20/02/2022
டொரினோ நினைவுகள்....
மதுரை மக்களின் மனங்களைத் தொட்ட ஒரு உள்ளூர் குளிர்பானம் உண்டு என்றால் அது டொரினோ தான். எண்பது மற்றும் தொண்ணூறுகளில் தமிழகத்தின் மூலை முடுக்களிலெல்லாம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய பானமாக 'டொரினோ' திகழ்ந்தது. தொண்ணூறுகளுக்கு பின்பு வந்த உலகமயம் உள்ளூர் தொழில்களை நசுக்கியதில் நம் உள்ளூர் பானங்கள் பல கடும் நெருக்கடிகளைச் சந்தித்தன, பெரு துயரங்களை அனுபவித்தன.
டொரினோ வகை குளிர்பானங்களை மதுரை மக்கள் கலர் என்றே அழைப்பார்கள். வீட்டுக்கு விருந்தாடி வந்துவிட்டால், கல்யாண பத்திரிக்கை கொடுக்க யாராவது உறவினர் வந்துவிட்டால் உடனே “போய் கலர் வாங்கிட்டு வாங்க” என்ற உத்தரவு பறக்கும், குழந்தைகள் அருகில் இருக்கும் பெட்டி கடை நோக்கி பறப்பார்கள் என்றால் மிகையில்லை. கலர் என்றாலே அது டொரினோ தான். திருவிழாக்கள், திருமணம், நிச்சயதார்த்தம் நடைபெறும் மங்கள வீடுகள், சினிமா கொட்டகைகள், பேருந்து நிறுத்தங்கள் என எங்கு சென்றாலும் டொரினோ டொரினோ டொரினோ தான். மதுரை பெரியார் பேருந்து நிலையம் முழுவதும் டொரினா பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி கண்களில் வந்து மறைகிறது. சினிமா தியேட்டர்களில் இடைவேளை நேரத்தில் டொரினோவின் கண்ணாடி பாட்டில்களின் மீது எழுப்பப்படும் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ஒலி காதில் விழுகுறது.
இதை எல்லாம் விட 1985ல் மதுரையில் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடை பெற்றது. அந்த அறுவை சிகிச்சை முடித்து வெளியே வந்து நினைவு திரும்பியதும் நான் குடித்த முதல் பானம் டொரினோ தான். மதுரையில் எல்லா மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சைக்கு வாங்க வேண்டிய பொருட்கள் என்று மருத்துவமனையில் கொடுப்பார்கள், அதில் டொரினோ என்கிற இடம்பெறாத சிட்டையே இருக்காது. இது தான் இந்த கலர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு. காய்ச்சல், வயிற்று வலி என்று எதுவென்றாலும் டொரினோவே ஏழைகளின் மருந்தாக இருந்தது.
இன்று விற்கும் குளிர்பானங்களை அதிகமாக குடிக்கும் குழந்தைகள் எல்லாம் கடும் நோயாளிகளாகவே மாறும் காலத்தில் நாம் வாழும் போது டொரினோவின் நினைவே தித்திக்கிறது.
ஆரஞ்சு வண்ண 'டொரினோ' வை பற்றிய உங்கள் நினைவுகளை பகிருங்கள்....
-அ.முத்துக்கிருஷ்ணன் #கொலபசி
#டொரினோ