நன்றியும் பாராட்டுக்களும்!!!

21/10/2025

நாற்பது நாடுகளுக்கு பயணித்த சஞ்சாரியான காஞ்சங்காடு சி.முஹம்மது குஞ்ஞு -- நேர்காணலின் ஒரு பகுதி.

20/10/2025

An Evening Train in Central
ஆங்கிலத்தில் கவிதை எழுதியவர் : எம்.நவ்ஷாத்
தமிழாக்கம்: ஆஷிர் முஹம்மத்
குரல்:சாளை பஷீர்
---------------------------
இப்பயணத்தில்
தனியனாக
இருக்கிறேன்
நான்
அதே
இலக்கை
நோக்கிச் செல்லும்
பயணிகளும்
நண்பர்களும்
கூட
இருப்பினும்
கடுமையான
தனிமையில்
உழல்கிறேன்
நான்
காரணம்
நீ
இங்கு
இல்லை.
நீ
என்னிடமிருந்து
விடைபெற்றுக்கொண்ட
கணத்திலிருந்து
நான்
தனிமையிலேயே
இருக்கிறேன்
உண்மையில்
நான்
உன்னைப் பார்த்த
கணத்திலிருந்து.
நீ
நிகழ்ந்தபொழுது
ஏனைய
அனைவரையும்
இழந்தேன்
நீ
நிகழ்ந்தபொழுது
மற்றெல்லாவற்றையும்
அடைந்தேன்
உன்
மூலம்
நான்
என்னை
இழந்து
என்னைக் கண்டடைந்தேன்.
தடங்கள்தோறும்
கீதங்கள்
பெட்டிகள்
நிறைய
மாந்தர்கள்
முகங்கள்
நிறைய
சிரிப்புடனும்
கதைகளுடனும்
மலைகளும்
சமவெளிகளும்
ஆறுகளும்
ஐன்னலுக்கு
வெளியே
நீந்திக்கொண்டிருக்கின்றன
ஓர்மைகளும்
கனவுகளும்
விரைந்து
பாய்கின்றன
அகத்தில்.
நகரங்கள்
கிராமங்கள்
ஆண்கள்
பெண்கள்
குழந்தைகள்
கடந்து
செல்கின்றனர்
சுரங்கங்களும்
இரவுகளும்
எழுந்து
பரவுகின்றன
நான்
உன்னுடைய
நினைவையேப் பற்றிக்கொண்டேன்
ஒரு
காலத்தில்
நமது
பாதைகள்
சந்தித்துக் கொண்டதற்காக
நான்
நன்றியுணர்வால்
நிறைகிறேன்
நீ
என்னை
ஒரு
சுரங்கத்திலிருந்து
வெளிப்படுத்தி
உனது
ஒளியை
நான்
இன்னும்
ஏந்திக்கொண்டிருக்கும்
ஓர்
இருளுக்குள்
என்னை
மூழ்கடித்ததைக் கொண்டு
நான்
நிறைவுறுகிறேன்.
An Evening Train in Central Sri Lanka
🌸
Written by Muhammed Noushad
Translated into Tamil by Ashir Muhammad
Narrated by Salai Basheer
🌸
I am alone in this journey -
surrounded by fellow passengers,
even friends going to the same destination;
and yet alone, terribly alone,
because you are not here.
Loneliness is the gift you gave me:
my beautiful, painful, profound loneliness.
Ever since you said goodbye,
I have been alone;
in truth, ever since I knew you.
I lost everyone else when you happened.
I gained everything else when you happened.
I lost myself and found myself through you.
Tracks are full of songs,
compartments full of people,
faces full of smiles and stories.
Hills, valleys and rivers float beyond the window.
Memories and dreams rush past inside.
Towns and villages,
men, women and children pass by.
Tunnels and nights emerge.
I hold on to your memory.
I am grateful we once shared a path.
I am content you guided me out of a tunnel -
and into another night,
where I still carry your light.

