20/10/2025
உவரி கடற்கரை - திருநெல்வேலி.
நெல்லை சீமையில் ஓர் அழகிய கடற்கரை சுற்றுலாத்தலம்..!
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், உவரி கடற்கரை.. கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது, உவரி எனும் சமுத்திரக்கரை. இங்கு மாதா கோயிலும், சுயம்புலிங்க வடிவில் இருக்கும் சிவபெருமான் கோயிலும் அமைந்துள்ளது. அழகிய கடற்கரையும் உள்ளது. பெரும்பான்மை மக்கள் இந்த பகுதியில் விடுமுறை நாட்களை கடற்கரையில் கழிக்கிறார்கள்.
இந்த இடம் திருச்செந்தூரிலிருந்து 40கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 52கிமீ தொலைவிலும்,திருநெல்வேலியிலிருந்து 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுகமும் செல்வமும் அருளும் சுயம்புலிங்க சுவாமி கோவில்
சிவபெருமான் லிங்கத்திருமேனியாக எழுந்தருளி அருள்புரியும் அற்புதத்தலங்கள் பல உண்டு. அவற்றுள் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் குறிப்பிடத்தக்கது. உலக மக்கள் நலனுக்காகவும், மக்கள் செய்த தவத்தின் பயனாகவும் உவரியில் தானாக தோன்றி அருள் செய்து வருகிறார், சுயம்புலிங்க சுவாமி.
உவரியில் பஞ்சபூதங்கள் ஐந்தும் இணைந்து அவற்றின் மொத்த அம்சமாக உருவாகியுள்ள சுயம்புலிங்கத்தை தரிசிப்பது பெரும்பாக்கியம். கருவறையில் உள்ள சுயம்புலிங்கத்துக்கு, ஐந்து தலை நாகம் படமெடுத்து குடையாக நிற்பதை போல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிவாலயத்தில் ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெற்றாலும், வைகாசி விசாகத்திருவிழாவின் போது சுவாமி மகரமீனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவர்.
ஒருநாள் ஆயர்குலப் பெண்மணி ஒருவர் பால் வியாபாரத்திற்காக செல்லும் போது, கடம்பக்கொடி காலில் தட்டுப்பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பல நாட்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து பால் சிந்தியது. இதனை அவர் கணவரிடம் கூறினார். இதைக்கேட்டு ஆவேசமடைந்த யாதவன், மனைவியை அழைத்துக்கொண்டு பானை உடையும் இடமருகே சென்றான்.
பின்னர் அங்கிருந்த கடம்பக் கொடியை வேகமாக வெட்டினான். அப்போது கடம்பக்கொடியின் வேர் பகுதியில் மறைந்து இருந்த சுயம்புலிங்கத்தின் மீது அரிவாள் வெட்டுப்பட்டு, லிங்கத்தின் தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. இதைக்கண்ட யாதவன் அதிர்ச்சியில் திகைத்தான். தகவல் அறிந்து ஊர் மக்கள் அங்கு வந்து பார்த்து செய்வதறியாது தவித்து நின்றனர்.
அப்போது ஊர் பெரியவர் ஒருவர், சுவாமியின் அருள் வந்து குறி சொல்லத் தொடங்கினார். ‘சிவப்பரம்பொருள் இங்கு லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ரத்தம் வடியும் இடத்தில், சந்தனத்தை அரைத்து பூசினால் ரத்தம் நின்று விடும்’ என்றார். ‘இந்த வனத்தில் சந்தனம் எங்கே கிடைக்கும்?’ என மக்கள் கேட்டனர்.
அதற்கு சுவாமி அருள் வந்தவர், சந்தனமரம் நின்ற இடத்தின் அடையாளத்தை கூறினார். அவர் கூறிய இடத்தில் மக்கள் சென்று பார்த்த போது அங்கே சந்தனமரம் செழிப்பாக வளர்ந்தோங்கி நின்றதை பார்த்தனர். உடனே சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து தயாரித்த சந்தனத்தை ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள்.
உடனடியாக ரத்தம் நின்றுவிட்டது. சிவபெருமான் சுயம்பாக லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மக்கள் உடனே ஓலையில் கூரைவேய்ந்து கோவில் எழுப்பினார்கள். ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் இறைவனை தரிசனம் செய்தால் அம்மாதம் முழுவதும் தரிசனம் செய்த பலனை பெறலாம்.
சுயம்புலிங்க சுவாமி கோவிலில் குறிப்பிட்ட நாட்கள் தங்கியிருந்து வழிபட்டால் வாழ்வு வளமாகும். மக்கட்பேறு, தொழில் மேன்மை, கல்வி ஞானம், மாங்கல்ய பாக்கியம், வேலைவாய்ப்பு உள்பட சகல செல்வமும் அருளும் திருத்தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. உவரியில் சுயம்புலிங்க சுவாமியின் உடனுறை சக்தியாக பிரம்மசக்தியம்மன் திகழ்கின்றாள்.
விநாயகர் சன்னிதி தனியாக உள்ளது. கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கியம்மன், பேச்சியம்மாள், மாடசாமி ஆகிய தேவதைகளுக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. விநாயகர் சன்னிதியின் மேற்கே, சோலைகள் நிறைந்த பகுதியில் புகழ்பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.
இங்கு சாஸ்தாவிற்கு மக்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். இந்த சாஸ்தாவிற்கு தனிப்பெரும் சக்தி உண்டு. நவக்கிரங்களில் தலைவராக விளங்கும் சூரியபகவான் மார்கழி மாதம் முப்பது நாட்களும் சுயம்புலிங்க சுவாமியை வணங்கி மகிழ்கிறார். அந்த காலக்கட்டத்தில் சூரிய ஒளியானது சுயம்புலிங்க சுவாமி மீது விழுகிறது.
அவருக்கு அபிஷேகம் செய்வதை போன்று விழுந்து தனக்கு பெருமை சேர்த்துக்கொள்கிறது. இந்த சிறப்பு சுயம்புலிங்க சுவாமி ஆலயத்திற்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பாகும். புட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவனின் கதையை திருவிளையாடல் புராணம் விவரித்து கூறும். ஆனால் இங்கே ஒரு பாமர பக்தனின் வாழ்க்கையில் சுயம்புலிங்க சுவாமி நிகழ்த்திய அருளாடல் சுவாமியின் மகிமையை உலகிற்கு பறைசாற்றும்.
அந்த பக்தனின் பெயர் சொக்கலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர். அவருடைய முதுகு கூன் வளைந்து அமைந்து விட்டது. இதனால் அவர் இயற்பெயர் மறைந்து கூனாசேரி என்றே அழைக்கப்பட்டார். எவ்வளவோ மருத்துவ சிகிச்சை செய்தும், பல்வேறு ஆலயங்களுக்கு சென்றுவேண்டுதல்கள் செய்தும் பலனில்லை.
சுயம்பு லிங்க சுவாமியின் மகிமையும், பெருமையையும் பற்றி கேள்விபட்டார். அவரது பாதமே சரணாகதி என்று நினைத்து உவரி நோக்கி நடந்து வந்து, இறைவன் முன் கண்ணீர் விட்டு அழுது, தனது முதுகு கூன் நிமிர வேண்டினார். அன்று முதல் கோவிலில் தங்கியிருந்து கடலில் நீராடி 41 நாட்கள் விரதம் இருக்க தொடங்கினார்.
4 வேளை பூஜை செய்து இறைவனை தரிசனம் செய்தார். கூன் நிமிர வேண்டும். கூன் நிமிர்ந்த உடன் பால்குடம் எடுத்து சுயம்புலிங்க சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்று வேண்டி விரதம் இருந்தார். 40நாட்கள் விரதம் இருந்து முடித்தார். கூன் நிமிர்வதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.
அன்று இரவு இறைவா நாளையுடன் விரதம் முடிகிறது. நான் என்ன தவறு செய்து இருந்தாலும் மன்னியுங்கள். எனக்கு கூன் நிமிர அருள் செய்யுங்கள் என்று முறையிட்டு வேண்டினார். பின்னர் தூங்கி விட்டார். மறுநாள் பொழுது புலர்ந்தது கடலில் சென்று நீராடிய சொக்கலிங்கம், சுயம்புலிங்கத்தை தொழ தயாரானார்.
அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. சொக்கலிங்கத்தின் உடல் எந்த பாரமுமின்றி சாதாரணமாக நிமிர்ந்து நிற்க முடிந்தது. இதைக்கண்ட அவர் ஆனந்தத்தில் கூத்தாடினார். சந்தோஷம் தாங்காமல் சுயம்புலிங்கம் முன் மண்டியிட்டு வணங்கினார். இறைவா! உன் கருணையே கருணை! எனக்கூறியவாறே ஆனந்த கண்ணீர் விட்டு இறைவன் புகழ்பாடினார்.
தனது வேண்டுதல் படி ஆண்டவனுக்கு பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்தார். ஆலயத்திற்கு வந்து தங்கி வழிபடும் பக்தர்களுக்கு ஒரு சத்திரம் கட்டிக்கொடுத்தார். பிரசித்திப்பெற்ற ஆலயங்கள் பலவற்றுள் பல நிலைகளை கொண்ட ராஜகோபுரங்கள் வானளாவ உயர்ந்தோங்கி நிற்பதை காணலாம்.
ஆனால் அவை எல்லாம் ஒரு பகுதி கருங்கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டவை. கோவில்களில் அஸ்திவாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு இருக்கும். அதற்குமேல் செங்கலை பயன்படுத்தி மேல் தளங்கள் உருவாகும். கருங்கல்லால் கோவிலுக்கு கட்டிடம் கட்டினால் அதற்குரிய பலனே தனி.
அவ்வாறு செய்தால் கயிலாயம் நமக்கு நிரந்தர இடம் தரும் என்று புராணங்கள் கூறுகிறது. தமிழ்நாட்டில் கருங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட ஒரு சில கோவில்கள் உண்டு. தஞ்சை பெரிய கோவில் ஒரு பகுதி மட்டும், மகாபலிபுரம் கடற்கரை கோவில் கோபுரத்தில் ஒரு நிலை மட்டும், சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் கோபுரத்தில் ஒரு நிலை மட்டும் கருங்கல்லால் ஆனவை.
ஆனால் எங்கும் இல்லாத வகையில், உவரி சுயம்புலிங்க கோவிலில் 9 நிலைகளுடன், 108 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்படுகிறது. இது முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்படுவது தான் விசேஷம். ஒவ்வொரு நிலையின் துவாரத்தின் முன்புறம், பின்புறத்தில் 2 துவார பாலகர் சிலைகள் அமைந்து இருக்கும்.
இவை தவிர கோபுரத்தின் அடிப்பகுதியில் 4 துவார பாலகர் சிலைகள் அமைந்து இருக்கும். இவ்வாறு மொத்தம் 36 துவார பாலகர் சிலைகள், 4 பூத கணங்கள், 8 நந்திகள், சுயம்புலிங்க சுவாமி இவை தவிர பரமசிவன், பார்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் தெய்வத்திருமேனிகளும் கோபுரத்தில் இடம் பெறும் வகையில் கோபுரம் கட்டப்பட்டு வருகிறது.
பல்வேறு சிறப்பும் பெருமையும் வாய்ந்த உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் வங்கக்கடலில் தென்கோடியில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து கிழக்கே 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
உவரி அந்தோணியார் ஆலயம்
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அமைந்துள்ளது உவரி அந்தோணியார் ஆலயம். இது பாரத பதுவை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம், மாவட்டத் தலைநகர் திருநெல்வேலியிலிருந்து 70 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 50கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களின் நம்பிக்கையின்படி, 450 வருடங்களுக்கு முன்னர் உவரி அருகே வந்த ஒரு போர்ச்சுகீசிய கப்பல் கரை ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உவரி அந்தோணியார் ஆலயம்
கப்பலில் உள்ளவர்கள் காலாரா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவே, அங்கிருந்த தச்சர் மரத்தால் ஆன அந்தோணியார் உருவத்தை செய்தாராம். பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட காலாரா குணமாகிவிட்டதாக உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. பின்னர் மாலுமிகள் இந்த இடத்தில் அந்தோணியாரின் சிலையை வைத்ததாகவும், கிராமத்தினர் ஆலயத்தை கட்டியதாகவும் கூறப்படுகிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்செந்தூர், நாகர்கோவில். விமான நிலையம் தூத்துக்குடி.
உவரி கப்பல் மாதா ஆலயம்
கப்பல் வடிவிலான ஆலயம் ஒன்று உவரி அந்தோணியார் ஆலயத்திலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கப்பல் மாதா ஆலயம் அவர் செல்வமாதா என்று அழைக்கப்படுகிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்செந்தூர், நாகர்கோவில். விமான நிலையம் தூத்துக்குடி.