16/06/2026
இதிகாச புராணங்கள் எவ்வளவு ஆபாசமானவை,அசிங்கமானவை,
அபத்தமானவை என்பதற்கு திருவிளையாடற் புராணத்தில் உள்ள ‘மாபாதகம் தீர்த்த படலம்’ ஒன்றே போதும்.
பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற்புரணத்தில் உள்ள 26 ஆவது கதைதான் மாபாதகந்தீர்த்த படலம்.
இந்தக் கதை ஒரு பிராமண வகுப்பு வயதுப் பையன், பெற்றேடுத்த தாயினை புணர்ந்து தந்தையைக் கொலை செய்ததால் வந்த மாபாதகங்களை( பாபங்களில் கொடூரமாக வர்ணிக்கப்படும் பிராமணர்களைக் கொல்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி உட்பட)சிவபெருமான் தீர்த்து, அப்பேர்ப்பட்ட பாவிக்கும் முக்தி அளித்ததாக கூறப்பட்டுள்ள கதை.
பெற்ற தாயினை புணர்ந்து தந்தையைக் கொலை செய்த மகனுக்கு சிவபெருமானே பரிகாரம் சொல்கிறார்.அருகம் புல்லை பசுமாட்டிற்கு அளித்து கோயிலில் அங்கப்பிரதக்ஷிணஞ் செய்தால் பிரம்மஹத்தி,வன்புணர்வு போன்ற கொடிய பாவம் நீங்கும் எனச் சொல்லும் ‘மாபாதகம் தீர்த்த படலம்’ போன்ற புராண இதிகாசக் கதைகளே பிரேமானந்தா, நித்தி,சிவசங்கர பாபா போன்ற பலரை உருவாக்கியுள்ளது.
இனி ஶ்ரீலஶ்ரீ.ஆறுமுக நாவலர் அவர்கள் எழுதிய “திருவிளையாடற் புராணம் வசனம்” எனும் நூலில் உள்ள கதையினை அப்படியே கீழே தருகிறேன்;
…….மாபாதகந்தீர்த்த படலம்…….
குலோத்துங்கபாண்டியன் அரசியற்றுநாளிலே, அவந்தி நகரத்தில் ஒரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி இரதியையும் வென்ற அழகுடையவள். அவளிடத்தில் ஒரு கொடிய பாவி பிறந்தான். அவன் காமமிகுதியினாலே தன் மாதாவை விரும்பினான்; அவளும் அதற்குடன் பட்டாள். அப்பெருங் கொடும்பாவி மாதாவைக் கலந் தொழுகும் ஒழுக்கத்தைப், பிதாக் குறிப்பினால் அறிந்து, பிறர் செவிப்படாவண்ணம் உள்ளத்தடக்கினான். வேறொரு நாளிரவில் வெளிப்படக்கண்டும், யாதொன்றும் பேசா னாயினான். அப்பொழுது மகன் அவனைக்கொல்ல எழுந்தான். மாதா: "நீ மாதிருகமனம் பண்ணினாய். பிதிர் கத்தியும் பண்ணினையாயின், என்னபாடுபடுவாய்" என்று சொல்லித் தடுத்தாள். அதற்கு அப்பாவி: "காமிகளுக்குப் பிதா மாதாக்களால் என்ன பயன்! இரக்கமாவதென்னை! தருமமாவதென்னை!" என்று சொல்லிவிட்டு, ஒரு மண் வெட்டியை யெடுத்துத் தன் பிதாவை வெட்டிக் கொன்றான்.