அன்றாடங்களின் கண்டடைதல்கள் --- 2காஞ்சங்காட்டிலிருந்து அன்றிரவு கோழிக்கோடு வந்தடைந்தோம். அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரியொன்ற...
18/10/2025

அன்றாடங்களின் கண்டடைதல்கள் --- 2

காஞ்சங்காட்டிலிருந்து அன்றிரவு கோழிக்கோடு வந்தடைந்தோம். அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரியொன்றில் இரவு தங்கல். அதன் ஆய்வு மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலும் நடந்தது. கோழிக்கோட்டின் அலைச்சலும் அயர்வும் மிக்க மறு நாள் பகலிலிருந்து கிடைத்த ஓய்வென்பது கோட்டயத்திற்கான தொடர்வண்டியில் ஏறிய பிறகுதான்.

சாலிஹ் பணி நிமித்தம் ஊர் செல்ல வேண்டியிருந்ததால் கொல்லம் வழியாக ஊருக்குத் திரும்பினார். நானும் அன்சாரும் கோட்டயத்தில் பின்னிரவு நான்கரை மணிவாக்கில் இறங்கினோம். நல்ல மழை. கிழக்கு வெளுத்த பிறகே வண்டியேறும்படி ஜிபின் தெரிவித்திருந்தார்.

கோழிக்கோடு நவ்ஷாத் மூலமாகவே ஜிபின் அறிமுகம்.நாங்கள் போகவிருக்கும் இடத்திற்கு ஜிபினின் உதவியின்றி போவது கடினம் என நவ்ஷாத் தெரிவித்திருந்தபடியால் பயணத்தை திட்டமிட்டே அன்றே ஜிபினிடமும் பேசி விட்டோம்.

இரண்டு மணி நேர அவகாசமிருந்ததால் சுபஹ் தொழுகையுடன் குளியலையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக தொடர்வண்டி நிலையத்தின் அருகிலுள்ள பள்ளிவாயிலுக்கு விரைந்தோம்.மழை தூறலுக்கு மாறியிருந்தது. அப்பரந்த பள்ளியில் இமாமுடன் நாங்களிருவரும் எங்களைப்போல பயணி ஒருவரும் இணைந்து கொள்ள மீதமுள்ள வெளி அஸ்ஸாமைச் சார்ந்த அந்த இமாமின் இனிய ஓதலால் நிறைந்தது.

கோட்டயம் கிறித்தவர்கள் கணிசமாக வாழும் நிலம் என்பதைப்போலவே நல்ல கேக்குகளின் நாடும் கூட.2019 இல் வைக்கம் முஹம்மதுபஷீரின் பிறந்தகத்தைப் பார்ப்பதற்கு நானும் ஞானக்குழந்தை ஆசிர் முஹம்மதுவும் வந்த பிறகு மீண்டும் இப்போதுதான் வருகை.அப்போது ஒரு கடையில் நல்ல சுவையான பழக் கேக் வாங்கி சுவைத்தோம். அந்த இடமும் தலமும் நினைவிலில்லை.

இப்பள்ளிக்கு ஜமாஅத் உண்டா? எனக் கேட்டதற்கு அருகிலுள்ள முஸ்லிம் கடைக்காரர்களின் அனுசரணையிலேயே பள்ளிவாயில் பராமரிக்கப்படுகிறது என்றார் இமாம். அஸ்ஸாமியராக இருந்தாலும் மலையாளம் தெளிவாகப் பேசினார்.நாங்கள் குளிப்பதற்காக தனது அறையிலிருந்த வாளி,குவளையைத் தந்துதவினார்.

மழையின் இதமும் குளியலின் உற்சாகமும் தேநீருக்காக கடையைத் தேட வைத்தது. ஆறு மணிக்கெல்லாம் யாரும் இங்கு கடை திறப்பதில்லை என்றார்கள்.நேரே பேருந்து நிலையம் ஏகினோம்.அங்கே தலச்சேரி காக்கா ஒருவர் காசு மேடையில் தலையில் துணியிட்டு நறுமணக்குச்சி கொளுத்தி குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கிறார். நாங்கள்தான் முதல் வாடிக்கையாளர் போல. தேநீரைத் தொடர்ந்து உளுந்து வடை வந்து சேர்ந்தது.இனி காடு மலையேற போதுமான எரிபொருள் நிரம்ப பேருந்தில் முண்டக்கயம் சென்றோம்.ஒன்றரை மணி நேர ஓட்டம்.

