13/02/2023
எந்தப் பிரச்சினைக்கு எந்தளவு பெறுமானம் வழங்க வேண்டுமோ அந்தளவு பெறுமானம் வழங்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
சில பிரச்சினைகளுக்கு பல நாட்களாக கவலைப்படுவோம் ஆனால் அதற்கான தீர்வு ஒரு ஸஜ்தாவில் இருக்கும், அல்லது ஓர் ஏழைக்கு வழங்கப்படும் உணவுப் பொதியில் இருக்கும், அல்லது யாரும் அறியாது தனிமையிலே தஹஜ்ஜுதில் வடிக்கப்படும் ஒரு கண்ணீர் துளியில் இருக்கும், தாய் தந்தையின் உள்ளத்தை குளிரவைப்பதில் இருக்கும், உங்களுக்கு அநியாயம் இழைத்த ஒருவரை மன்னிப்பதில் இருக்கும், யாரையும் நாடாது என் ரப்பே எனக்குப் போதுமானவன் என்ற உங்கள் பிடிவாதத்தில் கூட இருக்கும், ஏன் அந்தப் பிரச்சினையே என் பாவத்தால் தான் எனக்கு வந்தது என்று எண்ணி என்னை நான் திருத்திக் கொள்ள வேண்டுமென்ற அந்த தூய எண்ணத்தில் கூட இருக்கலாம்.
காசு பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிப் பழகிய எமக்கு எமது ரப்பிடமிருந்து எதனை எப்படி வாங்க வேண்டுமென்பது தெரியாமல் போய் விட்டது மட்டுமல்ல, அப்படி சொல்லப்படும் கருத்துக்களையே அந்நியமாக பார்க்கின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதற்காகவே முதலில் நாம் பாவமன்னிப்புக் கோரவேண்டும்.
நன்மைகள் உங்கள் சுமைகளைப் போக்கும் ஆற்றல் பெற்றவை, எந்த நன்மை எந்த சுமையைப் போக்கும் என்பது எமக்கு தெரியாது.
முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி