09/03/2023
'கொன்றால் பாவம்'
சமீப காலமாக பெரிய பொருட்செலவில் தயாராகும் படங்களை விட, சிறிய அளவில் உருவாகி வெளிவரும் படங்களே என்னை அதிகம் ஈர்க்கின்றன. பெரிய நடிகர்களின் கூட்டணியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில், ஸ்டார் கலைஞர்களின் பங்களிப்பு இருப்பதால் ஒரு சிறிய அலட்சியம் வந்துவிடுகிறதோ என்று தோன்றுகிறது. கொன்றால் பாவம் - எளிமையாகத் தயாரான, ஆனால் வலிமையான திரைக்கதையாக நின்றுவிட்ட திரைப்படம். சுமார் 100 வருடங்களுக்கு முன்பு 22 நிமிட நாடகமாக மேடை கண்ட கதையை தனது அனுபவத்தால், திறமையால் ஒரு சிறந்த Seat on the edge த்ரில்லராக உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன். அக்மார்க் தமிழரான இவர் இதுவரை 18 கன்னடத் திரைப்படங்களை, ஒரு தெலுங்குப் படத்தை இயக்கி, 5 படங்களில் நடித்து, 8 படங்களைத் தயாரித்து முடித்திருந்தாலும், தனது தாய் மொழியில் முதல் படமாக இதை வெளியிடுவதில் பெருமைப் படுகிறார். இரண்டு மாநில விருதுகள், தேசிய விருது என அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், இதையும் தன் முதல் படைப்பு போலவே பயபக்தியோடு செதுக்கியிருக்கிறார். நான் சிறு வயதில் இப்படிப் பார்த்து வியந்த ஆனால் வணிக ரீதியாக கொண்டாடப் படாமல் வருத்தப்பட வைத்த படம் என் ஆதர்ச இயக்குநரான அய்யா திரு K. பாக்யராஜ் அவர்களின் "விடியும் வரை காத்திரு". இதோ அடுத்த உதாரணம்..ஒரு எளிமையான, சிறிய கதையை, கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் (அதுவும் ஜஸ்ட் 15 நாட்களில்) படமாக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு' கொன்றால் பாவம்'. ஒளிப்பதிவு, பின்னணி இசை, மிக முக்கிமாக பலம் பொருந்திய வசனங்கள் என ஒரு முழுமையான திரைப்படம். வாழ்த்துக்கள்./ கேரவன் M Arunachalam