20/04/2022
வருமானங்கள் கூடிவிட்டன!
மனங்கள் சுருங்கிவிட்டன!
வளமுள்ள கிராமத்தை ஒன்றிணைந்து வளப்படுத்துவோம் "
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
#கல்லொழுவை SAEED AHMED LOOTAH கல்லூரி என்ற வளம் யாரிடம் உள்ளது. எதற்காக பயன்படுத்துகிறார்கள்,
நிதி மையமாக வைத்து வழி நடத்தப்படுகிறதா? அதில் கற்பிக்கும் ஆசிரியர் தரமான ஆசிரியர்களா? சரியான தலைமைத்துவத்தின் கீழ் அது இயங்குகின்றதா? என்பன பல கேள்விகள் உள்ளன. முதன்மையாக இந்த கேள்விகளை கல்லொழுவை மக்களிடம் முன்வைக்கிறோம்.
கல்லொழுவை கிராமத்திலிருந்து சுமார் 270 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியூர்களில் ஆங்கில கல்வியை கற்று வருகிறார்கள். இம் மாணவர்கள் எதற்காக வர்த்தக மொழியான ஆங்கில மொழியை தெரிவு செய்து வெளி மாவட்டங்களுக்கு சென்று கற்க வேண்டும். பல சிரமங்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் சென்று கற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லொழுவை கிராமத்தில் மிக பெரும் ஒரு பௌதீக வளத்தை வைத்துக் கொண்டு எமது பிள்ளைகளை பக்கத்து கிராமங்களுக்கு கல்வியைத் தொடர்வதற்காக அனுப்பி வைக்கிறோம். ஆம் வர்த்தக மொழியை கற்பதற்கான காரணத்தை அறிந்து நவீன காலத்தில் ஆங்கிலக் கல்வியின் இன்றியமையாமை மிக மிக ஆழமாக உணரப்படுகின்றது என்பதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆங்கில மொழியின் திறனை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதை இதில் தெளிவாக உணர முடிகின்றது.
இன்று சர்வதேச மொழியாக மதிக்கப்படும் ஆங்கில மொழியின் செல்வாக்கு கல்வி நிர்வாக சேவைகளில் பாரியளவு செல்வாக்கு செலுத்துகின்றது. விரும்பியோ விரும்பாமலே ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற வேண்டிய நிலமை இன்று காணப்படுகின்றது.
எல்லா ஊர்களிலும் ஆங்கிலம் ஏதோ ஒருவகையில் கற்பிக்கப்பட்டும் கையாளப்பட்டும் வருகின்றது. ஆங்கில மொழியானது இன்றைய உலகில் உலகத்தின் பொது மொழியாக கொள்ளப்படுகின்றது. இத்தகைய ஆங்கில மொழியை நாம் கற்க வேண்டியதன் அவசியத்தை ஆராய்ந்து பார்ப்பது சாலச் சிறந்தது.
இன்றைய கல்வி சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றது. எனவே நவீன கல்வியில் ஆங்கிலம் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மாணவர்களின் தொடர்பாடல் திறனை அதிகரிக்கவும் ஒரு ஆணிவேராக ஆங்கிலம் என்று காணப்படுகின்றது. உள்ளுர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நண்பர்களோடு உரையாடுவதற்கும் முறைசார், முறைசாரா வேலைகளை செவ்வனே செய்து முடிக்கவும் ஒரு மொழி ஊடகமாக ஆங்கிலம் திகழ்கின்றது.
எனவே ஆங்கில மொழியை கற்பதற்கு எமது கிராமத்தில் வளத்தை வைத்துக் கொண்டு ஏன் வெளியே சென்று கற்க வேண்டும். ஏன் வளம் இல்லையா? பணம் இல்லையா ? எமக்குள் ஒற்றுமை இல்லையா? என கேள்விகள் உள்ள போதும் எமது கிராமத்தில் நாம் மேற்கூறிய அனைத்தும் இருந்தும் முயற்சி இல்லாமல் இருக்கிறோம்.
காலத்தையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். டிஜிட்டல் உலகில் பல கிராமங்களும் முன்னேறி சென்றிருக்கையில் எமது கிராம் ஒரு மயானம் போல காட்சி அளிப்பதே கவலையளிக்கிறது.
எமது கிராமம் இந்நிலைக்கு செல்வதற்கான காரணத்தார்கள் யார் ? பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் ?
அரசாங்கமா? பாடசாலை நிர்வாகமா? அல்லது பள்ளிவாசல் நிர்வாகமா?
இல்லை... எமது கிராமத்தில் வசிக்கும் அனைத்து பெற்றோர்களும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்பதை மறக்க வேண்டாம். பொறுப்புக்களைத் தட்டிக் கழித்தல் அல்லது அவற்றில் இருந்து ஒதுங்கியிருத்தல் போன்ற சுயநலச் சிந்தனைகள் தலைதூக்கியதன் விளைவே இன்று நாம் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கு அடிப்படைக் காரணங்கள்
கல்லொழுவை கிராமத்திற்கு சொந்தமாக ஒரு வளம் இருந்தும், அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்காமல் காலத்தையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
கல்லொழுவை வசிக்கும் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மன உறுதியுடனும், நம்பிக்கையுடனும் எமது பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுப்பதற்கும், அறிவார்ந்த புத்திஜீவிகளை உருவாக்குவதற்கும் வரும் காலங்களில் முயற்சிகளில் ஈடுபடுவோம்.