15/11/2019
பகுதி 2:
#காசி_ஷேத்ராடனம் (யாத்திரை)
#காசி_இந்துக்களின்_புனிதத்_தலம்
காசி (பழைய) நகரமே பலப்பல சிறிய சந்துகளைக் கொண்ட நகரமாக இருக்கிறது. புதியவர்கள் தக்க துணையின்றி எங்கும் செல்வது என்பது தற்போது நாம் பத்திரிகைகளில் பார்க்கும் சக்கர வியூக விளையாட்டை (maize game) விட மிகவும் கடினம்.
இரண்டு ஆட்களே நடக்கக்கூடிய சந்துகளில், எதிரில் இருக்கும் மாடுகளை நாம் சமாளித்துக் கொண்டு, சைக்கிள்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கும் இடம் கொடுத்து நடப்பதை விவரிக்க இயலாது. இந்த சந்துகளில் இரு சக்கர ஓட்டிகளின் சாமர்த்தியம் சர்க்கஸ் ஓட்டிகளுக்கு சமம்.
அதனினும் கடினம் அந்த எண்ணற்ற சந்துகளை பராமிரிக்கும் வேலை; எங்கு சென்றாலும் ஒரே விதமான நாற்றம். திறந்திருக்கும் கழிவுச் சாக்கடைகள், ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் மாடுகளின் கழிவுகள். இந்த கோமியத்தின் வீரியம்தான் அங்கு உற்பத்தியாகும் நோய் கிருதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்பது என் ஊகம்.
ஆனாலும், நகரை சுத்தமாக வைத்திருக்க காசி நகராட்சியின் பங்கை பாராட்டியே ஆக வேண்டும்.
இன்றே இப்படி என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த காசி நகரம் எப்படி இருந்திருக்கும்?
ஒரு நாள் #ஆதி_சங்கரர் காசியில் கங்கையில் நீராடிவிட்டு தன் சீடர்களுடன் குறுகிய பாதை ஒன்றில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் உடலெங்கும் சாம்பல் பூசிய புலையன் ஒருவன் நாய்களோடு வந்துகொண்டிருந்தான். சங்கரரின் சீடர்கள், புலையனை ஒதுங்கி வழிவிடச் சொன்னார்கள். சங்கரரும் புலையயனே விலகிப் போ விலகிப் போ என்றார்.
அதற்கு புலையன்கூறியது :-
துறவியே விலகிப்போ என்று கூறியது இந்த உடலையா? அப்படியென்றால், என்னுடைய உடலும் சோற்றால் ஆன ஒரு ஜடம்,
அதே போல உன்னுடைய உடலும் சோற்றால் ஆன ஒரு ஜடம் ஒரு ஜடத்திலிருந்து இன்னொரு ஜடம் எப்படி விலகும்?
சரி ஒருவேளை விலகிப் போ என்று கூறியது இந்த உடலுக்குள் இருக்கும் சைதன்யத்தையா? சைதன்யமான ஆத்மா எனக்குள்ளும், உங்களுக்குள்ளும், எங்கும் பரவியுள்ளதே; அது எப்படி விலகிப் போக முடியும்?
எனவே விலகிப் போ என்று எதைக் கூறினீர்கள்?
கதிரவனின் பிம்பம் கங்கையிலும் விழுகிறது, சாக்கடையிலும் விழுகிறது, இதனால் கதிரவனுக்கு இழுக்கு ஏற்படுவது இல்லையே? மேலும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயம் மண் பானைக்குள் இருந்தாலும் சரி, பொன் பானைக்குள் இருந்தாலும் சரி, ஆகாயம் வேறுபடுவதில்லையே?
இந்த அறிவை நீர் அறிந்திருக்கக்கூடுமே; அப்படி இருந்தும் ஏன் உங்களையும் என்னையும் பேதப்படுத்தி விலகிப் போ போக சொல்வது ஏன் என்றான்.
அந்நொடியிலேயே அப்புலையனிடம்
“”அத்வைத அறிவை போதித்த தாங்களே என் குரு” என்று காலில் வீழ்ந்து வணங்கி
“மனீஷா பஞ்சகம்” எனும் படைப்பை அருளினார்.
உபநிஷத்துக்களில் முதன்மையாக விளக்கப்படும் அத்வைத அறிவை, இந்த ஐந்து சுலோகங்கள் மூலமாகப் பல்வேறு வழிகளில் சாரமாக விளக்கியுள்ளார்.
முதல் இரண்டு சுலோகங்களில், ஜீவ பிரம்ம ஐக்கியம் பற்றி விளக்கியுள்ளார்.
மூன்றாவது சுலோகத்தில் அத்வைத அறிவை அடைவதற்குப் பின்பற்ற வேண்டிய வழிகளையும், அதனால் கிடக்கும் பலன்களையும் விளக்கியுள்ளார். நான்காவது சுலோகத்தில் ஆத்மா அறிவு சொரூபமானது என்றும், அதை ஏன் புற அறிவினால் அறிய முடியாது என்றும் விளக்கியுள்ளார்.
ஐந்தாவது சுலோகத்தில் அத்வைத அறிவின் பலன் ஆத்மாவை ஆனந்தம் என அறிவதே என்று விளக்கியுள்ளார். ஒவ்வொரு சுலோகத்திலும் தன்னுடைய நிச்சயித்த அறிவை நிலைநாட்டியுள்ளார்: “
காசியில் ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைக்க பெற்றார்.
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி, மன்னா! என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார்.
கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. புலவர்கள் எல்லாம் கூடியிருக்க, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது.
பின்னர் குமரகுருபரர் காசி சென்று விஸ்வநாதரை புகழ்ந்து பாடினார். ஒரே நாளில் இந்துஸ்தானி கற்று அங்கியிருந்த சுல்தானிடம் பேசி, அனுமதி பெற்று கேதார் ஆலயத்தின் அருகே குமாரசுவாமி மடம் என்ற சைவ மடத்தை நிறுவினார்.
இப்போதும் காசியில் இந்த மடம் சமயப்பணி செய்து வருகிறது.
குமரகுருபரர் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், சிதம்பரச் செய்யுட் கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை என இன்னும் பற்பல நூல்களால் தமிழன்னையை அலங்கரித்த பெருமகன் அவர்.
காசியில் ஒளரங்கசீப்பின் மூத்த சகோதரரான தாரா ஷுகோ என்ற மன்னர்முன் சிங்கத்தின் மேல் ஏறிச் சென்று அந்த சுல்தானை வியக்க வைத்து, தாம் காசியில் நிறுவிய இந்து மடத்திற்கு நிலத்தை தானமாகப் பெற்றவர்.
இவர் காசியில் இந்துஸ்தானி மொழியில் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்டுக் கவரப்பட்டுத்தான் துளசிதாசர் இந்தியில் ராமாயணம் எழுதும் உத்வேகம் பெற்றார்.
இப்படிப்பட்ட பெருமைகளுக்குறியது காசி நகரம்.
#ராம்_ராம்
Compiled by Shri Santhanam Retired Thasilthar Coimbatore