Rihla

Rihla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rihla, Historical Tour Agency, Tamizhagam.

09/07/2025

FINAL RIHLA 2.mp4

06/07/2025
பயணம் # 07ரிஹ்லா சிறுவாணி தங்கல்---- இயற்கையிலிருந்து விலகிய வாழ்க்கை பற்றிய விசாரணைகள்----  வறண்ட அன்றாடத்தை வண்ணமயமாக்...
04/07/2025

பயணம் # 07

ரிஹ்லா சிறுவாணி தங்கல்

---- இயற்கையிலிருந்து விலகிய வாழ்க்கை பற்றிய விசாரணைகள்

---- வறண்ட அன்றாடத்தை வண்ணமயமாக்குவது பற்றிய உரைகள்

---- இறைக்கும் நமக்குமான உறவு பற்றிய வழிகாட்டல்கள்

புறப்பாடு 23/08/2025

மீட்சி 25/08/2025

பெண்களும் பத்து வயதுக்கு மேற்பட்ட சிறார்களும் பங்கேற்கலாம்.

முன்பதிவுக்கு: 85248 41761

மீனாட்சிபுரம் --- ஆளற்ற கிராமம்(மீனாட்சிபுரம் மின்னல் ரிஹ்லா  #2  ஆளற்ற ஊர் பயணம்)  -- ஒளிப்படங்கள்
19/06/2025

மீனாட்சிபுரம் --- ஆளற்ற கிராமம்

(மீனாட்சிபுரம் மின்னல் ரிஹ்லா #2 ஆளற்ற ஊர் பயணம்) -- ஒளிப்படங்கள்

மீனாட்சிபுரம் --- ஆளற்ற கிராமம்(மீனாட்சிபுரம் மின்னல் ரிஹ்லா  #2  ஆளற்ற ஊர் பயணம்)நன்கு திட்டமிடப்பட்ட ,கட்டணமுள்ள ரிஹ்ல...
19/06/2025

மீனாட்சிபுரம் --- ஆளற்ற கிராமம்
(மீனாட்சிபுரம் மின்னல் ரிஹ்லா #2 ஆளற்ற ஊர் பயணம்)

நன்கு திட்டமிடப்பட்ட ,கட்டணமுள்ள ரிஹ்லா பயணங்களுக்கப்பால் பெரிதாக திட்டமிடப்படாத கட்டணமற்ற அல்லது மிகச்சிறு செலவுள்ள வட்டார, மின்னல்,குறு ரிஹ்லாக்களை நடத்துவது என தீர்மானித்துள்ளோம்.

அந்த வரிசையில் இது இரண்டாவது மின்னல் ரிஹ்லா. ஏற்கனவே நடந்த மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல். காண்க: https://www.facebook.com/share/p/19TvHVoZLz/.

17/06/2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகலில் தொடங்கி அன்றைய மாலையில் நிறைவுற்றது மீனாட்சிபுரம் மின்னல் ரிஹ்லா #2 ஆளற்ற ஊர் பயணம்.

இங்கு போகும் திட்டம் இவ்வருட ரமளானின் பகல் பொழுதின் வெப்பச்சுழியில் தோன்றியது. ஏர்வாடி காஜா காதர் மீறான் பந்தே நவாஸிடம் பகிர்ந்ததில் உடனே சம்மதம். முதல் மின்னல் ரிஹ்லாவிலும் நாங்களிருவரும்தான் கூட்டாளிகள். ரிஹ்லா மனிதன் அவர்.

திங்கள்கிழமை அறிவிப்பை வெளியிட்டோம். உடனே அழைப்புகள் வந்தன. சென்னையிலிருந்து இருவரும் ஊரிலிருந்து ஓராளும் விருப்பம் தெரிவித்தனர். சென்னையிலுள்ளவர்கள் வர சாத்தியமில்லை.அதனால் ஊக்குவிக்கவில்லை. இரு சக்கர ஊர்தி சிக்கலால் ஊரிலுள்ளவர் வரவியலவில்லை.

காயல்பட்டினத்திலிருந்து எழுபது கிலோமீட்டர்கள் தொலைவு. களக்காடு ஏர்வாடியிலிருந்தும் கிட்டத்தட்ட அதே தொலைவுதான். தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வாகைக்குளத்திற்கும் தெய்வச்செயல்புரத்திற்கும் இடையிலுள்ள பொட்டலூரணி விலக்கில் வலதுபக்கம் உட்செல்லும் சாலையில் சென்றால் பத்து கிலோ மீட்டர்கள் நீளும் பதையின் முடிவில் இருக்கிறது மீனாட்சிபுரம்.

மீனாட்சிபுரம் என்று கேட்டால் யாருக்கும் விளங்குவதில்லை.ஆளில்லா கிராமம் எனக் கேட்டால் உடனே வழி சொல்கிறார்கள். நான் ஊரிலிருந்து இரண்டு பேருந்துகள் மாறி தெய்வச்செயல்புரத்தில் இறங்கிக் கொண்டேன். பைக்கிலேயே ஏர்வாடியிலிருந்து வந்த காஜா காதர் மீறான் பந்தே நவாஸ் அங்கு வந்து என்னை ஏற்றிக் கொண்டார். செக்காரக்குடி வரைக்கும்தான் அரசுப் பேருந்து வந்து செல்கிறது. மீனாட்சிபுரத்துக்கு தனி ஊர்தி இல்லாமல் செல்லவியலாது.

பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைக்கெதிராக போராட்டங்கள் நடந்ததற்கான அடையாளமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.வானம் பார்த்த நிலம். மானாவாரி வேளாண்மைக்கு ஏற்ற கரிசல் மண்.ஆங்காங்கே பருத்தியைப் பயிரிட்டிருந்தனர்.

கீழ, நடு, மேல என மூன்றாகவிருக்கும் செக்காரக்குடியில்தான் பொங்கலை ஒட்டி நடத்தப்படும் புகழ் பெற்ற பழைமையான ரேக்ளா பந்தயம் எனப்படும் மாட்டு வண்டி பந்தயத்தை நடத்துகின்றனர்.மதிய உணவு,நீர்,தின்பண்டங்களை செக்காரக்குடியில் வாங்கிக் கொண்டோம்.

ஒரே ஒரு பள்ளிக்கூடம் தட்டுப்பட்டது.பிள்ளைமார்,கோனார்,தலித்துகள் என மூன்று சாதியினர் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.மீனாட்சிபுரத்தில் நாயக்கர்,பிள்ளைமார் சமூகத்தினர் வசித்திருந்திருக்கின்றனர்.
மீனாட்சிபுரம் கிராமம் திருவைகுண்டம் வட்டம்,கருங்குளம் ஒன்றியம் என இணையச் செய்திகளில் இருந்ததால் ஒரு மணி நேர ஓட்டத்தில் அடைந்து விடலாம் என நினைத்திருந்தேன். கருங்குளமும், திருவைகுண்டமும் காயல்பட்டினத்திலிருந்து முக்கால் மணி நேரத் தொலைவில்தான் உள்ளன.

ஆனால் மீனாட்சிபுரத்தை வந்தடைய இரண்டே கால் மணி நேரம் எடுக்கிறது. மீனாட்சிபுரத்திலிருந்து மாவட்டத்தலை நகரமான தூத்துக்குடி முப்பத்தேழு கிலோ மீட்டர்கள் தொலைவிலும் வட்ட நகரான திருவைகுண்டம் முப்பது கிலோ மீட்டர்கள் தொலைவிலும் உள்ளன. நம் நினைப்பிற்கும் இலக்கிற்கும் இடையில் நிலங்களின் பெருந்தொலைவு நீண்டு விரிந்து கிடக்கிறது.

நெடுஞ்சாலைத்துறை நாட்டியிருக்கும் மீனாட்சிபுரம் பெயர்ப்பலகை வரை செல்கிறது தார்ச்சாலை. அதன் பிறகு மண் தடம்தான் கிராமத்திற்கு இட்டுச் செல்கிறது. மீனாட்சிபுரத்தைத் தாண்டி பாதை இல்லை. வயல் மட்டுமே உள்ளது. பூமியின் கடைசித் தொங்கல் என நினைக்க வைக்கும்படியான அமைவிடம்.