முண்டக்கயத்தில் ஜிபின் எங்களோடு இணைந்துக் கொள்வதாகத் திட்டம்.அவர் வரும் முன்னரே நாங்கள் அங்கு போய் சேர்ந்து விட்டதால் காலை பசியாறை முடித்த கொஞ்ச நேரத்தில் அவரும் வந்திணைந்துக் கொண்டார்.அவருடன் சாஜூ என்ற கண்ணனூர்க்காரரும் வந்திருந்தார்.

ஜிபின் குருத்துவ பயிற்சியிலிருந்து இடை நின்றவர்.சமூக வாழ்க்கைக்காக மண வாழ்வை தள்ளிப்போட்டவர்.அஞ்சப்பம் என்ற சமுதாய உணவுக் கூடத்தில் அவருக்கு பொறுப்பாளர் பணி.அங்கு உணவருந்த வந்த இடத்தில்தான் சாஜுவும் ஜிபினும் நண்பர்களாகியிருக்கின்றனர்.

ரோமன் கத்தோலிக்கப் பிரிவின் கப்புச்சின் அவையைச் சார்ந்த அருட்தந்தை போபி ஜோஸ் கட்டிக்காட்டின் முன்னெடுப்பில் 2016 முதல் நடந்து வரும் சமூக அடுக்களைதான் ‘அஞ்சப்பம்’.

"ஆனால் எங்களிடம் அய்ந்து அப்பங்களுடன் இரண்டு மீன்கள் மட்டுமே உள்ளன!" என அவர்கள் விடையிறுத்தனர். "அவற்றை இங்கே கொண்டு வாருங்கள்" என அவர் கூறினார். பின்னர் அவர் மக்களை புல்லில் அமரச் சொன்னார். அய்ந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை நோக்கிப் பார்த்தவாறே இயேசு அவற்றை ஆசீர்வதித்தார். பின்னர் அப்பங்களைத் துண்டுகளாகப் பிட்டு, சீடர்களிடம் கொடுத்தார், அவர்கள் அதை மக்களுக்குப் பரிமாறினர்.” மத்தேயு 14:17-19.

இப்றாஹீமிய செமித்திக் நெறிகளில் ‘ஆசீர்வாதம்’, ‘பறக்கத்’ எனப்படும் இது போன்ற அற்புதங்களை தீர்க்கதரிசிகளின் வாழ்வில் நிறையக் காண இயலும்.

தனது ஏராளமான தோழர்களுக்கு அருந்தக் கொடுத்த ஒரு குவளை ஆட்டுப்பால், போரில் கொல்லப்பட்ட தோழரின் கடன்களை தீர்க்கும் விதத்தில் நிறுத்துக் கொடுத்த பிறகும் அளவில் குறையாத பேரீத்தம்பழக்குவியல் என முஹம்மத் நபிகளாரின் வாழ்வில் காணவியலும்.மறை வளம், திரை பெருக்கம் என்பன இறைப் பற்றுறுதியாளர்களால் மட்டுமே விளங்கிக் கொள்ளக் கூடிய அம்சம்.

விவிலியத்தின் அஞ்சப்பம் இப்பகுதிகளில் நிலம் கட்டிடத்துடன் அரிசியும் பருப்புமாக நிற்கிறது.

றாண்ணி,கோழஞ்சேரி,சங்கனாச்சேரி,நெய்யாற்றங்கரை எனப்படும் பகுதிகளில் இயங்கி வரும் அஞ்சப்பம் எல்லோருக்குமான ஊட்டுப்புரை.மதிய வேளையில் மட்டும் இயங்கி வரும் அஞ்சப்பத்தில் மரக்கறி உணவை மட்டுமே சமைத்தளிக்கின்றனர்.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்களைக் கொண்டு அமுது படைக்கப்படுகிறது. அமர்ந்து உண்ணுபவர்களும் சிப்பங்களாக வாங்கிச் செல்பவர்களும் உண்டு. அங்கு வைக்கப்பட்டுள்ள பேழையில் இயன்ற தொகையை செலுத்தி விட்டுச் செல்லலாம். கையில் ஒன்றுமில்லையெனிலும் அதையும் இங்கு யாரும் பொருட்படுத்துவதில்லை.

