14/01/2026
*நாயகம் (ஸல்) ஓர் காவியம்*
அல்லாஹ்வின் தூதரே!
*தாயிஃப் நகரில் உங்கள் பரக்கத் பொருந்திய (ஆசீர்வதிக்கப்பட்ட) திருமேனி இரத்தத்தால் நனைகின்ற அளவிற்கு கல்லெறியப்பட்ட அந்த நாளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*
அவர்களை சபிப்பதற்குப் பதிலாக, அவர்களின் சந்ததியினர் இஸ்லாத்தின் பால் நேர்வழி பெற வேண்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்தீர்கள்.
அல்லாஹ்வின் தூதரே!
*உஹுத் போரில் நீங்கள் காயமுற்ற நாட்களை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*
உங்கள் திருமுகத்திலிருந்து வழியும் இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே,
"யா அல்லாஹ், என் மக்களுக்கு நேர்வழி காட்டு, ஏனெனில் அவர்கள், அறியாதவர்களாக இருக்கின்றனர்..."
என ஆறுதலாய் பிரார்த்தனை செய்தீர்கள்.
அல்லாஹ்வின் தூதரே!
*இஸ்லாத்தின் பெரும் எதிரியான அபூ ஜஹ்லின் மகன், உங்களுக்கு எதிராக இரண்டு தசாப்தங்களாக போர் புரிந்த பிறகு, உங்களிடம் வந்த அந்த நாட்களை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*
அவருக்கு முன்னால் அவரது தந்தையைப் பற்றி யாரும் தவறாகப் பேச நீங்கள் அனுமதிக்கவில்லை; அவரை ஏற்றுக்கொண்டு மன்னித்தீர்கள்.
அல்லாஹ்வின் தூதரே!
*ஹிஜ்ரத்தின் போது ஒரு இஸ்லாத்தை ஏற்காத நபர், துரத்தியதால், ஒட்டகத்திலிருந்து விழுந்து உங்கள் அன்பு மகள் செய்யிதா ஜைனப் (ரலி) அவர்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்ட அந்த நாளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*
பல வருடங்களுக்குப் பிறகு, அதே மனிதன் உங்களிடம் தவ்பா செய்து (மன்னிப்பு கோரி) வந்தபோது, நீங்கள் அவரை மன்னிக்கத் தேர்ந்தெடுத்தீர்கள்.
அல்லாஹ்வின் தூதரே! *உங்கள் பாசமகள் செய்யிதா ருக்கையா (ரலி) அவர்களை, உங்கள் மீது கொண்ட பகையினால் அபூ லஹபின் மகன் விவாகரத்து செய்ததை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*
வருடங்கள், உருண்டோடின, அவன், பணிவுடன் உங்களிடம் வந்தான். அவன், உங்கள் குடும்பத்திற்கு இழைத்த துன்பங்களை நீங்கள் ஒருபோதும் நினைவுபடுத்தவில்லை - மாறாக, அவனை ஏற்றுக்கொண்டு மன்னித்தீர்கள்.
அல்லாஹ்வின் தூதரே!
*நீங்கள் கஃபாவை தவாஃப் செய்து கொண்டிருந்தபோது, ஃபதாலா என்பவர் உங்களைக் கொலை செய்யும் நோக்கத்தில் ஒரு கத்தியுடன் பின்தொடர்ந்த அந்த நாளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*
அவர் உங்களுக்குத் தீங்கு செய்ய நினைத்தார், ஆனால் அதற்குப் பதிலாக, உங்கள் பரக்கத் பொருந்திய (ஆசீர்வதிக்கப்பட்ட) கரத்தை அவரது இதயத்தின் மீது வைத்து, நுபுவ்வத்தின் (நபித்துவத்தின்) பார்வையாலும் கருணையாலும் அவரைத் தொட்டீர்கள். - அல்லாஹ் அவருக்கு நேர்வழியை வழங்கினான்.
அல்லாஹ்வின் தூதரே!
*உங்களுக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த 10,000 வீரர்கள் கொண்ட படையுடன் நீங்கள் மக்காவிற்குத் திரும்பிய அந்த நாளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*
ஒரு ஒட்டகத்தின் மீது தலை குனிந்தவாறு அந்த நகரத்திற்குள் நுழைந்து, "இது கருணையின் நாள், இரத்தம் சிந்தும் நாள் அல்ல" என்று கூறினீர்கள்.
அல்லாஹ்வின் தூதரே!
*உங்கள் பெரிய தந்தை செய்யிதுனா ஹம்ஸா (ரலி) அவர்களைப் போர்க்களத்தில் இழந்து, உங்கள் திருமுகத்தில் கண்ணீர் வழிந்த அந்த நாளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*
ஒரு நாள், அவரைக் கொலை செய்த (ஷஹீதாக்கிய) அதே மனிதன், உங்களிடம் மன்னிப்பு வேண்டியும் இஸ்லாத்தை நாடியும் வந்தான். அவர், உங்களுக்கு ஏற்படுத்திய ஆறாத வடுவுக்காக நீங்கள் பழிவாங்கியிருக்க முடியும், ஆனால் நீங்கள் அவரைப் பொருட்படுத்தாமல் மன்னிக்க முன் வந்தீர்கள்.
அல்லாஹ்வின் தூதரே!
*மக்களின் குற்றங்கள் பெரியதாக இருந்தன, ஆனால் உங்கள் கருணை ﷺ அதைவிடப் பெரியதாக இருந்தது.*
நீங்கள்,
எவ்வளவு மகத்தானவர்!
எவ்வளவு தூய்மையானவர்! எவ்வளவு பரிபூரணமானவர்!
-மவ்லவி,B.முஹம்மது சாதாத்,மன்பயீ.
இமாம், குராசானி பீர் மஸ்ஜித், அடையார்.