வெய்யில் என்பது இங்கே ஆண்டு முழுவதும் பெய்யக்கூடிய இன்னொரு பயிர். வெய்யில் தணிந்து மந்தாரமாகவிருந்ததால் போக்குவரத்தில் சிரமமில்லை. மண்பாதையின் வலது புறத்தில் ஓட்டுக்கூரை கொண்ட முதல் வீடு நிற்கிறது. ஊருக்குள் இரண்டாகப் பிரியும் தடத்தில் வலது பக்க பாதையின் வழியாக மணியாச்சி போகலாம்.இங்கிருந்துபதினேழு கிலோ மீட்டர்கள். டிவிஎஸ்50 இல் மூன்று சிறார்கள் தென்பட்டனர். மணியாச்சிக்கு போகிறோம் என்றனர்.அதன் பிறகு ஒரு நடுத்தரவயதுக்காரர் இரு சக்கர ஊர்தியில் விரைந்தார். பாதை அறிந்தவர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய காட்டுப்பாதை.

இடது புற பாதையில் உறுதியான கட்டுமானத்தில் சீனிவாசப் பெருமாள் கோயிலும் சிறிய கல் அறையும், கல் நார் கூரையும் கொண்ட பராசக்தி மாரியம்மன் கோயிலும் இருக்கின்றன. பெருமாள் கோயிலை தற்போது கேரளத்தில் குடியிருக்கும் இவ்வூர்க்காரரொருவர் அரை கோடி ரூபாய்கள் செலவில் புதுப்பித்திருக்கிறார்.மேல செக்காரக்குடிக்கு அருகிலேயே இக்கோவில்களுக்கான அறிவிப்பு பலகைகள் நடப்பட்டுள்ளன.இணைய தகவல்களின் படி ஆண்டுக்கொரு தடவை நடக்கும் கொடை விழாவிற்காக இவ்வூரின் முன்னாள் குடிமகன்கள் வந்து செல்கிறார்களாம். கோயிலுக்கு அருகிலுள்ள மரத்தில் சார்த்தப்பட்ட பட்டுத் துணி புதியதாக இருந்தது.

கோயிலுக்கு போகும் முன்னர் பாழ்பட்ட அறிகுறிகள் எதுவுமின்றி பராமரிப்புள்ள ஒற்றை அறை கொண்ட வீடொன்று கதவிலக்கம் இடப்பட்டு பூட்டியிருந்தது. அதற்கு சற்று தொலைவில் இரு அறைகளும் ஒரு கொட்டகையும் இருந்தன.அதற்குள் ஒரு பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாட்டுக் கொட்டில். மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றிருக்கின்றன. உரிமையாளர் பகலில் மட்டும் வந்து செல்கிறார் போலும்.

கொட்டகைக்குள் எங்கள் பைக்கையும் நிறுத்தினோம். அருகிலேயே அழகிய ரேக்ளா வண்டியொன்று வண்ணம் மங்காமல் நிற்கிறது.ஆதாரம் போனாலும் அரிதாரம் நிற்கும் புதுமை. உணவுப்பொதிகளை அங்குள்ள கம்பில் தொங்க விட்டு திரும்பிய பிறகு நாய்க்குட்டியொன்று வாலையாட்டிக் கொண்டு காலைச் சுற்றியது. மீனாட்சிபுரத்தில் கண்ட முதல் உயிரி.தாய் நாய் மந்தையோடு சென்றிருக்க வேண்டும்.

ஊருக்குள் நடக்கத் தொடங்கினோம். மூன்று தெருக்கள்தான். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வாழ்ந்திருந்ததாக பதிவுகள் உண்டு. கிராமத்தின் இன்றைய தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது முந்நூறிலிருந்து ஆகக் கூடினால் ஐந்நூறு பேர்கள் வரை வாழ்ந்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது. ஆட்கள் போய் ஒரு மாமாங்கம் ஆகப்போகிறதே.குடிசை வீடுகள் இருந்து அழிந்திருக்கலாம்.
படிப்படியாக நடந்த வெளியேற்றத்தின் தொடர்ச்சியாக இறுதியாக ஊர் கைவிடப்பட்ட ஆண்டு 2014 என நண்பரும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளருமான காட்சன் தெரிவித்தார்.

இங்குள்ள பள்ளிக்கூட பலகையில் 2014 ஆம் ஆண்டு வரை பாடங்கள் நடத்தப்பட்டிருப்பதற்கான தடயங்களை தான் கண்டதாகவும் காட்சன் தெரிவித்தார். பள்ளிக்கூடச் சுவர்களில் காம எழுத்துக்களும் குறிகளும் குறைவின்றிக் கிறுக்கப்பட்டிருக்கின்றன.தரையில் கூளம் குப்பையில்லை. ஓரங்களில் வெற்று மதுக்குப்பிகள். ஆளற்ற சூழலால் கிறுக்கல்களை செயல்படுத்த எவ்வித தடங்கல்களுமில்லை.

ஓடு,காரை,கல் என மூன்று அமைப்புக்களில் பாழ் வீடுகள் நிற்கின்றன. மொத்தத்தில் பத்து வீடுகளுக்குள்தான் இருக்கும். இதில் இரு வீடுகள் மட்டும் ஓங்குதாங்கான வேலைப்பாடுகளுள்ள கல் வீடுகள்.

பாழ்பட்ட வீடுகளில் ஓடு மேயப்பட்ட சிறு வீடுகளை விட பெரிய வீடுகள்தான் கைவிடப்பட்டதின் கழிவிரக்கத்தை கூடுதல் கோருகின்றன. சிறிய செட்டிமையான வீடுகள் நிரந்தரத்தையும் தற்காலிகத்தையும் அருகருகே பிடித்து வைத்திருப்பதினால் பிரிவும் பாழும் அவற்றை காற்றைப்போல தீண்டிச் செல்கின்றன.

இது போன்ற ஆளற்ற இடங்களில் ஜின்கள் ஒதுங்குவதுண்டு என்பதால் அவற்றின் சந்திப்பை எதிர்பார்த்துச் சென்றோம். கொழுத்து வெளுத்த வவ்வால்கள்தான் அமைதி கலைந்து எழுந்து பறந்தன. ஜின்கள் வவ்வால் வடிவில் கூட வரவியலும்தானே?இப்படியான ஒதுங்கு உயிரிகள் தென்பட்டால் பேசி விவரங்கேட்கலாம்தான்.நாம் அவற்றைக் கண்டு அஞ்சுவது மாதிரி அவையும் எங்கள் வரவில் கலைந்திருக்கக் கூடும்.

வாழ்வு மறந்த வீடுகளுக்குள் நுழைந்த பிறகு ஒருவரை மற்றவர் சிறிது நேரத்துக்கு காணவில்லையென்றாலும் அவர் பாழ் நில மர்மங்களுக்குள் சென்று விட்டாரோ? ஜின் தோழமை எதுவும் ஏற்பட்டு விட்டதா?என்ற எண்ணம் எழாமலில்லை. சென்று வெளியேறிய வீட்டின் பின்புறம் சிறுகோவிலொன்று.அதன் முன் கட்டப்பட்டிருந்த வெண்கல மணியை ஒலித்தோம். கடைசி மூச்சின் மறு ஒலிபரப்பு.

அமைதியை குலைக்காத காற்றின் வீச்சு மட்டுமே எங்கும் நிறைந்துள்ளது.மனித இயக்கம் அதன் உச்சத்தில் இருக்கும் நண்பகல் பொழுதில் அதை விட்டு எங்கோ அடித்துச் செல்லப்பட்டு பெருங்கடல்,பரந்த பாலை பரப்பின் மையத்தில் குடியிருக்கும் நினைப்பு.கழற்றவியாலத மௌனத்திற்குள்ளும் அசைவின்மைக்குள்ளும் ஒரு வலுக்கட்டாயமில்லை.

ஏகாந்தவாசத்திற்கும் தன்னில் தான் ஊறுவதற்குமான இடமிது. ஏகாந்தத்தை நாடும் எல்லோருக்கும் இவ்வளவு தொலைவெல்லாம் வரும் சாத்தியமில்லைதா. ஏகாந்தம் பேருருக் கொள்ளும் இது போன்ற இடங்களின் வழியாக நம் வாழிடங்களில் நம்மைச்சுற்றியுள்ள அமைவிடங்களில் கரந்துறையும் ஏகாந்தப் புள்ளிகளை அடையாளங்கொள்ளவியலும். எ.கா: கடல்,நதி தீரங்கள்,ஊருக்கு வெளியே,நெடுஞ்சாலைகளின் பக்கவாட்டிலுள்ள சிறு காடுகளில்,ஒதுக்குப்புறமான வழிபாட்டிடங்களில் என முயன்றால் கண்டுகொள்ளவியலும்.

பாழ் வீடுகளில் வவ்வால்களுக்குப் புறமே ஒரு நத்தைக்கூட்டைக் கண்டோம். பாம்போ,கரையான் புற்றுக்களோ இல்லை.தெருக்களிலுள்ள மின் வடங்களில் வந்தமர்ந்து போகும் மைனா, சிவப்பு கெண்டைக்குருவி எழுப்பும் ஒலிகள் தவிர இன்னொரு ஒலி இல்லை.காக்கையை எங்கும் காண முடியவில்லை.

எல்லாவற்றையும் காற்றின் தனி இசையும் பனை மர மடல்களினூடான சடசடக்கும் அதன் பக்க இசை மட்டுமே மிகைத்திருந்தது. நடந்து அமர்ந்து கிடந்து போன முன்னாள் ஊர்வாசிகளின் பேச்சரவங்களை,எண்ண உணர்வு அடுக்குகளை காற்றானது எங்கோ கொண்டு பதுக்கி வைத்திருக்கும்.

அரை மணி நேரத்திற்குள் சுற்றி முடித்தாகி விட்டோம்.உணவுப் பொதியை எடுத்தால் அது வரை கண்ணில் பட்டிராத ஓர் அணில் அதனைத் தேடி வந்திருந்தது. எங்களைக் கண்டவுடன் அதற்கு ஒரு திகைப்பு.இலக்கமிடப்பட்ட வீட்டின் படியில் அமர்ந்து பொதிகளைப்ப் பிரித்தோம். அதில் ஒரு பொதியை கறும்பியிருந்தது அணில். அது தனக்கு என்பதற்கான உரிமைக் கோரல்.

உண்டுக் கொண்டிருக்கும் போது மாட்டுக்கொட்டகைக்காரர் வளர்க்கும் பூனை சீமை உடைக்குள் நின்று ‘மியாவ்’ என்றது. கைகழுவப்போகும்போது இரு அண்டங்காக்கைகள் வேலிக் கற்களின் மீதமர்ந்து கரைந்தன.

அன்னத்தையும் நீரையும் காணும் வரைக்கும் இவை காற்றுக்குள் துளி ஒலி கூட எழுப்பாமல் சலனமொழிந்து கரந்துறைந்திருந்தனவா? அல்லது அருவப்புள்ளிகளாகி வெளியில் மிதந்தலைந்தனவா? பருக்கைக்குள்ளும் துளிக்குள்ளும் ஒளிந்திருப்பது உயிர் மருந்தன்றோ?

இந்நிலத்தை கைகழுவிய பின்னர் மீனாட்சிபுரம்வாசிகள் தூத்துக்குடி நகரத்தின் மீனாட்சிபுரத்தில் குடியேறியுள்ளனர். குடிநீர் பற்றாக்குறையுடன்,பேருந்து வசதி,மருத்துவமனை இன்மைகளும் படிப்படியாக ஆட்களை இங்கிருந்து வெளியேற்றியிருக்கிறது.

யாருக்காவது உடல் நலமில்லையென்றாலும் குடிநீர் எடுப்பதற்கானாலும் மூன்று கிலோமீட்டர்கள் வரை நடந்துதான் செக்காரக்குடி போக வேண்டும். பெருமளவிலான ஆட்கள் வெளியேறிய பிறகு அரசினால் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. விட்ட மூச்சை பிடிக்க முயன்ற கதை.

எல்லா வைராக்கியங்களுடனும் இக்கிராமத்தின் கடைசி மனிதராக ஒற்றையாளாக நாயக்க முதியவொருவர் வாழ்ந்து சில வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

இன்று கோயில் சிலைகளும் சிற்றுயிர்களும்தான் மீனாட்சிபுரத்தை தங்களுக்குள் குடிவைத்திருக்கின்றன.

------------------------

மீனாட்சிபுரம் --- ஆளற்ற கிராமம் -- ஒளிப்படங்களைக்காண: https://www.facebook.com/share/16brWS5bCd/

பயணம் # 07ரிஹ்லா சிறுவாணி தங்கல்---- பறவை அட்டவணைப்படியான இராப்பகல்கள்----  ஆறும் மலையுமான உடனிருப்பு----  ஏகாந்தத்திற்க...
19/06/2025

பயணம் # 07

ரிஹ்லா சிறுவாணி தங்கல்

---- பறவை அட்டவணைப்படியான இராப்பகல்கள்

---- ஆறும் மலையுமான உடனிருப்பு

---- ஏகாந்தத்திற்கும் உணர்தலுக்குமான நாட்கள்

புறப்பாடு 23/08/2025

மீட்சி 25/08/2025

முன்பதிவுக்கு: 85248 41761

இறுதி நாள்: ஆகஸ்ட் 10/08/2025

மின்னல் ரிஹ்லா  #2  ஆளற்ற ஊர்--- கைவிடப்பட்ட மீனாட்சிபுரம் கிராமம்--- தனிமையில் வாழும் வீடுகள்---- நினைவுகளும்,கதைகளும் ...
16/06/2025

மின்னல் ரிஹ்லா #2 ஆளற்ற ஊர்

--- கைவிடப்பட்ட மீனாட்சிபுரம் கிராமம்
--- தனிமையில் வாழும் வீடுகள்
---- நினைவுகளும்,கதைகளும் அங்கு என்னதான் செய்கிறன?

போய்க் கேட்போம்

காலம்:17/06/2025 செவ்வாய்க்கிழமை முற்பகல்

இடம்:

மீனாட்சிபுரம்(ஆளற்ற ஊர்)
கருங்குளம் ஒன்றியம்
திருவைகுண்டம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம்.

தொடர்புக்கு: 85248 41761

ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி – 5பேருவளை மருதானைக்கரையிலிருந்து  இந்தியப்பெருங்கடலில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்ட...
31/05/2025

ரிஹ்லா சரந்தீப் - பாவா ஆதமின் பாத காணி – 5

பேருவளை மருதானைக்கரையிலிருந்து இந்தியப்பெருங்கடலில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குட்டித் தீவு.

காண்பதற்கு தென்னந்தீவாக காட்சியளிக்கும் பேருவளைத் தீவு. காலனியாதிக்கவாதிகளால் பர்பரின் தீவு என்றும் வரலாற்றின் ஏடுகளில் வெல்மடுவா,காக்கைத்தீவு,என்றும் அழைக்கப்படும் நிலத்திட்டு. உள்ளூர்க்காரர்கள் கலங்கரை விளக்கம். எனும் பெயரைக் கொண்டே இத்தீவை அழைக்கிறார்கள்.

புத்தகம்/மொழிபெயர்ப்பு என உவைஸ் தேடலின் திசையில் போக மீதமுள்ளவர்கள் படகுக்காரர்களிடம் பேரம் பேசி அஸருக்குப் பிறகு கிளம்பினோம்.

உலைச்சட்டி நீராகி இந்தியப் பெருங்கடல் திளைத்துக் கொண்டிருந்தது. நிலமாக மட்டுமிருந்திருந்தால் இரட்டை மூச்சில் ஓடி எட்ட வேண்டிய தொலைவு. அந்த எளிய தாண்டலை ஆழமேறிய கடல் தன்வசம் எடுத்துக் கொண்டிருந்தது.அண்மைக்குள் உறையும் ஒரு தொலைவுதான் எல்லாவற்றையும் அண்மையாக்குகிறது.

சோற்றுத்தட்டில் ஊன்றப்பட்டது போலிருந்த தென்னை மரங்களடர்ந்த அந்த திட்டில் போய்க் காலூன்றினோம். திரும்ப வேண்டும் எனத் தோன்றும்போது செல்பேசியில் அழையுங்கள் என படகுக்காரர் தனது எண்ணை தந்து விட்டு கரையேகினார். தென்னை மரங்களுடன் கலங்கரை விளக்கமும், கைவிடப்பட்ட கட்டிடமும் கொஞ்சம் புல் பற்றைகள், பெயர் விளங்கா செடி கொடிகளுமாக உள்ள தீவு.

தீவின் கண்ணுக்கெதிரே கரை உள்ளதால் கரையின் சலனங்களின் தெறிப்பில் தீவின் தனிமை தன் தனிமையை இழந்திருந்தது. கடலின் ஆழமும் அலையின் அலசலும் அந்த தனிமை இழப்பை ஒரு தோற்றப்பிழை என்பதாக உணர்த்தின.

மர வேர்கள் மூட்டுகளாகவும் விரல் நரம்புகளாகவும் ஆங்காங்கே நீட்டிக் கொண்டிருந்தன.அப்படியான ஓரிடத்தில் அமர்ந்தோம். கொஞ்சம் சுற்றிப்பார்த்து காலாறினோம். இது போல ஒரு கூட்டம் தீவுகளை தன்னுள் வைத்திருக்கும் இலட்சத்தீவு நினைவிற்கு வந்தது. அப்பவளத்தீவுகளின் விருப்ப மனிதன் இஸ்மத் ஹுஸைனை நினைவு கொண்டது மனம் .தீவுக்கு தீவுக்காரன்தான் சாட்சி நிற்கவியலும். அவர் இப்பயணத்தில் இணையவியலாமல் போனதின் சங்கடங்களை நானும் நவ்ஷாதும் எங்களுக்குள் சொல்லிக் கொண்டோம்.

சரியாக அமரும் விதத்தில் ஓரிடத்தைத் தேடினோம். வரிசையாக நின்ற மரங்களுக்கப்பால் கொஞ்சம் பாறைத்திட்டுக்கள் இருந்தன. அவற்றை கடந்து அமர்ந்தோம், சில அடிகள் தொலைவில் பள்ளம். கடலரிப்பை தடுப்பதற்காக கொட்டப்பட்டிருந்த பாறை இடுக்குகளுக்குள் கடலலையொன்று நுழைந்து கொந்தளித்து தணிவதற்குள் மற்றொரு அலை. அது முடிவதற்குள் இன்னொன்று. இடையில் சிறு சிறு ஓய்வு. யாருக்காகவுமில்லாமல் தன்னில் தானாகும் களி.
கொஞ்சம் கொஞ்சம் பேச்சு என நடந்து கொண்டிருந்த அந்த அமர்வு மழையின் வரவால் நிறைந்தது.

மழையினால் இருப்பு தடைப்பட்டாலும் மழையிலிருந்து தப்புவதற்கு இத்தீவில் வழியில்லை எனும் ஞானம் உறைக்கவே அதை திறந்த வெளியில் சந்தித்தே தீருவது எனத் தீர்மானித்தோம்.

ஆளாளுக்கு அவரவர்களுக்கு தெரிந்ததைப் பாடினோம். நான் நாகூர் ஹனீஃபாவிலிருந்து தொடங்க அப்துல்கறீம் மலையாள சூஃபிப்பாடல்களைப்பாட மழை உரத்தது.எல்லோரினதும் இருப்பு கரைந்து சிறுத்திருந்தோம். சிராஜ் மஷ்ஹூர் இதை தன் கவிதைகளுக்குள் செலுத்தப்போவதாக சொல்லி அதன் ஓரிரண்டு வரிகளையும் சொல்லிக் காட்டினார். இப்பதிவை எழுதும் வரை அவர் இக்கவிதைக்கு உருக் கொடுக்கவில்லை.

அலைகளின் அலைவில் கரை மீண்டவுடன் அப்துல்கறீம் ஈரம் தோய்ந்த கடற் மணலில் தன் விரல்களினால் எழுத்தணிந்தார்.இப்பயணத்திற்கு விரலினூடாக எழுத்தின் சாட்சி. ஒரு வழியாக மழைப்பொழிவிற்கிடையே தேநீரும் சிறுகடியுமாக கூடடைந்தோம்.

மறுநாள் காலையில் கொழும்புக்கு புறப்பாடு. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு முதலில் சென்றோம். வரலாற்றார்வலரும் இலங்கை வானொலியின் ஒலிபரபாளருமான ஃபஸான் நவாஸ் வரவேற்றார்.
எனக்கு இது இரண்டாவது வருகை. 2010 ஆம் ஆண்டு நானும் நண்பர் எஸ்.கே.ஸாலிஹும் இலங்கை வானொலிக்காக மட்டுமே இலங்கைப் பயணம் வந்திருந்தோம்.

மின் ஊடகத்தில் வானொலி மட்டும் தனியாட்சி செய்து கொண்டிருந்தக் காலகட்டம்.காயல்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் கடல் தீர மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின் வாழ்வியலுக்குள் முஸ்லிம் சேவை வழியாகவும் மொத்தத்தில் எல்லோரினது களியுலக தேவைகளை வர்த்தக சேவை வாயிலாகவும் நிறைவேற்றி வந்தது இலங்கை வானொலிதான்.

தமிழகத்திலும் புதுச்சேரியிலுமாக அகில இந்திய வானொலியின் ஆறு நிலையங்கள். அதிலும் சென்னை நிலையத்திற்கு நடுவணலை,சிற்றலை,பண்பலை என ஐந்து அலைவரிசைகள் இருந்தும் தமிழகம் மட்டுமல்ல கேரளத்து நேயர்களையும் கவர்ந்தது இலங்கை வானொலிதான். கேரளத்து அகில இந்திய வானொலியின் மூத்த நேயர்கள் இதை இன்றளவும் நினைவுகூர்கிறார்கள்.

அகில இந்திய வானொலி அதிலும் குறிப்பாக அதன் தமிழகத்து நிலையங்களில் பிராமண/ஹிந்து பண்பாடுகளுக்குத் தான் நூறு விகித நிகழ்ச்சிகள்.மத சிறுபான்மையினர் என்ற ஒரு மக்கள் பிரிவினர் இருக்கிறார்கள் என்ற நினைவு அவர்களுக்கு எப்போதும் வந்ததில்லை.

தற்கால மின்னணு ஊடகங்களில் இவ்வளவு போட்டிகளுக்குப் பிறகும் மத,சாதி காழ்ப்புகள்,தன் முனைப்பு, பதவியுர்வு போட்டி பொறாமை வழக்குகளுக்கு முன்னுரிமையளித்து தமிழகத்து அகில இந்திய வானொலி நிலையத்தார் பொது ஒலிபரப்புத்துறையை சீரழித்து விட்டனர்.

1983 இல் தொடங்கிய இலங்கை இன முறுகலினால் தமிழகத்திற்கான இலங்கை வானொலியின் ஒலிபரப்பு முடங்கிப் போயிற்று.பழைய வானொலிக் கேட்பு தொடர்ச்சியை மீட்கும் விதமாக இலங்கை வானொலி நிலைய உயர் அலுவலர்களுடன் பேசுவதற்காகத்தான் 2010 பயணத்தை மேற்கொண்டிருந்தோம்.

ரிஹ்லா சரந்தீப் பயணத்தில் இருவரைத் தவிர மற்றவர்களுக்கு வானொலி தொடர்பான விடயங்களில் பெரிதாக ஆர்வமில்லை.எங்களது பயணக் குழுவில் அய்ம்பது வயதைத் தொட்டவர் என அப்துல் மஜீத் நத்வியும் அய்ம்பதைக் கடந்தவன் என்ற பட்டியலில் நானும்தான்.

மற்றவர்களெல்லாம் நாற்பது,முப்பதுகளின் இளைஞர்கள்.அவர்களின் இளமைகளில் வானொலியை தள்ளி நிறுத்தும் வகையில் இந்திய வானில் தொலைக்காட்சிகளின் வருகை பெருகத் தொடங்கிய காலம்.

தான் தனியரசனாக நின்றொளிர்ந்த வானொலியின் தேவையும் அருமையும் அவர்களுக்கு பெரிதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இரவில்தான் நிலவு மணக்கும். பகலில் அல்லவே.

இலங்கை வானொலிக்கான எனது முதல் வரவின் போது இங்கு ஒரு மணி நேர நேரலை நிகழ்ச்சி செய்தோம். காலம் முழுக்க வானொலிக் கேட்போனாக இருந்து முதன்முதலாக வானொலியில் பேசுவோனாக மாறிய இனிய தருணம்.நான் முதன் முதலாக சென்று பார்த்த வானொலி நிலையம் என்பது சென்னை நிலையம்தான். ஒரு கோரிக்கைக்காக சென்று உடனே திரும்பி விட்டோம். ஆனால் இலங்கை வானொலியில் நான் உணர்ந்த அருகமையும் நெருக்கமும் எனக்கு சென்னையிலும் தமிழகத்தின் மற்ற நிலையங்களிலும் ஏற்படவில்லை.

நிலையத்தின் தாழ்வாரங்களில் இலங்கையின் முன்னோடி ஒலிபரப்பாளர்களின் படங்களை மாட்டியிருந்தனர். அந்த வரிசையில் கே.எஸ்.இராஜாவின் படமும் மாட்டப்பட்டிருந்தது. தமிழக இலங்கை வானொலி நேயர்களின் மனங்கவர்ந்த அறிவிப்பாளர்கள் இருவர்தான். ஒன்று பி.ஹெச்.அப்துல்ஹமீது. இன்னொருவர் காலஞ்சென்ற கே.எஸ்.இராஜா.

இலங்கை வானொலியின் மின்னல் வேக அறிவிப்பாளர் எனப் பெயரெடுத்த கே.எஸ்.இராஜா, அந்நாட்டின் உள்நாட்டுப் போரினால் கொன்று தின்னப்பட்டவர்.அந்த படத்தைப்பார்த்தவுடன் அவரது துள்ளும் குரலும் அகால இறப்பும் கைகோர்த்துக் கொண்டு நினைவுகளை கனமாக்குகின்றன.

பி.ஹெச்.அப்துல் ஹமீதின் படமில்லையே என்ற கேள்விக்கு காலஞ்சென்றவர்களின் படங்கள் மட்டுமே இங்கு மாட்டப்படும் என்ற மறுமொழி கிடைத்தது. காலஞ்சென்ற ஒலிபரப்பாளர்களில் சிங்கள,தமிழ் ஒலிபரப்பாளர்களின் படங்கள் மட்டுமே மாட்டப்பட்டிருந்தன. பி.ஹெச்.அப்துல் ஹமீதுக்கப்பால் ஒரு முஸ்லிம் முன்னோடி ஒலிபரப்பாளர் கூட இல்லையா என உடன் வந்த இலங்கை நண்பரிடம் கேட்டேன். கசந்து புன்னகைத்தார்.

கழித்துக் கட்டப்பட்ட ஒலிபரப்புக் கருவிகளை பட வரிசைக்கப்பால் தொடர் வரிசையாக நிறுத்தியிருந்தார்கள். பருத்த உடல் வாகுடன் ஒலி உறைந்து பல்வகையான மானிகளுடன் கடந்த காலத்திலிருந்து அவைகள் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தன.குஞ்சு அகன்ற கூடுகள். தங்களிலிருந்து நழுவிய குரல்களை இப்பொறிகள் நினைவிலிறுத்திக் கொண்டதைப் போல அக்குரல்களும் தங்களின் தாவளத்தை மறக்காதிருக்குமா?

தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக மூன்றுக்கொன்று உயர அகலத்தில் இழுவைப்பேழையின் அளவிற்கு குறை கடத்தி (செமி கண்டக்டர்) ஒலிபரப்பிகள் வந்த பிறகு இடம் அடைக்கும் உயர அகல ஒலிபரப்பிகள் விடை பெற்றுக் கொண்டன. அவைகளை பழைய இரும்பின் எடைக்கு போட்டு விடாமல் நினைவின் கூறாக காட்சிப்படுத்தியிருப்பது நல்ல விடயம்.

தந்தித் தொழில்நுட்பம் நம்மிடமிருந்து விடைபெற்று விட்டாலும் வானொலி இன்றும் பொருத்தப்பாடுடையதாகவே திகழ்கிறது.இது பல பேரிடர்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதனுக்கு மட்டுமே வாய்த்த பேச்சையும் எழுத்தையும் மின் துடிப்புக்களாக்கி சுமந்து சென்ற அருவ தூதர்களான தந்தி,வானொலி/ளி போன்றவைகளுக்கென அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.

மேலை நாடுகளிலும் இந்தியாவை விட சிறிய நாடுகளான மலேஷியா,தாய்லாந்திலும் இத்தகைய அருங்காட்சியகங்கள் இருக்கின்றனவாம்.
பெங்களுருவில் தனியார் ஒருவர் வைத்திருக்கும் ‘சிற்றலை வானொலி அருங்காட்சியகம்’ போக தமிழகத்திலும் கூடுதலாக அறியப்படாத அங்கொன்றும் இங்கொன்றுமாக வானொலி அருங்காட்சியகர்கள் இருப்பதாக வானொலி மனிதரும் நண்பருமான பேராசிரியர் தங்க ஜெய் சக்தி வேல் தெரிவித்தார்.

பழைய ஒலிபரப்பிகளைத் தொட்டுத் தீண்டி உரையாடிக் கொண்டிருக்கும்போது கே.ஜெயகிருஷ்ணா என்ற எழுபதுகளில் இருக்கும் மனிதர் தென்பட்டார்.

‘பொங்கும் பூம்புனல்’ நிகழ்ச்சி பற்றி 1970களில் இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை இரண்டைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும். காலை ஏழே கால் மணிக்கு ஒலிபரப்பாகும் நேயர் விருப்பப் பாடல்கள்.
எனது உம்மா வீடு என்பது இரட்டை வீடுகளைக் கொண்டது. வாப்பா இருக்கும் வீட்டில் பிலிப்ஸ் குமிழ் வானொலி இருக்கும். அதிலிருந்து வடமிழுத்து நாங்கள் படுத்திருக்கும் வீட்டில் ஒலிபெருக்கியில் நிகழ்ச்சிகள் அஞ்சலாகும். காலை ஏழு மணிக்கு ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டு பீறிடும் நீருற்றின் தாரகைகளைப்போல பெருகும் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி. அதன் தலைப்பிசையோடு தொடரும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பில்தான் பத்து வயதிலிருந்த நான் பள்ளியெழுவது.

அந்தக்குரலின் உரிமையாளர்தான் கே.ஜெயகிருஷ்ணா..அய்ம்பது வருடங்களுக்குப் பிறகு அக்குரல் புறப்படுமிடத்தை முதன்முறையாக பார்க்கிறேன்.மணியோசைக்கும் யானைக்குமிடையே அரை நூற்றாண்டு இடைவெளி. தமிழ்ச்சேவையின் பணிப்பாளராகப் பணியாற்றி நிறைந்த பின்னரும் வானொலியை விட மனமில்லாமல் கே.ஜெயகிருஷ்ணா இன்னமும் இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

முஸ்லிம் நிகழ்ச்சி,ஃபுர்கான் ஃபீ இஃப்திகார், மயில் வாஹனம் சர்வானந்தா, அய்ம்பதாண்டுகளாக கதை சொல்லியாகவே வாழ்ந்து மறைந்த இலங்கை வானொலியின் சிறார் கதை புகழ் மாஸ்டர் சிவலிங்கம்,அறிவுக்களஞ்சியம்,நாடகம், என எனதும் என் வயதையொத்த சிறார்களின் குழந்தைமையை நிரப்பிய ஒலிக்கொடை.

இலங்கை வானொலி தமிழ்ச்செய்தி பிரிவின் பணிப்பாளரும் உள்ளூர் வரலாற்றார்வலருமான ஃபஸான் நவாஸ், தென்றல் எஃப் எம் தமிழ் ஒலிபரப்பின் பணிப்பாளரான அக்கரைப்பற்றைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.எம்.தாஜ் ஆகியோர் முஸ்லிம் சேவையின் பழங்கூறுகள் பலவற்றை விளக்கினர்.

முன்னர் இலங்கை வானொலியில் நேரத்தை அறிவிக்கும் முன்னர் இரட்டை மணியோசையொன்று ஒலித்திருந்ததை அதன் நேயர்கள் அறிந்திருப்பார்கள்.கணினியின் வரவிற்குப் பிறகும் மணியோசையெழுப்பும் இரண்டு இரும்புத் துண்டங்களை வைத்திருப்பதோடு அதை இப்பொழுதும் அவ்வப்போது பயன்படுத்தியும் வருகின்றனர்.

இலங்கையில் வானொலிக்கான பவிசுஅந்நாட்டில் இன்னும் எஞ்சியிருந்தாலும் நிலையத்தின் பராமரிப்பில் போதாமை தென்படுகிறது.நாடு பொருளாதார வலுவிழந்திருப்பது தலையாயக் காரணமாக இருக்கலாம்..

03/05/2025

ரிஹ்லா துளுநாட்டின் மூன்றாம் நாள் – நிறைவுப்பகுதி

கேரள மாநிலம் கொண்டோட்டியிலுள்ள மாப்பிளா கலா அகாடமியின் மொக்ரால் கிளையின் சார்பாக மொக்ரால் பள்ளிக்கூடத்தில் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்வுகளும் பொது நிகழ்வுகளும் நிறைந்த நாள் என்ற போதிலும் தொலைவிலிருந்து வரும் எங்களுக்காக துரித ஏற்பாடொன்றைச் செய்திருந்தனர்.

காசர்கோடு மாவட்டம் என்பது நதிகளும் கோட்டைகளும் மொழிகளும் நிறைந்த பகுதியாகும். சப்த பாஷா சங்கம பூமி என்றழைக்கப்படும் அழகிய மாவட்டம். ஏழு மொழிகள் சங்கமிக்கும் நிலப்பகுதி என்று அழைக்கப்பட்டாலும் பத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இப்பகுதியின் மலையாள பேச்சு வழக்கு முற்றிலும் வேறுபட்டது. உன்னிப்பாக கவனித்தால் கேரளத்தின் மற்ற பகுதிகளில் இல்லாத தமிழ்ச் சொற்கள் சிதைந்தும் மருவியும் பேசப்படுவதை உணர முடியும்.

காசர்கோடு மாவட்டத்திலுள்ள மொக்ரால் கிராமம் மாப்பிள்ளை இலக்கியத்தின் விளைநிலம். திருமணம், பொழுது போக்கு போன்ற நிகழ்ச்சிகளின் தாளங்கள் இவ்வூர் மக்களின் உணர்வுகளில் ஒன்றியதாக உள்ளது. பாட்டுக் கூட்டம் இல்லாமல் இவ்வூர் இல்லை எனலாம். இக்காரணத்தால் மொக்ரால் "இஸல் கிராமம்" என்று அழைக்கபப்டுகிறது. தமிழின் 'இயல் ' என்பதே 'இஸல்' என்று மாறியதாக மாப்பிள்ளைப் பாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மாப்பிள்ளைப் பாடல்களில் பெரும்பாலனவை சமயம் சார்ந்ததாக இருக்க மொக்ராலின் பாடல்கள் திருமணம், விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் உள்ளன.

பாட்டுக்கூட்ட நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் பாடப்படும் வழமை இங்கு நெடுங்காலம் நடைமுறையில் இருந்தது. தமிழகத்திலிருந்து சென்ற சூஃபி ஃபக்கீர்கள் வழியாக முஸ்லிம் தமிழ்ப் பாடல்கள் செல்வாக்கு பெற்றன. இங்கு நடைபெற்றக் கவியரங்குகளில் தமிழகத்திலிருந்து சென்ற புலவர்கள் பலர் பாடல்களை அரங்கேற்றினர். கோட்டாற்றுப் புலவர்கள் மலைபாரில் பாட்டுப் பாடச் செல்வது குறித்த செய்திகள் செவிவழிச் செய்தியாக உள்ளது.. அதில் மொக்ராலும் அடங்கும்.

மொக்ராலின் முக்கிய கவிஞர்களாக ஸாவுக்கார் குஞ்ஞி ஃபகீஹ் என்பவரும் அவருடைய மகன் பாலாமுப்னு ஃபகீஹும் விளங்குகின்றனர். முஸ்லிம் தமிழ்ப் புலவர்களை நாட்கணக்கில் தங்க வைத்து போற்றிய பெருமை இவர்களுக்கு உண்டு.

மங்களூருக்கு செல்லும் பாதையில் மொக்ரால் இருப்பதால் வணிகத்திற்காகச் செல்பவர்களுக்கும் ஃபக்கீர்களுக்கும் வழித்தங்கலாகவும் இவ்வூர் இருந்தது. மாப்பிள்ளை இலக்கியத்தின் முடிசூடா மனனராகத் திகழ்ந்த மகாகவி மோயின் குட்டி வைத்தியர் பாடல்களை அரங்கேற்றுவதற்காக பலதடவை இங்கு வந்துள்ளார். இங்கு தங்கிய காலங்களில் கிடைத்த தமிழ்ப் புலவர்களின் தொடர்பும் இவரின் பாடல்களின் தமிழ்ச் செல்வாக்கிற்குக் காரணமாக உள்ளது எனலாம்.

ஏராளமான கவிஞர்களை வாரி வழங்கிய கிராமமாக இவ்வூர் உள்ளது. இன்றும் பாடகர்கள் நிறைந்த பகுதியாகவே உள்ளது. சூஃபிக் கவிஞரான இச்ச மஸ்தான் என்றழைக்கப்படும் இச்ச அப்துல் காதர் மஸ்தான் மொக்ராலின் மறுகரையிலுள்ள மொக்ரால் புத்தூர் எனும் ஊரைச் சார்ந்தவர் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கண்ணூர் வளப்பட்டினத்தில் பழைய பொருட்கள் வணிகம் செய்துக் கொண்டிருந்த இச்ச மஸ்தான் அவர்களுக்கு காயல்பட்டினத்தின் உமர் அல் காஹிரி அவர்கள் இயற்றிய பிரபலமான அல்லஃபல் அலிஃப் பைத்தின் ஓலைச்சுவடி கிடைத்திருக்கிறது. அந்த பாடலின் சிறப்புக்களை அன்று கண்ணூரில் வாழ்ந்திருந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிமவர்கள் இச்ச மஸ்தானுக்கு விளக்கியதன் தொடர்ச்சியாக இச்ச மஸ்தான் மேற்கல்விக்கு காயல்பட்டினம் ஸாஹிபு அப்பா தைக்காவில் வந்து தங்கிப் பயின்றதாகவும் கூறப்படுகின்றது.

மொக்ரால் புலவர்களின் பாடல்கள் மற்ற மாப்பிள்ளைப் பாடல்களின் மொழிநடையிலிருந்து மாறுபட்டிருப்பது துளுநாட்டின் மாறுபட்ட மொழி வழக்கினாலும் தமிழ்ப் புலவர்களின் செல்வாக்கினாலும் ஏற்பட்டதாகும்.
மொக்ரால் மாப்பிளா கலா அகாடமியின் பொறுப்பாளர்களில் ஒருவரான இஸட்.ஏ என்றழைக்கப்படும் ஜூல்ஃபிகர் அலீயின் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி செவ்வனே நடந்தேறியது.

இன்றையத் தலைமுறைப் பாடகர்களுடன் தங்கள் முதுமையின் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் முந்திய தலைமுறைப்பாடகர்களும் நிகழ்விற்கு வந்திருந்தனர். ஒவ்வொருவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பாடினர்.இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணியைச் சார்ந்தவர்கள். பாட்டுக் கேட்டல் என்பது முற்றிலும் எண்ணியல் கருவி சார்ந்ததொன்றாக மாற்றப்பட்டு கச்சேரிகள் பெருமளவில் மறக்கப்பட்ட காலகட்டமிது.

என்னுடைய சிறிய வயதில் விடிய விடிய பாட்டுக்கச்சேரிகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கக் கண்டிருக்கிறேன். இன்று தமிழகத்தைப் பொறுத்தவரை போலி செய்தல் அடிப்படையில் நாகூர் ஹனீஃபாவைப் பின்தொடரும் நிழல் பாடகர்களைத் தவிர புதிய குரல்கள் இல்லை. சொந்தத் திறனிலும் குரலிலும் வளர்ந்த பாடகர்களின் தொடர்ச்சியானது 2020இல் மண் மறைந்த பாடகர் குமரி அபூபக்கர் அவர்களோடு விடைபெற்று விட்டது.

இந்நிலையில் பழையதைப் பற்றிக் கொண்டே புதிய பாடல்களையும் புனைவதும் பாடுவதுமாக விரையும் இசையானது மொக்ராலில் ஊர்மயப்பட்டிருப்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. புதிய இலௌகீக தேவைகள்,சுவைகள்,விருப்பங்களுக்கேற்ப பாடல்கள் கட்டப்படுவதும் இசைக்கப்படுவதுமானது ஒரு நெடிய பாடல் மரபு வரும் தலைமுறைகளுக்குக் கையளிக்கப்படுவதையும் அதன் நீடித்தத் தன்மையையும் உறுதிப்படுத்துகிறது.

மொக்ராலின் அஹ்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்கள் புதிய நிக்காஹ் மாலையை இயற்றியதோடு பல நவீனப் பாடல்களை இயற்றியுள்ளார். கால் பந்தாட்டத்தைக் குறித்து இவர் எழுதிய பாடல்கள் பிரபலமானவை. தென் கர்நாடகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்தும் பாடல்களை இயற்றியுள்ளார்.

அகீதா மாலை என்ற ஆன்மீக காவியத்தை ஸாவுக்கார் குஞ்ஞு ஃப்கீஹ் இயற்றியுள்ளார். இவருடைய மகன் பாலாமுப்னு ஃபகீஹும் கவிஞராவார். இவர் தந்தை இறப்பதற்கு முன்னரே இளம் வயதில் இறந்து விட்டார்.
"அங்கணத்தில் அஞ்சு தாளம் ஆறும் கூடி பாடடா!
அக்குலச்ச அச்சிதப்பூ அம்பலத்தில் உண்டடா!
அங்கணத்தில் தாளமிட்டு தானமானம் நேடடா!
தட்டகெட்டி பிட்டுறுட்டி தச்சிகார் பொலிக்கடா!"
போன்ற வரிகள் பாலாமுப்னு ஃபகீஹின் கவித்திறனை எடுத்துக் கூறுகிறது..

நிகழ்ச்சியில் குணங்குடி மஸ்தான் ஸாஹிபின் “இணங்கும் மெய்ஞ்ஞான பேரின்பக்கடலின்” என்ற பாடலின் ஒரு பகுதியை தன் நடுங்கும் குரல்களால் பாடிக் காட்டிய முதியவர் ஏ.கே.அப்துர் ரஹ்மான் ஸாஹிபு மொக்ராலிலும் அதைச்சுற்றியுள்ள ஊர்களிலும் கல்யாணங்களில் தமிழ்ப் பாடல்களைப் பாடி வந்ததை பல செவ்விகளில் கூறியுள்ளார். மொக்ராலின் தமிழ்ப் பாடல்களையும் இஸல் மரபையும் நன்கறிந்த கடைசிக் கண்ணியான இவர் கவிஞர் மர்ஹூம் ஏ.கே.அப்துல் காதிர் அவர்களின் தம்பியாவார்.

எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டர் இயக்கிய ‘இசல் கிராமம் மொக்ரால் “ ஆவணப்படத்தில் ஏ.கே.அப்துர்ரஹ்மான் ஸாஹிபு வலிவும் பொலிவுமாகப் பாடுவதைக் காண முடிகிறது.

https://www.youtube.com/watch?v=BAG6dIiuNVs.

திருமணங்களிலும் கலைநிகழ்ச்சிகளிலும் மன மகிழ்ச்சிக்காக அன்றி பொருள தேடும் நோக்கில் பாடியதில்லை என்பதையும் மன நிறைவுடன் கூறுகிறார் ஏ.கே.அப்துர் ரஹ்மான் ஸாஹிபு. மொக்ராலின் பாடல் மரபு இன்றும் நிலை நிற்பதற்கு இதுவும் காரணமாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இசையில் திளைக்கும் இக்கிராமத்தை மீளக் கண்டுபிடித்து தமிழுலகிற்குச் சொல்லியவர் மறைந்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் காக்காதான். மொக்ராலுக்கு வந்து விட்டுப் போன கடைசி தமிழ்ப்படைப்பாளியினுடைய கண்ணி நுனியைப்பற்றிக் கொண்டு மங்க விடாமல் செய்தவர். இக்கிராமத்திற்கான எங்களது ரிஹ்லா குழுவின் வருகையே தோப்பில் காக்காவிலிருந்து எங்களுக்குக் கடத்தப்பட்டு சாத்தியமானதுதான்.

மொக்ராலின் பாடகரும் ஆய்வாளருமான யூசுஃப் கட்டத்தடுக்கா இந்நிகழ்வில் அன்பளிப்பாக வழங்கிய ‘வடக்கின்றெ இஸலுகள் “என்ற நூல் வடக்கு காசர்கோடு,மொக்ரால் புலவர்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலுக்கு தோப்பில் காக்கா அணிந்துரை வழங்கியுள்ளார்.இப்பாடல்களில் நிறைந்து நிற்கும் தமிழ்ச் சொற்களை எங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதால் தமிழ்ச் சொற்களுக்கான பொருளை விளங்க உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் எங்களிடம் அவர் முன் வைத்தார்.

மொக்ராலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தோப்பில் காக்கா பங்கெடுத்துள்ளதை யூசுஃப் கட்டத்தடுக்கா பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழ்ப் பாடல்களின் மீதுள்ள ஈர்ப்பால் நாகூர் ஹனீஃபாவையும் பாட்டுக் கூட்டங்களில் பாடவைத்துள்ளதோடு அவரை இக்கிராமத்திற்கு வரவழைத்து சிறப்பித்ததாகவும் சொன்னார்கள்.

அந்த இரு பெரும் தமிழ் முஸ்லிம் கலைஞர்களின் மொக்ரால் வருகைக்குப் பிறகு மரபையும் கலையையும் தடமொற்றி வந்தது ரிஹ்லா துளுநாடு குழுவாகத்தான் இருக்கும்.

“இது அவசரக் கோலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி. ஒரு நாள் முழுக்கப் பாடினாலும் கொள்ளாத அளவிற்குப் பாடல்கள் உள்ளன. இனியும் வாருங்கள்” என்றவாறு விடையளித்தனர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள்.

முகநூலில் பழகி தொலைபேசியில் மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த மொழிபெயர்ப்பாளர் ஏ.கே.ரியாஸையும் மொக்ராலின் நிமித்தமாக சந்திக்கக்கிட்டிற்று.ரியாஸ் காசர்கோட்டுக்காரன்.தன் ஆர்வத்தில் தமிழ் பயின்று தமிழக,இலங்கை தமிழ்ப் படைப்புக்களை சொந்த விருப்புக்காக மொழியாக்கம் செய்து வருகிறார்.மலையாளம்,கன்னடம் என்ற இரு மொழிகளிலும் மொழியாக்கம் செய்கிறார்.

ரிஹ்லா துளுநாட்டின் இறுதிக்கட்ட செல்கையாக உதுமவில் வசிக்கும் எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டரையும், காசர்கோடு மாலிக் பின் தீனார் பள்ளிவாயிலையும் காண்பது என்ற பயண நிரலின்படி எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டரைக்கான உதுமவிற்குச் சென்றோம்.

எங்களின் வரவைக் கனப்படுத்தும் விதமாக அண்மையில் வெளிவந்த தனது நூலான “பொசங்கடி ஒரு அன்வேஷன ரிப்போர்ட்” ஐ ரஹ்மான் மாஸ்டர் ரிஹ்லா துளுநாடு குழுவினரை வைத்து வெளியிடும் சடங்கொன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பொசங்கடி ஒரு அன்வேஷன ரிப்போர்ட்(பொசங்கடி – ஒரு விசாரணை அறிக்கை) கேரளியரின் புலம் பெயர் வாழ்க்கையின் தாக்கங்களும் விளைவுகளும்தான் இந்நாவலின் மையக்கருத்து. இந்நாவலை எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டரின் நண்பரும் சாஹித்ய அக்கதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளருமான குமரன் உதும வெளியிட எங்கள் அணியின் சார்பாக வரலாற்றுப் பேராசிரியர் ஹஸன் அதனைப் பெற்றுக் கொண்டார்.

வைக்கம் முஹம்மது பஷீரின் குரலில் ஆங்கிலத் துணைத்தலைப்புக்களுடன் கூடிய முப்பத்து மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய ‘பஷீர் தி மேன்‘ என்ற பெயரிலான மலையாள ஆவணப்படமெடுக்கப்பட்டு அரை நூற்றாண்டுகள் ஆகி விட்டன. வைக்கம் முஹம்மது பஷீர் பற்றி முறையான ‘அதிகாரப்பூர்வமான’ ஆவணப்படம் என்று கூடச் சொல்லாம். அதை எடுத்தவர் எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டர். சில வருடங்களுக்கு முன்பு அப்படத்தை வலையொளியில் காண நேர்ந்தது.

https://www.youtube.com/watch?v=8HBlQXzrxEE&t=5s&pp=ygUPYmFzaGVlciB0aGEgbWFu.
https://www.youtube.com/watch?v=8HBlQXzrxEE&t=5s.

அதன் பிறகுதான் இந்த அரிய முயற்சிக்காக எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டருக்கு நன்றி சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். போன வருட தொடக்கத்தில் காசர்கோடு கும்பளாவில் பதிப்பக சந்திப்பொன்றிற்காக போன சமயமும் எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டரை சந்திக்கவியலாமல் போய் விட்டது. அதற்கிடையில் கேரளத்தின் குறுக்கும் நெடுக்குமாக பல பயணங்கள் போயும் மாஸ்டரை சந்திக்கும் வாய்ப்பு கூடவே இல்லை. இறைவன் அந்த சந்தர்ப்பத்தை ரிஹ்லா துளுநாட்டின் பயணத்தில்தான் நடத்த வேண்டும் எனத் தீர்மானித்திருந்திருக்கிறான்.

வைக்கம் முஹம்மது பஷீரை அவருடைய சொந்த உருவத்தில் குரலில் அவரின் பாவனைகளுடன் குறைவின்றி அறிய இந்த ஆவணப்படம் உதவுகிறது.ஆனால் இந்நிறைவிற்கும் குதூகலத்திற்கும் அப்பால் தான் ஏன் எழுத வந்தேன் என்பதற்கு வைக்கம் முஹம்மது பஷீர் கூறும் காரணம், முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாத படைப்பாளிகளுக்கும் இன்றும் உயிருடன் நிற்கும் தலையாய வாக்குமூலமாகும்.அதை நீங்கள் ஆவணப்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்வதுதான் வைக்கம் முஹம்மது பஷீருக்கும், எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டருக்கும் நாம் காட்டும் சிறிய கூட்டொருமை.

பஷீர் த மேன் ஆவணப்படம் எடுக்கப்பட்ட காலகட்டம்,அதன் பின்னணியில் உள்ள செய்திகளை நிகழ்வின் இடைவெளியில் கிடைத்த சில மணித்துளிகளில் பகிர்ந்துக் கொண்டார் எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டர்.

இந்த ஆவணப்படம் எடுக்கும்போது அவருக்கு வயது 22. முறையாக ஒளிப்படக்கலையெல்லாம் கற்கவில்லை. வைக்கம் முஹம்மது பஷீர் மீதான ஆர்வம் மட்டுமே அவரை வழிநடத்திச் சென்றிருக்கிறது.தன் குடும்பத்துப் பெண்களின் நகைகளை வைத்து பணம் திரட்டி ஒளிப்பதிவு வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். கடலுக்கும் பாலைக்கும் சேர்த்தே காற்று பரவுவது போல படப்பிடிப்பு நடக்கும் செய்தியால் பொறாமைக் கொண்ட உள்ளங்கள் கனன்றிருக்கின்றன. படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்து அடுத்தாற் போல வைக்கம் முஹம்மது பஷீரிடமிருந்து “எடோ! உனது கேமிரா மேனின் தகுதியென்ன?” என்ற ரீதியில் கடிதம் வரும். இம்மாதிரி பல இடையூறுகளால் படமெடுக்கத் தொடங்கியதற்கும் வெளியிடுவதற்குமிடையில் பத்து வருடங்கள் மலை போல நின்றிருந்திருக்கின்றன.

ஆவணப்படம் பிரபலம் ஆனவுடன் ஒன்றிய சாஹித்ய அகாதமியினர் அதை வாங்கியிருக்கின்றனர். அவர்கள் கொடுத்த பொருளுதவி ஆவணப்பட உருவாக்கச் செலவை ஈடுகட்டவில்லையென்றாலும் அவர்கள் வாங்கி அங்கீகரித்ததில் ஒரு நிறைவு என்றார் எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டர்.படைப்பாளி கணக்குப் பார்த்தாலும் மிஞ்சுவது ஒன்றுமில்லைதான்.

அறபி மலையாளத்தின் தடங்கள் அர்வியில் இருப்பதையொட்டியும், மலைபார் மஅபர் தொடர்புகளினடிப்படையிலும் பல வருடங்களுக்கு முன்பு எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டரின் தலைமையில் ஒரு குழுவினர் பேருந்தில் காயல்பட்டினம் வந்துள்ளனர்.அந்த பயணம் பற்றிக் கேட்டபோது அதுவொரு நல்ல பட்டறிவாக இல்லை என்ற ஒற்றைச் சொல்லில் முடித்துக் கொண்டார்.

காசர்கோடு மாவட்டத்தில் முந்திரி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மீது வானூர்தி மூலம் தெளிக்கப்பட்ட என்டோசல்ஃபான் நச்சு வேதிப்பொருளினால் உடலும் உயிரும் குலைக்கப்பட்ட மக்களுக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி இழப்பீடு பெற்றுக் கொடுத்தவர் எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டர் என்ற செய்தியையும் இந்நிகழ்வில்தான் கேள்விப்பட்டோம்.

எம்.ஏ.ரஹ்மான மாஸ்டர் இயற்கை ஆர்வலர் என்பதால் பெரிய ஆர்ப்பாட்டங்களின்றி நிற்கிறது அவரது வீடு. தனது வளவை அதற்கேற்ப சோடித்துள்ளார். தலைச்சுற்றல் சிக்கலிருப்பதால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்வதில்லை.ஆனாலும் தொடர்ந்து புத்தகங்களைக் கொண்டு வருவதில் முனைப்புடன் உள்ளார்.

காசர்கோடு மாலிக் பின் தீனார் பள்ளிவாயிலைக் கண்டு விட்டு அவரவர் கூடு நோக்கிக் கிளம்பினர்.

>

Address

Tamizhagam

Telephone

+919962841761

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rihla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share