ஊட்டுப்புரையென்பது இந்திய மரபில் நெடுங்காலம் நடைமுறையில் உள்ள விடயமென்றாலும் பல நேரங்களில் ஹிந்து உயர் வகுப்பினருக்கு மட்டுமே கோயில்களில் உள்ள ஊட்டுப்புரையில் இடமிருந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பசித்த மானுடரனைவருக்குமான ஸுஃபி கான்காஹ்களின் லங்கர்கானாக்கள் எனப்படும் ஊட்டுப்புரைகளின் நீட்சியை தில்லி நிழாமுத்தீன் அவுலியா நினைவக வளாகத்திலும் துளு நாட்டின் உள்ளாள் செய்யது முஹம்மது மதனி வலிய்யுல்லாஹ் தர்காவிலும் ,சீக்கியர்களின் குருத்வாராக்களிலும் காணவியலும்.

முண்டக்கயத்திலிருந்து முரிஞ்சம்புழாவிற்கு பேருந்து ஏறினோம். கண்ணனூர் சாஜு சிறிய படவியுடன் தாங்கியையும் கொண்டு வந்திருந்தார். போகுமிடங்களில் காண்பவற்றை முக நூலில் பதிவேற்றுவதாகச் சொன்னார். கேரள அரசின் கருவூலத்துறையில் பணியாற்றி வரும் அவரும் அடிப்படையில் ஒரு சஞ்சாரி. மூன்று வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த குலசேகரப்பட்டினம் தசராவிற்கும் திருச்செந்தூர் கோயிலுக்கும் வந்து போயிருக்கிறார்.

என்னிடம் தேரிக்காட்டையும் சமணச்சிற்பங்களுள்ள கழுகுமலையையும் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். மாற்று வாழ்வியல், சூழலியல் துறைகளில் இயங்கும் அரசு சாரா அமைப்பிலும் இருப்பவராதலால் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குக்கூ காட்டுப்பள்ளிக்கும் போய் விட்டு அப்படியே ஆசிரமங்களின் பூமியான திருவண்ணாமலைக்கும் போய் வந்திருக்கிறார். ஓட்ட இணையரொருவர் கிட்டிய நிறைவு.

அரை மணி நேர ஓட்டத்தில் முரிஞ்சம்புழா வந்தது. கோட்டயம் மாவட்டத்திலிருந்து பத்தனம் திட்டா மாவட்டம் வழியாக இடுக்கி மாவட்டத்திலுள்ள முரிஞ்சம்புழாவிற்கு வரும் வழிகள் சபரி மலையின் அடிவாரப்பகுதிகளாகும்.

முரிஞ்சம்புழாவிருந்து இரண்டு இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நல்ல தண்ணி என்ற இடம். இது பிரபல சுற்றுலாத்தலமான பாஞ்சாலி மேட்டிற்கு போகும் வழியில் உள்ளது.ஆட்டோவில் போய் இறங்கினோம். இப்பகுதிகளில் நிறைய தமிழ்ப்பெயர்கள் காணக் கிடைக்கின்றன. மொழியால் நிலங்களை பிரித்து விட்டால் வேர் இல்லையென்று ஆகி விடுமா?.

அதொரு மலைச்சாலையின் கொண்டை ஊசி வளைவு.அங்கிருந்து. சில நூறு மீட்டர்களுக்கு மலையேற்றம். பாறைகள்,வேர் முண்டுகளுடன் வளைவும் திருப்பங்களுமான மலையேற்றத்தில் பிடிமானத்திற்காக வேண்டி ஆளுயர கழிகள் மரத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்தன.ஆளுக்கொரு கழியெடுத்துக் கொண்டோம்.விசும்பிற்கும் எங்களுக்குமிடையில் மரங்கள் கவிழ்ந்துக் கொண்டன.உலகம் இன்னொன்றாகியது.

