25/03/2023
இந்தக் காட்சி மிகப்பெரிய மகிழ்ச்சி தருகின்றது.
பெண்கள் ஸ்கூட்டியை நிறுத்த ரோட்டில் காலைத் தேய்த்துதான் ப்ரேக் போடுவார்கள் எனும் பகடி பரவலாக இருக்கும் சமூகத்தில், பேருந்து ஓட்டும் இந்தக் காட்சி சிலருக்கு மிகப் பெரிய நம்பிக்கையைத் தரும். உந்துதலாகவும் இருக்கும்.
கோவை வடவள்ளி ஆட்டோ ஓட்டுனரின் மகளான 24 வயது ஷர்மிளா தனியார் பேருந்தில் (தடம் எண் 31) பணி புரிகிறார். வாய்ப்பளித்திருக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
அசோக் லைலேண்ட் நிறுவனம் நாமக்கல் நகரில் தனது CSR நிதியில் மிகச் சிறந்த ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி ஒன்றினை நடத்தி வருகின்றது. முறையாக, நுணுக்கமாக ஓட்டுனர் திறனை வளர்த்துக் கொடுக்கும் பயிற்சி நிலையம் அது. அனைத்து வகை வாகனங்களையும் இரவு நேரத்தில் ஓட்டுதல், மலைப்பாதையில் ஓட்டுதல் உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் தேர்ந்த பயிற்சியளிக்கின்றது. தேவையுள்ளோர் தேடி விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி பெற வருகின்றவர்களில் 90% ஆண்கள், 10% பெண்கள். அந்தப் பெண்களில் பலர் பொறியியல் படிப்பு முடித்து எதிர்காலத்தில் MVI பணிக்குச் செல்லும் நோக்கில், அதற்கான தகுதியாகவே பயிற்சி எடுக்க வந்திருந்தனர்.
ஆட்டோ, டாக்ஸி, மெட்ரோ ரயில், விமானம் ஆகியவற்றில் பெண் ஓட்டுனர்கள் / பைலட்கள் வந்துவிட்டாலும், சாலைகளில் கனரக வாகனங்களில் அவ்வளவாக இல்லை. சங்ககிரி மற்றும் நாமக்கல்லைச் சார்ந்த ஓரிரு லாரிகளில் பெண் ஓட்டுனர்கள் உண்டு.
1993ல் வசந்தகுமாரி என்பவர் அரசுப் பேருந்தில் முதல் பெண் ஓட்டுனராக நியமிக்கப்பட்டதை அறிவோம். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார் என நினைக்கின்றேன். அவருக்குப் பிறகு, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண் ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டார்களா எனத் தெரியவில்லை.