அப்பாதகன், அவ்விரவிற்றானே பிதாவைத் தகனஞ் செய்துவிட்டுக் கைக்கடங்கிய பொருளோடும், மாதா வோடும், மலைகள் பொருந்திய காட்டிற் புகுந்தான். அது கண்ட வேடர்கள், அவனையடைந்து, அவன் கைப்பொருளையும் அப்பார்ப்பனியையுந் தாங்கள் கொண்டுபோயினார்கள். தூரத்தே சென்று நன்றாக வாழலாம் என்று அவனெண்ணிய எண்ணமொன்று, அவனுக்கு நிகழ்ந்த வண்ணமொன்று. "நாமொன்றெண்ணத் தெய்வமொன்றெண்ணியது" என்னும்
பழமொழி அவனிடத்தே பலித்தது. பிதிர்கத்தியானது பேயுருவாய் வந்து, அவனைப் பிடித்தது: அது "ஆவா” என்றழும்: "ஐயகோ! பாவம் பாவம்" என்னும்; கைகுலைத் தெறியும், நிழல்போல அவனை விடாது பின்பற்றும்; புண்ணிய தீர்த்தத்தினும் புண்ணிய தலத்தினும் பெரியோர் பக்கத்தினும் அவனைச் செல்லவொட்டாது; சிவநாமமுஞ் சிவகீர்த்தியும் அவன் செவிப்புகவொட்டாது; அவன் மனம் புகவொட்டாது; அவன் நாக்குச் சொல்லவொட்டாது; நித்திரைசெய்யவொட்டாது; அவனை முற்பக்கத்தினும் பிற்பக்கத்தினும் வலப்பக்கத்தினும் இடப்பக்கத்தினுஞ் சூழ்ந்து அவன் கொடுக்கைப்பிடித்து நின்றிழுக்கும். இப்படியே மாபாதகத்தினால் அலைந்து, "என்செய்வேன் என்செய்வேன்?' என்று பெருந்துயருழந்து நெடுநாள் உலகெங்கும் திரிந்தான். சிவபெருமானுடைய திருவருளி னாலே, தன் பாதகம் நீங்குநாள் அணுக, மதுரையை அணுகினான்.
அப்பொழுது பெருங்கருணைக்கடலாகிய சோம சுந்தரக்கடவுள், வேடவடிவங்கொண்டு, வேட்டுவிச்சி வடிவங்கொண்ட மீனாட்சியம்மையாரோடு, திருக்கோபுரத்தின் பக்கத்திலே சூதாடிக்கொண்டிருந்தார். பெருந் துன்பத்துடனே அங்கேவரும் பாதகனது வரவைப் பார்த்து, மீனாக்ஷியம்மையாரை நோக்கி: "ஒருவரும் மனத்தாலும் நினைத்தற்கரிய கொடிய பாவி வருவதைப் பார். காமத்தால் விழுங்கப்பட்டவருடைய மனம், இது செல்லத்தகுமிடம் இது செல்லத்தகாதவிடம் என்னும் பேதமறிந்து செல்லாது; குலமுங் குணமும் ஒழுக்கமுங் குன்றுமென்பதையும், பழியும் பாவமும் வருமென்பதை யும் பாராது; உயிருக்கு உடனே இறுதி வந்து சேருமென்
பதையுஞ் சிந்தியாது; அறிவைக் கெடுப்பவை கள்ளுங் காமமுமென்பர். அவைகளுள்ளே, காமமானது நினைப்பி னுங் காணினுங் கேட்பினும், விஷத் தலைக்கொண்டாற் போல அறிவைக் கெடுத்துவிடும்; கள்ளோ அப்படிக் கெடுக்காது, உண்டபோது மாத்திரமே கெடுக்கும்; கொலை களுக்கெல்லாங் காரணங் காமமே; களவுகளுக்கெல்லாங் காரணங் காமமே; கள்ளுண்டலுக்குங் காரணம் காமமே; ஆதலினால்,நரகபூமியைக் காணியாகக் கொடுப்பது காமமே; என்று திருவாய்மலர்ந்தருளினார்.
கொலைப்பழியினாலே பெருந்துயருழந்து அங்கு வந்த பாதகனுடைய முகத்தைச் சிவபெருமான் பார்த்து: "அடா பார்ப்பானே! நீ வருந்தி மெலிவதென்னை" என்று வினாவி யருளினார். சிவபெருமானுடைய திருநோக்கத்தினாலே சிறிது பாவந் தீர்ந்து, தன்னறிவு தோன்றப் பார்ப்பான், தான் மாதிருகமனமும் பிதிர்கத்தியுஞ் செய்ததும், அந்தீப் பாவந் தன்னைப் பிடித்தலைத்து எங்கும் தீராதாகத் தான் இந்தநகரம் புகுந்ததும், எடுத்துச் சொல்லி, அழுதுகொண்டு நின்றான். வேட்டுவ வடிவங்கொண்டும் எல்லையில்லாத பேரருள் சுரந்து நின்ற பரமகருணாமூர்த்தியாகிய சிவ பெருமான், அப்பார்ப்பானைப் பார்த்து "இந்தப்பாவம் எங்கே போனாலும், இங்கேயன்றித் தீராது, உன்பெயரைச் சொன்னவரன்றி அவர் குலமும் நரகத்தில் விழும்வண்ணம் நீ செய்த இக்கொடும் பாவத்தை நீக்க வல்லவர் யாவர்! நாம் உன்மீது திருநோக்கஞ் செய்தலினால் இப்பாவம் எளிதில் நீங்கும்வண்ணம் ஒருறுதி சொல்வோம், கேள்: சூரியன் உதிக்குமுன்னே நித்திரை விட்டெழுந்து, அறுகம் புல்லுக் கொய்து, பசுக்களுக்குக் கொடுக்கக் கடவாய். திரிகாலத்தினுந் திருக்கோயிற் புறத்தொட்டித் தீர்த்தத்திலே ஸ்நானஞ்செய்து, சிவபெருமானை நூற்றெட்டுத் தரம் அங்கப்பிரதக்ஷிணஞ் செய்யக்கடவாய். சிவனடியார் களுக்குத் தொண்டு செய்யக்கடவாய். பிச்சையேற்று ஒரு பொழுது புசிக்கக்கடவாய். நீ இத்தவநெறியிலே நின்றா யாயின், இப்பாவம் நீங்கும்" என்று திருவாய் மலர்ந் தருளினார். அதுகேட்ட மீனாக்ஷியம்மையார்: "எம்பெரு மானே! அளவில்லாத காலம் இருபத்தெட்டுக்கோடி கரகத்தினும் விழுந்தானாயினும், உய்வகையில்லாத இக் கொடும் பெரும்பாவிக்கு, உய்வகை யருளிச்செய்த தென்னை!' என்று வினாவினார். அதற்குச் சிவபெருமான்: 'எத்துணைப் பெருங்கொடும் பாவத்துக்கும் அஞ்சாத நீசரேயாயினும், நினைப்பினும் அவருக்கு அச்சம் விளைக்கும் இம்மிகப் பெருங் கொடும்பாவத்துக்கு அஞ்சாதவனாய்ச் செய்த பாதகத்தினாலே தொடக்குண்டு எங்குந் தீர்வின்றி வேறு களைகணுமின்றி வந்தடுத்தவனைக் காப்பதன்றோ காப்பு' என்று திருவாய்மலர்ந்தருளினார். மீனாக்ஷியம்மை யார்: "நீர் யாதொன்று செய்தற்குஞ் செய்யாமைக்கும் வேறொன்று செய்தற்கும் ஆற்றலுடைய கருணைவள்ளல். நீர் விரும்பினால் எத்துணைப் பாவிகளும் உய்யும் வண்ணஞ் செய்வது உமதருள் விளையாட்டன்றோ" என்று மகிழ்ச்சி யோடு விண்ணப்பஞ்செய்தார். உடனே சிவபெருமான் தேவியாரோடு மறைந்தருளினார்.
பார்ப்பான் அது கண்டு ஆச்சரியமடைந்து, சிவபெரு மான் அருளிச்செய்தபடியே தவவொழுக்கத்தை அனுட்டித்து, மூன்று மாதத்திலே மகாபாதகம் நீங்கித், தெய்வப் பிராமண வடிவமானான். சோமசுந்தரக்கடவுளுடைய திருவடிகளிலே பற்பல வடமொழி மாலைகளைப் பத்தி யோடு தொடுத்துச் சாத்தி, அத்திருவடிகளிற் சேர்ந்து
பேரின்பமுற்றான். இத்தீர்த்தம், மாதாவைப் புணர்ந்து பிராமணனும் பிதாவுங் குருவுமாயுள்ளவனைக் கொன்ற பாவத்தை நீக்கி முத்தியைக் கொடுத்ததென்றால், நீரிழிவு குட்டம் பெருவயிறு ஈளை வெப்பு முதலிய நோய்களைத் தீர்க்குந் தீர்த்தமென்பதோ இதற்கு மேன்மை! பார்ப்பானுடைய மகாபாதகத்தைத் தீர்த்தருளினமையை அறிந்து, குலோத்துங்க பாண்டியனும், மந்திரிமாரும், பாண்டிதேசத்தாரும், ஒழிந்த தேசத்தாரும், மேலுலகத் தாரும், ஆச்சரியமடைந்து: "உரையுணர்வு கடந்த பேரருளை இக்கயவன்மேல் வைத்த காரணம் யாதோ' என்று கண்ணீர் பொழிந்து, சோமசுந்தரக்கடவுளைத் துதித்துப் பேரானந்தப் பெருங்கடலின் மூழ்கினார்கள்.
உதவிய நூல்:
1.”திருவிளையாடற்புராண வசனம்”இயற்றியவர் ஸ்ரீலஸ்ரீ. ஆறுமுகநாவலர் அவர்கள்
#சனாதனலீக்ஸ்