வழிகாட்டியான ஜிபின் அணிலைப்போல தாவிச் சென்றார். வயதும் இளமை.முதுகிலும் கனமில்லை. எனது முதுகுப்பை பதினைந்து கிலோமட்டில் எடையிருக்கும்.உடலில் கொழுப்புடன் முதுகில் சுமையும் பாதையில் ஏற்றமும் ஒன்றிணைந்தால் மூச்சு முட்டல்தான். ஜிபினின் வேகத்திற்கு நானும் போனதால் இதயம் தன் எல்லையை அறிந்த கணம். நிதானித்துக் கொண்டேன்.

உயரே ஒரு புன்னகை வரவேற்றது. அருட்சகோதரர்கள் சன்னி ஜோனி பினோய் – மூன்ரு அருட் சகோதரர்களின் மலைக்குடில் அது. நாங்கள் போன நாள் ஞாயிறாக இருந்ததினால் கீழே குர்பானி,குர்பானா எனப்படும் திருப்பலி ஆராதனைக்கு ஜோனி சென்றிருந்தார்.சன்னி அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்.பினோய்தான் முழுப் புன்னகையுடன் எங்களை வரவேற்றார். இளஞ்சூட்டில் சீரக நீர் கொண்டு வந்து தந்தார்.

நிலங்களுக்கு மேல் ஒரு நிலத் தட்டு.வேர் முண்டு போலவும் நில மேல் கிழங்கு போலவும் நின்றிருந்தது அவர்களின் குடில். சிற்றுயிரிகளின் முயற்சியைப்போல் கொஞ்சம் பாறை,கொஞ்சம் மரம்,கொஞ்சம் இரும்பு,துணி,கல் நார் தகடு இவற்றால் அவர்களின் கைகள் கொண்டு சன்னஞ்சன்னமாக உருவாக்கப்பட்டக் குடில்.

முப்பது வருடங்களுக்கு முன்பு அதாவது 1996 ஆம் ஆண்டில் தங்களின் தனிப்பட்ட தியான தேவைகளுக்காக இங்கு அய்ந்து ஏக்கர் நிலம் வாங்கி உருவாக்கியுள்ளனர். அடிப்படையில் இம்மூவரும் ரோமன் கத்தோலிக்க கிறித்தவப்பிரிவின் சிறோ மலபார் அவையை சார்ந்தவர்கள். எல்லாக் கிறித்தவ அவையினருடனும் இம்மூவர்களுக்கும் நல்லுறவிருந்தாலும் அவையினரின் நிறுவனமயமும் இறுக்கமும் கெட்டித் தட்டலும் இந்த மலை ஒதுங்குமிடத்திற்கு கூட்டி வந்தது.

குடிலிலிருந்து மெலிந்த புகைப்படலம் வெளியேறுறிக் கொண்டிருக்க .மதிய உணவை சமைத்துக் கொண்டிருந்தார் பினோய். கஞ்சியுடன்(கேரளியர்களின் கஞ்சி என்பது வடிக்கப்படாத அரிசிச் சோறு) கீரை,துவையல்,பயறு என ஏதாவது ஒரு தொடு கறி உண்டு.

துறவிற்கும் தியானத்திற்கும் சரி வராதென அவர்கள் கருதுவதால் இங்குள்ள உணவில் இறைச்சி அறவேயில்லை. காட்டில் கிடைக்கும் பழங்கள்,காய்களுடன் என்றாவதொரு நாள் மலை ஓடையில் பிடிபடும் மீனும்தான் அவர்களின் உணவு. ஒருவேளைக்கென சமைத்ததை மற்ற வேளைகளுக்கும் பயன்படுத்திக் கொள்வர். வருகையாளர்களுக்கு மட்டும் சுடு கஞ்சி உண்டு.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இரண்டு இளம் அருட் சகோதரர்கள் வந்திணைந்துக் கொண்டனர். அவர்களும் பகலில் வந்து குடிலின் தேவைகளைக் கவனிப்பதுடன் வரும் வருகையாளர்களையும் உபசரிக்கின்றனர். அந்தியில் வீட்டுக்குப் போய் விடுவர்.

