17/02/2025
புதுச்சேரி நகரத்திற்கு தேவையான குடிநீருக்கு பாகூர், வில்லியனூர் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது பற்றி பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு.....
புதுச்சேரி நிலத்தடி நீர் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (சட்டம் எண் 2/2003), 2002 செயல்படுத்திட புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணயத்திற்கு ஒரு தலைவர், சர்வே, ஆய்வு, மேம்பாடு, நிர்வாகம் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு ஆகியவற்றில் அனுபவம் உள்ள 5 அரசு சார்ந்த (அதிகாரிகள்) உறுப்பினர்கள் மற்றும் நிலத்தடி நீர் சார்ந்த சிறப்பு அறிவுத்திறன் அல்லது அனுபவம் உள்ள 3 அரசு சாராத உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த ஆணையத்திற்கு பல வருடங்களாக உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. வேளாண்துறை செயலர் தலைவராகவும், ஒரு வேளாண் துணை இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் செயல்படுகின்றனர். இப்படி முழுமையாக இல்லாமல் உள்ள ஆணையத்திற்கு என்ன அதிகாரம் இருக்க முடியும். மேலும், உறுப்பினர் செயலராக உள்ளவர் வேளாண் பொறியியல் பட்டதாரி. இவர் நிலத்தடி நீர் பற்றி தெரிவிக்கும் கருத்தினை பசுமைத் தீர்ப்பாயம் எப்படி எடுத்துக் கொள்ளமுடியும். அதேபோல் மத்திய நிலத்தடி நீர் ஆணையம், சென்னை 2014ல் நடத்திய ஆய்வினை எப்படி இப்பொழுது உள்ள சூழலுக்கு ஏற்றுக் கொள்ள முடியும்.
ஆனால், அனைத்துவிதமான ஆய்வுகளையும் செய்து தமிழ்நாடு, கண்டமங்கலம் ஃபிர்க்காவினை "*Semi critical firka*" என்று அறிவித்துள்ளது. அதாவது, 70 முதல் 90 சதம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதியாகும். மேலும், நிலத்தடி நீர் ஆதார மதிப்பீடு கமிட்டி, இப்பகுதியை "*கருமை வட்டாரம்*" என்று அறிவித்துள்ளது. அதாவது நிலத்தடி நீர் 85 சதம் மேல் உறிஞ்சப்படுவதாகவும், அதனால் மிகவும் சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்று இப்பகுதியை வரையறுக்கிறது. எனவே, பாகூர், வில்லியனூர் மற்றும் திருக்கானூர் பகுதிகள் அதிகளவு நீர் உறிஞ்சப்படும் பகுதிகளாகும்.
இப்படி தமிழகத்தில் வல்லுநர்கள் ஆய்வு செய்து அறிவித்ததை கணக்கில் கொள்ளாமல், உறுப்பினர்களே இல்லாமல் செயல்படும் புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் மற்றும் நிலத்தடி நீர் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாத வேளாண் பொறியியல் படித்த உறுப்பினர் செயலர் கொடுக்கும் தரவுகளை வைத்து பசுமைத் தீர்ப்பாயம் இப்பிரச்னையை அணுகியுள்ளது.
புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் முழுமையாக உறுப்பினர்கள் இல்லாமல் செயல்படுவதன் காரணத்தால் ஏறக்குறைய 8,000 ஆழ்குழாய் கிணறுகள் பதிவு பெற்று ஒழுங்குப்படுத்தப்படாமல் உள்ளது. புதுச்சேரி நகரப்பகுதிகளை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள், தண்ணீர் உறிஞ்சுவது கண்காணிக்கப்படாமல் உள்ளது. கடல் பகுதியில் இருந்து 6 கிலோமீட்டர் வரை நாளொன்றுக்கு 10,000 லிட்டர் வரை மட்டும் தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்கிற விதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எத்தனை நிறுவனங்கள் இதுபோன்று அதிக அளவு தண்ணீர் எடுக்கின்றன என்று ஆணையத்திற்கு நன்கு தெரியும். புதுச்சேரி நகரத்தில் இயங்கும் துணி வெளுப்பகங்களே (சலவையகம்) இதற்கு சாட்சி. இவற்றை எல்லாம் கண்காணிக்கத் தவறவிட்டு வேளாண் நிலங்களை அழிக்க இந்த ஆணையம் துணை போகிறது.
புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் மழை நீர் சேகரிப்புக்காக எந்தவித முன்னெடுப்பும் இதுவரை எடுக்கவில்லை. புதுச்சேரியில் எத்தனை மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளன, அதன் மூலம் வருடத்திற்கு எவ்வளவு நீர் சேகரிக்கப்படுகிறது என்கிற தரவு எதுவும் ஆணையத்திடம் இல்லை.
தமிழகத்தில், ஒன்றரை கோடி மக்கள் வாழும் சென்னைக்கு பல ஏரிகளிலிருந்து தான் குடிநீர் வழங்கப்படுகிறது. அங்கு இதுபோல் வேளாண் நிலங்களை பாழ்படுத்தும் வேலை இல்லை.
புதுச்சேரியில் உள்ள மிகப் பெரிய ஏரியான ஊசுடு ஏரி மூலம் பயன்பெறும் பாசன ஆயக்கட்டு நிலங்கள் மிகவும் குறைந்துவிட்டன. எனவே, ஊசுடு ஏரி மூலம் புதுச்சேரியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், ஊசுடு ஏரியை தனியார் படகு குழாம் நடத்த அனுமதி அளிக்கின்றனர். இதுபோன்று தொலைநோக்குப் பார்வை இல்லாமல் புதுவையின் நெற்களஞ்சியமாக உள்ள பாகூர் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைக்க திட்டமிடுதல், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பாகூரை முற்றிலும் அழித்துவிடும்.
மேலும், புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் மணமேடு மற்றும் சோரியாங்குப்பம் பகுதிகளில் தடுப்பணை கட்டவுள்ளதாக பசுமைத் தீர்ப்பாயத்தின்முன் தெரிவித்துள்ளது. ஆனால் தடுப்பணை கட்டிய பிறகு அதன் மூலம் எவ்வளவு நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது என்று ஆய்வு செய்து அதன்பிறகு தான் ஆழ்குழாய் கிணறு அமைப்பதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். அதுபோல, சங்கராபரணி ஆற்றில் பல தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். ஏனென்றால் திருக்காஞ்சி வரை நிலத்தடி நீரில் கடல்நீர் உட்புகுந்துள்ளதால் இங்கு பயிர் செய்வது கடினமாக உள்ளது.
பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் இத்திட்டத்தின் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய மதிப்பீடுகளை மேலும் விரிவான ஆய்வுகள் நடத்தி கண்டறிய வேண்டும் என்று புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், விரிவான ஆய்வு நடத்த புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையத்தில் அல்லது வேளாண்துறையில் தகுதி வாய்ந்த நீர்நிலவியலாளர் இல்லை. தற்பொழுது வேளாண்துறையில் பதவியில் இருக்கும் ஒரே நீர்நிலவியலாளர் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார். பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியபடி ஆய்வு செய்தப் பிறகு தான் மற்றும் இப்பகுதி மக்களின் கருத்தறிந்த பிறகு தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதற்கு, முதலில் அரசு உடனடியாக புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமித்து முழுமையாக செயல்பட வைத்தால் மட்டுமே புதுச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரம் காப்பாற்றப்படும்.
புதுச்சேரியில் உள்ள 81 ஏரிகளை புதுச்சேரி ஏரி புனரமைப்புத் திட்டம் மூலம் தூர் வாரி ஏறக்குறைய 20 வருடங்கள் ஆகின்றன. மீண்டும் ஏரிகளை புனரமைத்தால் மட்டுமே நிலத்தடி நீரின் அளவை உயர்த்தமுடியும். எனவே, அரசு இது போன்ற திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் எதிர்க்கும் இத்திட்டத்தினை செயல்படுத்துவதை பாகூர் மற்றும் வில்லியனூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திட வேண்டும். மாற்று வழிமுறையான ஊசுடு ஏரியிலிருந்து நகரத்திற்கு குடிநீர் வழங்கவும், மழைநீர் சேகரிப்பை முன்னெடுக்கவும், புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் முழுமையாக செயல்பட உறுப்பினர்கள் நியமித்திடவும், திட்டத்தினை செயல்படுத்த உள்ள பகுதிகளில் மீண்டும் உரிய ஆய்வு செய்திடவும், புதுச்சேரியில் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சும் நிறுவனங்களை கண்காணிக்கவும் அரசுக்கு அழுத்தம் கொடுத்திட போராட வேண்டும்.
*V. சந்திரசேகர்*
*தலைவர்*
*பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு*
*பாகூர்*