கொஞ்ச நேரத்தில் ஜோனி வந்து சேர்ந்தார்.ஜோனி உட்பட மலைக் குடிலின் அனைவரிடமும் குறைவில்லாத புன்னகையுடன் அன்பும் எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

ஜோனியுடன் அவரது ஆன்மீக வாழ்க்கைப் பற்றியும் சில ஆன்மிக விடயங்களையும் குறித்து உரையாடிக் கொண்டிருந்தோம்.

ரோமன் கத்தோலிக்க அவையின் ஃபிரான்ஸிஸ் அசிசி என்ற புனிதர் இத்தாலியைச் சேர்ந்த பதின்மூன்றாம் நூற்றாண்டு காலத்தவர்.அவரை முன்மாதிரியாகக் கொள்ளும் மலை வாச அருட் சகோதரர்கள் மூவரில் ஜோனியை முதலில் இப்பக்கம் கொண்டு வந்தது “உன்னை நீ அன்பு கூர்வது போல பிறரையும் அன்பு கூர்” என்ற விவிலிய வசனமாக இருந்திருக்கிறது.

பல நாட்கள் இவ்வசனத்தை தியானித்து அழுதிருக்கிறார். வெளியோசையில் கர்த்தரின் அழைப்பை தவற விட்டு விடாமலிருக்க மலை பக்கம் ஒதுங்கலை தேர்ந்திருக்கின்றனர்.

புனித ஃபிரான்ஸிஸ் அசிசி பிரபஞ்ச உறுப்புக்களை கதிரவனை நிலவை சகோதர உறவில் பார்த்தவர். ஏழ்மையையும் ஈதலையும் ஆசித்தவர்.இயேசு யாருக்காக பாடுகளை ஏற்றாரோ அவர்களை நேசிக்காமல் தனது இறை பற்றுறுதி முழுமையடையாது என நம்பியவர். கிறித்தவ துறவு நெறிக்கு பல முன்னோடிகள் இருந்தாலும் புனித ஃபிரான்ஸிஸ் அசிசியின் பங்கும் இதில் தலையாயது.

ஏழ்மையை செல்வமாக ஜோனி பார்ப்பது இப் பின்னணியில்தான்.சமைப்பதற்கு அரிசி இல்லை, முகம் மழிக்க சவரக்கத்தி இல்லையே எனத் தோன்றும் நாட்களில் வருகையாளர்களில் யாராவது இவற்றைக் கொண்டு வந்திடுவர். தங்களது தேவைகள் ஒரு போதும் கேட்கப்படாமலிருந்ததில்லை. பிறருக்கு கொடுக்குமளவிற்கு அரிசி உபரியாக உள்ளதாகச் சொன்னார்.

மின்னிணைப்பு,செல்பேசி என நவீன வசதிகள் எதுவுமில்லை. மேலடுக்கில் உள்ள குடிலில் இரு அறைகள் உள்ளன. சமையல் கூடம், விவிலிய வகுப்பறை படுக்கையறை என மூன்றும் இரண்டிலாகி இருக்கின்றன. ஆங்காங்கே உள்ள பாறைத்திட்டுக்களில் வருகையாளர்கள் அமரவியலும்.

ஓராள் மட்டுமே அமரக் கூடிய ஜோனியின் தியான அறை இந்நிலத்தட்டின் இரண்டாம் அடுக்கிலுள்ளது. அவ்வறைக்கு முன்னதாக குளிப்பதற்கான சிறிய தடுப்புடன் கூடிய வளைவை அமைத்துள்ளனர். முதல் அடுக்கில் துணி உலர்த்துவதற்கான இடம். மூன்றாம் தட்டில் கழிப்பறை. மலையோடைகளில் இடப்பட்டுள்ள ஞெகிழிக் குழாய்கள் மூலம் போதிய நீர் வருகிறது. தொட்டிகளில் நீரை சேமித்துக் கொள்கின்றனர்.பாறையடுக்குகளில் கால் பாவி மூன்று அடுக்குகளுக்கும் போய் வர வேண்டியதுதான்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நான்கைந்து பாதிரிகளும் ஓர் இணையரும் வந்து சேர்ந்தனர்.ஞாயிற்றுக்கிழமை என்பதால் இவ்வளவு பேர் வந்திருக்கக் கூடும். மற்ற நாட்களில் எப்படியோ தெரியவில்லை.

இம்மூன்று அருட் சகோதரர்களும் நினைத்திருந்தால் இந்த முப்பதாண்டுகளுக்குள் இதொரு சிமிட்டி, காரையினால் ஆன நவீன ஆன்மிக உலாத்தலமாக மாறியிருக்கும்.

பெரும்பாலான நாட்களில் ஜோனி தனிமைத் தியானத்தில் இருப்பவர். அந்நேரம் யாருடனும் உரையாடுவதில்லை,. வருகையாளர்கள் மற்ற அருட் சகோதரர்களுடன் பேசிக் கொள்ள வேண்டியதுதான்.இத்தனை காலங்களில் தனக்கு ஒருபோதும் சலிப்பே ஏற்பட்டதில்லை என்ற ஜானிக்கு வயதுஅய்ம்பத்தியொன்பது.

உரையாடல் வேகம் பிடிக்கத் தொடங்கும்போது மற்ற வருகையாளர்கள்அவருக்காகக் காத்திருந்ததைக் கண்டதால் உரையாடலை நிறுத்திக் கொண்டோம்.

கிறித்தவ நெறியின் தொடக்கத்தில் காணப்படாத துறவு வழிமுறை பின்னர் வெளி சித்தாந்தங்களின் தாக்கத்தினாலும் அரசியல் காரணங்களினாலும் நுழைந்து கொண்டது.இகத்துக்கும் பரத்துக்கும் வழி காட்ட வந்த கிறித்தவம் சீசருக்கும் கர்த்தருக்குமாக இக பர அப்பங்களை தனித்தனியாக வகிர்ந்து கொண்டது.

நாங்கள் புறப்பட வேண்டியிருந்ததால் அவசரமாக எங்களுக்கு தேங்காய்ப்பொடியுடன் கஞ்சிச் சோறு வந்தது. தேங்காய் சம்பந்திப் பொடி மட்டுமே எனக்கு போதுமானதாக இருந்தது. அத்தனை சுவை. வீட்டுக்கு போய் செய்து பார்க்க வேண்டும்.நான் எப்போதும் சோறின் அளவை விட கறியை கூடுதலாக உண்பவன் என என் உம்மா சொன்னது இன்று வரை மாறவேயில்லை.

புறப்படும் போது மலைக்குடிலின் அனைத்து சகோதரர்களும் இறுகக் கட்டியணைத்துக் கொண்டனர். நிபந்தனையற்ற அன்பின் மூலம் உலகை சொந்தமாக்கிக் கொண்டவர்களுக்கு அய்ந்து ஏக்கர் நிலம் என்பது வெறும் எண் மட்டுமே.

அன்சார் எர்ணாகுளத்தை நோக்க சாஜு தன் பணியிடத்தை நோக்க நான் ஜிபினுடன் அவரது இல்லம் சென்று அன்றிரவு தங்கினேன். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தபடி தொடர் வண்டி சேரும் நேரம் சரிவராதென்பதாலும் நெருக்கடியின்றி மலை தியானக்குடிலை பார்க்க வேண்டும் என்பதனால் இம்முடிவு.

ஜிபினின் இல்லம் உலக இலக்கியங்களால் நிறைந்துள்ளது. மலை தியானக் குடில் செல்கையையும் அதன் நினைவுகளையும் ஜிபினின் வீட்டை சுற்றியுள்ள ஏகாந்தமும் அப்பொழுது பெய்த மழையும் அவர் போட்டுத் தந்த வரக்காஃபியும் வெறுந்தேயிலையும் இன்னும் ஆழப்படுத்தின.

(நிறைவு)

ஒளிப்படங்கள் நன்றி: kudukkil

Address

Chennai

Telephone

+919962841761

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rihla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share